கல்விப் பெருந்திட்டம் தாய்மொழிக் கல்விக்கு ஆபத்தானது

blueprint educationசுதந்திர மலேசியாவில் தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகளை அழித்து விட்டு மலாய் மொழியில் மட்டுமே கற்றலையும்  கற்பித்தலையும் நிலைநிறுத்துவதற்கான தேசியப்பள்ளி உருவாக்கப்படும் திட்டம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே 1956 ஆம் ஆண்டில் அன்றைய கல்வி அமைச்சராக இருந்த அப்துல் ரசாக் வெளியிட்டார் (ரசாக் அறிக்கை).

அந்த தேசியப்பள்ளியில் மலாய் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே போதனை மொழியாக இருக்கும். இத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நாட்டுப்பற்று அற்றவர்கள் எனக் கருதப்படுவர் என்றும் கூறப்பட்டது.

அப்துல் ரசாக்கின் திட்டம்

ஆனால், அப்துல் ரசாக்கின் இத்திட்டம் சட்டமாக்கப்படாமல் தடுக்கப்பட்டது. இந்நாட்டின் சீன சமூகத்தினரின் தீவிர எதிர்ப்பும் இந்திய சமூகத்தினரின் ஓரளவு எதிர்ப்பும் இச்சட்ட மசோதாவில் மாற்றங்கள் செய்வதற்கு வழிவகுத்தது.

p3 razakஅப்துல் ரசாக் விரும்பிய இறுதிக் கொள்கையான ஒரே மொழி தேசியப்பள்ளியை அமைப்பதற்கு வகை செய்யும் சட்டம் கைவிடப்பட்டாலும், அக்கொள்கை இன்று வரையில் கைவிடப்படவில்லை.

இவ்வாண்டு செப்டெம்பர் 6 இல், கல்வி அமைச்சர் முகைதின் யாசின் வெளியிட்ட மலேசிய கல்விப் பெருந்திட்டம் 2013-2025 அப்துல் ரசாக்கின் 1956 ஆம் ஆண்டு திட்டத்திற்கு புத்துயிர் அளித்து அதனை அமல்படுத்துவதற்கான வழிமுறைகளை கொண்டுள்ளது.

288 பக்கங்களைக் கொண்ட அந்தப் பெருந்திட்டத்தில் இங்கும் அங்குமாகக் கூறப்பட்டுள்ள தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகள் சம்பந்தப்பட்ட விபரங்கள் மற்றும் பரிந்துரைகள் மூன்று அல்லது நான்கு பக்கங்களுக்கு மேல் போகாது. அதுவும் தாய் மொழிப்பள்ளிகளைப் பற்றி மேலோட்டமாகவே கூறப்பட்டுள்ளது.

தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் மேம்பாடு பற்றி அதில் எந்த தகவலும் இல்லை. அது பெற்றோர்கள் விரும்பினால் கற்கலாம் என்ற வகையில் அயல் மொழிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தேசியப்பள்ளி பெற்றோர்களின் முதல் தேர்வு 

DSC_3507தேசியப்பள்ளிகள் பெற்றோர்களின் முதல் தேர்வாக இருக்கும். அதனைக் கல்வி அமைச்சு உறுதி செய்யும் என்று கூறப்பட்டுள்ள அக்கல்விப் பெருந்திட்டத்தில் நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட கருத்துப் பரிமாற்ற கூட்டங்களில் பங்கேற்ற மக்களில் பெரும்பான்மையினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தற்போதைய தமிழ் மற்றும் சீனப்பள்ளி அமைவுமுறை நிலைநிறுத்தப்படும் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. இவை அவற்றின் தனித்தன்மைகளோடு நிலைநிறுத்தப்படுமா என்பது ஒரு முக்கியமான கேள்வி.

கல்வி அமைச்சர் வெளியிட்ட அப்பெருந்திட்டத்தில் மலாய் முதல் மொழியாகவும் ஆங்கிலம் இரண்டாவது மொழியாகவும் இருக்கும். இறுதியில், தமிழும் சீனமும் அரேபிய, ஃபிரன்ச் போன்ற விருப்பத்தேர்வு (optional) பாட மொழிகளாக இருக்கும். இறுதியில் என்னவாகும்?

DSC_3457இப்பெருந்திட்டம் இந்நாட்டு தமிழ் மற்றும் சீனமொழிக் கல்வி ஆர்வலர்களிடம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்மொழிப்பள்ளிகள் தற்காப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டைக் கொண்ட டோங் ஸோங் என்ற சீன அமைப்பும் தமிழ் அறவாரியமும் முதல் கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

தமிழ்ப்பள்ளிகள் இக்கல்விப் பெருந்திட்டத்தினால் பாதிக்கப்படும் என்பதையும் அதற்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்யும் நோக்கத்தில் தமிழ் அறவாரியம் கடந்த சனிக்கிழமை பெட்டாலிங் ஜெயா சிவிக் செண்டரில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

“மலேசிய கல்விப் பெருந்திட்டத்தின் விளிம்பில் தமிழ்ப்பள்ளியின் நிலை” என்ற அக்கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சியில் டோங் ஸோங் அமைப்பின் ஆலோசகர் இங்யோ இன் இங்யீ பங்கேற்றார்.

