சமுதாயம் உயர என்ன செய்யலாம்? கி.சீலதாஸ்

forwardபகுதி 3. பொதுவாகவே,  இன்றைய   இந்தியர்களின்  நிலை  என்ன?  எப்படியாவது   முன்னுக்கு   வரவேண்டும்.  வரவேற்க   வேண்டிய,  உத்தமமான   உற்சாகம்.  அந்த  உற்சாகம்   எதை   அடிப்படையாகக்   கொண்டிருக்கிறது  என்பதை   நினைத்துப்   பார்த்தால்,  எப்படியாவது  முன்னுக்கு  வரவேண்டும்  என்கின்ற  வெறியே  தவிர  வேறொன்றுமில்லை.  முன்னுக்கு   வரவேண்டும், நல்லா  சம்பாதிக்க   வேண்டுமென்கிற   நோக்கம்,  ஆவல், அவற்றை  அடைவதற்கான   உற்சாகம்  யாவும்   ஏற்புடையனவையே.

ஆனால்  அது  அடையும் முறைதான்   பெரும்  கேள்வி  குறியாக   இருக்கிறது. இந்த  “அடையும் முறையை”  சற்று  ஆழமாக  ஆராய்ந்து  பார்த்தால்  அதை  கடைபிடிப்பவர்களின்   வாழ்க்கையில்   எந்தவொரு  நிம்மதியையும்   காணமுடியவில்லை    என்பது  மட்டுமல்ல  தரமான  வாழ்க்கையையும்  அவர்களால்   அனுபவிக்கமுடியவில்லை.  காரணம்,  அவர்கள்  எண்ணமெல்லாம்   வருமானத்தைப்  பற்றியதாகும்,  வாழ்க்கைத்  தரத்தைப்  பற்றியது  அல்ல.

இந்தியர்களை  ராட்சர்கள்   போல்  பிற   இனத்தவர்கள்   நினைக்கிறார்கள்,  அஞ்சுகிறார்கள்   என்றால்   அதுவும்  உண்மை. இன்று   தமிழர்களை (இந்தியர்கள்)  மயக்கி   ஒரு  தவறானப்   பாதையில்   இட்டுச்   செல்வது   என்ன?   எடுத்த  எடுப்பிலே   தமிழ் சினிமா  என்கிறார்கள் – காரணம்  அதில்   நிறைய  வன்முறை   இருக்கிறதாம்.  பிறமொழி   திரைப்படங்களில்   வன்முறைக்கு   முதலிடம்  கொடுக்கப்படவில்லையா?  உண்டு.

பிற இனத்தவர்கள்   திரைப்படங்களைப்   பொழுது   போக்காக  நினைக்கிறார்கள்.  நம்மவர்களோ  சினிமாதான்  வாழ்வின்  மூச்சு   என்று   நினைத்து   வாழ்கிறார்கள்.  இது   தவிர்க்கப்பட  வேண்டும்.   வாழ்க்கையில்   முன்னேற   வேண்டுமானால்   முதலில்   எது   கற்பனை,  எது  உண்மை  என்பதை   அறிந்து  கொள்ளும்  திறனை   வளர்த்துக்   கொள்ளவேண்டும்.  சமூக  இயக்கங்கள்   இதை   உணர்த்தும்  காரியங்களில்  இறங்கவேண்டும்.

Vijay fightவன்செயல்   கலாச்சாரம்   பாழானது,  ஆபத்தானது,  சமூகத்தையே   அழித்துவிடும்  என்பதை   உணர  வேண்டும்.  உணர்த்த   வேண்டும்.

தமிழர்களின்   எதிர்காலம்,  பொதுவாக  இந்தியர்களின்   எதிர்காலம்,  அவர்கள்   கையில்தான்   இருக்கிறது.  முதலில்   தன்மானத்தோடு  வாழ   கற்றுக்கொள்ள   வேண்டும்.  தன்மானம்   எப்படி  வரும்,  வளரும்   என்று   கேட்டால்:  உன்  தாய்   மொழியைக்   கற்றுக்கொள்,  தன்மானம்   தானாக   வரும்.  உன்   பண்பாட்டை  உணரு,  உன்  மூதாதையர்  விட்டுப்போன  நன்னெறி  பொக்கிஷங்களைப்  படி,  பேணு, உயர்வு   தானாக  வரும்.  பிறரும்  மதிப்பார்கள்.  வன்செயல்  கலாச்சாரம்  பெருமையை   நல்காது.  வன்செயல்  கலாச்சாரம்  பிறரின்  அன்பை  பெற  உதவாது.  வன்செயல்   கலாச்சாரம்   மிருகத்தின்  குணத்தைக்   காட்டுகிறது.