பிற்பகல் மணி 2.30 க்கு தொடங்கிய அக்கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சியில் 80 ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமாரும் ஒருவர்.

இந்நிகழ்ச்சியை முனைவர் ஆறு. நாகப்பன் வழிநடத்தினார். தமிழ்ப்பள்ளியின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்ற அச்சத்தில் நாம் 1956 லிருந்து இன்று வரையில் வாழ்ந்து வருகிறோம். இதற்கு தீர்வு எப்போது? அதனைக் காண நாம் இங்கு கூடியுள்ளோம் என்றாரவர்.

Pathiஇந்நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றிய தமிழ் அறவாரியத்தின் தலைவர் சி.பசுபதி கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள மலேசிய கல்விப் பெருந்திட்டம் குறித்து தமிழ் அறவாரியம் தொடக்கத்திலிருந்தே ஈடுபாடு கொண்டிருந்தது. தமிழ் அறவாரியம் ஈடுபாடுள்ள தமிழ் ஆர்வலர்களுடன் சந்திப்புக் கூட்டங்கள் நடத்தி தமிழ்க் கல்வி வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த முன்மொழிதல்களை கல்வி அமைச்சிடம் தாக்கல் செய்திருந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.

தாய்மொழிக் கல்வி தொடர்வதை உறுதிப்படுத்துவதற்கு நாம் தொடர்ந்து நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் டோங் ஸோங் அமைப்பும் நம்முடன் இணைந்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்று கூறிய பசுபதி, தமிழ் ஆர்வலர்களும் தமிழர் அமைப்புகளும்  இதற்கு ஒத்துழைப்பும் ஆதரவும் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சீனர்களின் போராட்டம்

இந்நாட்டில் சீனமொழிக் கல்வியை தற்காத்து அதனை வளர்த்து மேம்படுத்துவதற்கு சீன சமூகம் மேற்கொண்ட போராட்டங்களை சுருக்கமாக டோங் ஸோங் ஆலோசகர் கூறினார்.

சீன சமூகத்தினரின் போராட்டம் 1956 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரையில் தொடர்கிறது என்று கூறிய இங்யோ, தாய்மொழிக் கல்விக்கான போராட்டத்தை டோங் ஸோங் தீவிரப்படுத்தியுள்ளது. அவற்றின் ஓர் அங்கமாக ஒரு மில்லியன் கையெழுத்து திரட்டும் நடவடிக்கையில் அது இப்போது இறங்கியுள்ளது. இதற்கு பெரும் அளவில் ஆதரவு கிடைத்துள்ளது என்று அவர் கூறினார். இந்நடவடிக்கைக்கு இந்தியர்களின் ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்தார். திரட்டப்பட்ட கையெழுத்துகள் பிரதமர் நஜிப்புக்கும் யுனெஸ்கோவுக்கும் அனுப்பப்படும் என்றார்.

தமிழ் அறவாரியம் தாய்மொழிக் கல்வி தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

தாய்மொழிக் கல்வி தற்காப்புக்கு மேலும் வலுவூட்ட வேண்டும் என்பதை வலியுறுத்திய இங்யோ தமிழ் அறவாரியமும் டோங் ஸோங்கும் ஒரு கூட்டு நடவடிக்கை மன்றம் அமைத்து நமது போராட்டத்தை ஒருமுகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தமிழ்ப்பள்ளிகள் பாதிப்படையும்

K. Arumugam_suaram“கல்விப் பெருந்திட்டம் 2013-2025: தமிழ்ப்பள்ளிகள் பாதிப்படையுமா?” என்ற தலைப்பில் உரையாற்றிய தமிழ் அறவாரியத்தின் ஆலோசகரும் சுவாராம் என்ற மனித உரிமைக் கழகத்தின் தலைவருமான கா. ஆறுமுகம், தாய்மொழிக் கல்வி, அதன் மகத்துவம், முக்கியத்துவம், அதனைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக  உலகளவில் எடுத்துக்கொள்ளப்பட்ட நடவடிக்களை விபரமாக விளக்கியதோடு இந்நாட்டில் தாய்மொழிக் கல்விக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளையும் அவர் பட்டியலிட்டார்.

மேலும், மலேசிய கல்விப் பெருந்திட்டத்தில் கூறப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளைச் சுட்டிக் காட்டிய அவர், அவை அனைத்தும் தேசியப்பள்ளியை மேம்படுத்தவும் தாய்மொழிப்பள்ளிகளை சீரழிக்கவும் வரையப்பட்டவை என்றார்.

தாய்மொழிப்பள்ளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தோடு வரையப்பட்டுள்ள இந்திட்டத்தை நாம் கூர்ந்து கவனித்து சரியான நடவடிக்கை எடுக்க கீழ்க்கண்டவற்றை செயல்படுத்த வேண்டும் என்றார்:

  • கல்விப் பெருந்திட்டத்தை நன்கு புரிந்து கொண்டு அதனைக் கண்காணிக்க வேண்டும்.
  • தமிழ்ப்பள்ளிகளின் தனித்தன்மைகளை அரித்து, சிதைக்கும் எந்த ஒரு முயற்சியையும் ஏற்கமறுத்து போராட வேண்டும்.
  • தமிழ்ப்பள்ளியின் அமைவுமுறை – தமிழ் மொழி, பாடத்திட்டம், பயிற்சிகள் போன்றவை – மேம்பாடுகள் குறித்து விளக்கம் பெற வேண்டும்.
  • நமது முயற்சிகளை சீனப்பள்ளி அமைவுமுறையோடு இணைத்து வலுப்படுத்த வேண்டும்.
  • தமிழ்ப்பள்ளி அமைவுமுறை மீதான இடைவிடாத கண்காணிப்பை கொண்டிருப்பதோடு எதிர்விளைவுகளையும் அறிந்திருக்க வேண்டும்.

DSC_3526தாய்மொழிப்பள்ளிகளின் பாதுகாப்பையும் மேம்பாட்டையும் கண்காணித்து உறுதிப்படுத்துவதற்கு தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகள் ஒரு கூட்டு நடவடிக்கை மன்றம் வேண்டும் ஆலோசனையை வரவேற்ற அவர், அதற்கு ஒரு பட்டையம் வரையப்பட வேண்டும் என்றார்.

இதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கும், கல்விப் பெருந்திட்டம் குறித்த தகவல்களை பரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தேவையான செயல்பாடுகளை வகுப்பதற்கு சம்பந்தப்பட்டவர்களின் சந்திப்பு ஒன்றுக்கு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கா. ஆறுமுகம் மேலும் கூறினார்.

 மலாயா மலாய்க்காரர்களுக்கே

Ji-Wi-Kathaiahமலாயா மலாய்க்காரர்களுக்கே என்று இந்நாட்டின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் கூறியிருந்ததை நினைவுகூர்ந்த ஜீவி காத்தையா, 1956 இல் கல்வி அமைச்சர் அப்துல் ரசாக் அறிமுகப்படுத்த முயன்ற ரசாக் அறிக்கை 1956 க்கு இப்போது மலேசிய கல்விப் பெருந்திட்டம் 2013-2025 இன் வழி புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்நாட்டின் ஒவ்வொரு கல்வி அமைச்சரும் இதே தாய்மொழி ஒழிப்புக் கொள்கையை பல்வேறு வழிகளில் பின்பற்றி வந்துள்ளனர் என்ற அவர், பிரதமர் நஜிப்பும் அதற்கு ஆதரவு அளித்துள்ளதைச் சுட்டிக் காட்டினார்.

இப்புதிய கல்விப் பெருந்திட்டத்தின் வழி தாய்மொழிப்பள்ளிகளுக்கு சமாதி கட்ட வழிவகுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஒரு தேசிய கல்வித் திட்டமல்ல. இது தாய்மொழிப்பள்ளிகளை முதலில் உருமாற்றி ஒழிக்க வேண்டும் என்ற அம்னோவின் இறுதிக் குறிக்கோளை அடைவதற்கு பாரிசான் நேசனல் தீட்டியுள்ள திட்டம்.

சட்டதிற்கு முரணானது

தாய்மொழிப்பள்ளிகள் அகற்றப்படுவது நாட்டின் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது. அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 152 மற்றும் 12 ஆகியவற்றுக்கு  முரணானது என்பதை மறைத்து கலந்துரையாடல்கள் வழி தாய்மொழிக் கல்வி குறித்து மக்கள் எடுக்கும் முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ஒரு வழிமுறையை இத்திட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இது ஓர் ஆபத்தமான வழிமுறை. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதற்காக தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளி கூட்டு நடவடிக்கை குழு அமைத்து செயல்பட வேண்டும் என்றாரவர்.

அப்துல் ரசாக் அறிக்கை 1956 இந்திய சீன மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. முகைதின் யாசினின் மலேசிய கல்விப் பெருந்திட்டம் 2013-2025 இதற்கு விதிவிலக்காக இருக்க வேண்டுமா என்று அவர் வினவினார்.

கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தவர்களில் பெரும்பாலானோர் இப்புதிய கல்விப் பெருந்திட்டம் குறித்து விளக்கமான கையேடுகள் தயாரித்து மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

தமிழ் மற்றும் சீனமொழி தற்காப்பு கூட்டு நடவடிக்கை உடனடியாக அமைக்க வேண்டும் என்பதற்கு அவர்கள் முழு ஆதரவு தெரிவித்தனர்.

இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு ஒரு கூட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி மத்தியில் நடத்தப்படுவதற்கு இணக்கம் காணப்பட்டது.