உறுதியாக   இருக்கக்கற்றுக்கொள்.  நல்லதை   நினைத்து,  நல்லதைச்  செய்ய   உறுதியாக   இருக்க வேண்டும்.

பேசும்   மொழியில்   நாணயம்   வேண்டும்.  அதாவது  எதைச்  சொன்னாலும்  அதில்   நாணயம்  இருக்கவேண்டும்.  நேர்மை   இருக்க வேண்டும்.  சுத்தம்  இருக்க   வேண்டும்.  மனதில்  ஒன்றும்  உதட்டில்  ஒன்றும்   என்றிராமல்   சொல்ல  வேண்டும்,  செயல்படவேண்டும்.  அதைத்தான்   மொழி நாணயம்   என்பேன்.

இன்றைய   இந்தியச்  சமுதாயம்   என்ன   செய்யவேண்டும்?  என்ற  கேள்வி   சாதரணமான   கேள்வி  அல்ல.  விடையும்  எளிதில்   கிடைத்துவிடாது.  ஆனால், ஒன்றுமட்டும்   தெளிவாகப்படுகிறது.  தமிழ்ச்   சமுதாயம்   மட்டுமல்ல   பொதுவாகச்   இந்தியச்   சமுதாயம்,   ஒருபடி   மேலே   சென்று   மலேசிய சமுதாயம்   வன்முறைக் கலாச்சாரத்தைத்  துறந்து,  மெச்சத்தக்க , கவுரமான   சமுதாயமாக  வடிவம் பெற  வேண்டுமானால்:

கல்வியின்   தரத்தை  உயர்த்த  வேண்டும். கல்வி  பெறுவதில்  ஏற்றத்  தாழ்வு   இருக்கக் கூடாது. கல்விக் கூடங்களில் ஏற்றத்தாழ்வு  மனப்பான்மைக்கு  இடம் தரக்   கூடாது.

tamilschool-in-malaysiaஅங்கே   இனமத   பிரச்சினைகள்   எழக்கூடாது. கல்விக்கு  இன, மதபேதம்  இருக்கக்  கூடாது. கல்விக்கூடங்களில்  கிடைக்கும்   பயிற்சி  மட்டும்   போதாது,       மாறாக, இளவயதிலிருந்தே  பிள்ளைகள்   சமுதாயக் கடமைகளை   உணர்த்தும்   பயிற்சி வழங்கவேண்டும். பள்ளிக்கூட  மாணவ   மாணவிகள்  காவல்  நிலையத்துக்குப் போய்   அங்கே  சிறையில்   வைக்கப்பட்டிருப்பவர்களைப்      பார்க்க  வேண்டும்.  அவர்கள்   படும்   அவமானத்தைக் காண  வேண்டும்.  மருத்துமனைக்குப்  போய்   விபத்துகளில்  காயமுற்றோரைப் பார்க்க   வேண்டும்.  காயமுற்றோர் படும்  நரக வேதனையைப்  பார்த்து   தமக்கும்  பிறருக்கும்   இவ்வாறு நேர்ந்துவிடக்கூடாது  என்ற   உணர்வைப்  பெறவேண்டும்.

பள்ளிக்கூடங்களில்   பரஸ்பர   நல்லெண்ணமும் புரிந்துணர்வும்   வளர்க்க  வேண்டும். இது  அரசியல்   அதிகாரம் பெற்றிருப்பவர்களால்   மட்டும்   செய்யமுடியும். எல்லோரும்   மனிதர்கள்.  எல்லா   இனங்களும் கூடி      வாழவும்,  எல்லா   சமயங்களும்   ஒருவரை  ஒருவர் புரிந்துகொண்டு   வாழமுடியும்  என்ற   உணர்வை   வளர்க்க வேண்டும்;  நிலைநாட்ட வேண்டும்.

இதைத்   துணிந்து   செயல்பட   சமூக  இயக்கங்கள்   முன்வரவேண்டும்.  முன்வருவார்களா?  அல்லது   பொதுநல   இயக்கங்களை   உருவாக்கி   அரசு   மான்யத்துக்காகக்   கையேந்தி   நிற்கும்   பணப் பெருச்சாளிகளாகத்    திகழ   விரும்புகிறார்களா?

பகுதி 1 – தமிழன்தான் முதல் குரங்கு என்றால் திருப்தியா?

பகுதி 2 வியாக்கியானங்களே வாழ்கையாகி விதியாவதா?