சமயம் குறித்த சரியான பார்வை

 

-முனைவர் ஆறு. நாகப்பன், மார்ச் 18, 2014

aru nagappan

இந்து சமயம் அல்லது சைவ சமயம் எதுவாக இருந்தாலும் தமிழர் சமயம் குறித்த சரியான பார்வை இக்காலம் வரை எங்கும் பார்க்கப்படவில்லை. சமய விளிம்புகளின் இரு கோடிகள் மட்டுமே இது வரை பேசப்பட்டுள்ளன. முரட்டுத் தனமான நம்பிக்கைகள்  ஒரு பக்கமும் அதே முரட்டுத்தனமான மறுப்புகள் ஒரு பக்கமும் காணப்பட்டன. காட்டப்பட்டன.

 

ஏதோ சில நூல்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நம்பிக்கைகளே சமயங்களுக்கான பொதுத் தளம் என்பது பிழையல்ல. ஆனால் இது எல்லாச் சமயங்களுக்கும் பொருந்தாது. பலவாகிய இந்திய சமயங்கள் அனைத்தையும் ஆராய்வது  இந்த இடத்தில் வேண்டாம் என்பதால் இரண்டே இரண்டு சிந்தனைக் கட்டுமானங்களை மட்டும் தேவைப்பட்ட அளவுக்கு பார்த்துக் கொண்டால் சமயம் குறித்த சரியான பார்வை ஒன்று கிடைக்கும் என்பது என் கருத்து.

 

முதலாவது இந்து சமயம் என்ற பொதுப் பெயரில் வைதீகம் விரித்திருக்கும் அகன்ற வலை. இருக்கு முதலிய வேதங்களின் அடிப்படையில் அமைந்த வைதீகப் பண்பாடு வேள்வி, வருணாசிரமம், சமற்கிருதம்  ஆகியவற்றை உள்ளடக்கிய பிராமணீய வாழ்க்கை முறையைக் குறிக்கிறது. பிறப்பால் வரும் சாதிமையைப் போற்றுவது வருணாசிரமம் . இதுவே பிராமணீயத்தின் அடித்தளம்.

 

பிராமணீயம் இந்தியப் பெருநிலம் முழுவதும் பரவியது. உலகியல் செல்வம் அனைத்தும் பெறலாம் என்னும் வேட்கையை முன்னிறுத்தியதால் வேத வேள்வி தமிழ் அரசர்களையும் செல்வந்தர்களையும் விரைந்து  கவர்ந்தது. இதன் வழித்  தமிழ் நாட்டு அரண்மனைகளின் செங்கோல்களை வைதீகம் கைப்பற்றியது.

 

மற்றொன்று தமிழர் உருவாக்கிய மெய்ப்பொருள் சிந்தனை. மரபு சார் ஊர்த்தெய்வங்கள் பலவும் நம்பிக்கைத் தளங்களில் ஊன்றி நின்றன. குல தெய்வம் அல்லது இல்லுறை தெய்வம், காவல் தெய்வங்கள், வீரர்களுக்கான நடுகல் வழிபாடு போன்றவை தமிழரின் மரபு சார் மதங்கள் ஆகும். தொல்காப்பியம் குறிக்கும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐவகை நிலத்திணைகளுக்கும்  முறையே முருகன், திருமால், இந்திரன், வருணன், கொற்றவை ஆகியவை தமிழரின் தொன்மைத் தெய்வங்கள். இவற்றுள் இந்திரன், வருணன் என்பவை வைதீகத்தின் சாயல் பெற்றுத் திரிந்த பெயர்கள்.

 

சங்க காலத்தில் மரபு சார் சிறுதெய்வங்கள் பலவும் வழக்கில் இருந்த போது சிவபெருமான் ‘பிறவா யாக்கை பெரியோன்’ என இளங்கோவடிகளால் குறிப்பிடப்பெற்றார். சிவபெருமானின் தோற்றப் பொலிவைக் குறிக்கும் தொடர்கள் பலவும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

 

நம்பிக்கை சார்ந்த சிறுதெய்வங்களின்  வழிபாடு மலிந்திருந்த காலத்தில் அறிவு சார்ந்த சிவ வழிபாடு சான்றோர் சிந்தனையில் வளர்ந்து சித்தாந்தம் என்ற மெய்யறிவுத் துறையாக அமைந்தது.

 

கடவுளுக்குக் கடவுள் தேவையில்லை, சடப் பொருள்களுக்கு அறிவும் உணர்வும் இன்மையால் அவற்றுக்கும் கடவுள் தேவையில்லை. ஆகவே சடப் பொருள்களைக் கருவி கரணங்களாகக் கொண்டு உலகைத் துய்க்கும் அறிவும் உணர்வும் உடைய உயிர் என்னும் பொருள் இருக்கத்தான் வேண்டும் என்பது உயிர் உண்மையை நிறுவும் வாதம். இல்லது தோன்றாது என்னும் வாதத்தால் உள்ளதாகிய மூலப் பொருள் ஒன்றிலிருந்தே உலகம் தோன்றியிருக்க வேண்டும் என்பது மாயையை நிறுவும் வாதம்.

 

உலகின் இருப்பை ஆராய்ந்து அவன், அவள், அது என்னும் அவயவப் பகுப்புடையதாய் இருக்கும் இவ்வுலகம் சடமாதலால் தானே தோன்றி, நின்று அழியாது என்றும் எல்லா உலகங்களையும் முற்றாக அழிக்கும் ஆற்றல் உள்ளவனே உலகைப் படைப்பவனாயும் உலகுக்கு ஆதியாயும் இருப்பான் என்றும் கடவுள் இருப்பைச் சைவம் நிறுவுகிறது.

 

உயிர், மாயை, கடவுள் தவிர வேறு இரண்டு பொருள்களும்  கடவுளால் படைக்கப்படாமல் என்றும் உள்ள பொருள்களாக உள்ளன. என்றும் உள்ள உயிர்களின் இயல்பாகிய அறிவு, இச்சை, செயல் ஆகிய ஆற்றல்களை மறைத்து அவற்றுக்கு அறியாமையை ஏற்படுத்தியிருக்கும் ஆணவம் என்பது ஒன்று. ஆணவத்தை அகற்றுவதற்கு  உயிர்களைச் செயல்படுத்திப் பக்குவப்படுத்தும் வினை மற்றொன்று.

 

அறிவு சார்ந்த இந்த வாதங்களால் உயிர், மாயை, கடவுள், ஆணவம், வினை ஆகிய பொருள்கள் தோற்றம் அழிவு இன்றி என்றும் இருப்பவை என்று கூறுவது சித்தாந்தம். கடவுளின் இருப்பைப் பதி உண்மை என்றும் கடவுளின் சிறப்பைப் பதி இலக்கணம் என்றும் சித்தாந்தம் விரித்துப் பேசியது.

 

என்றும் உள்ள உயிர்களுக்கு என்றும் உள்ள மாயையிலிருந்து உடல், உலகங்கள், உயிர்க்கான நுகர்ச்சிப் பொருள்களை இறைவன் படைத்துக் கொடுக்கிறான். படைத்தவற்றை உயிர்கள் நுகர்ந்து பக்குவப்படும் வரை காக்கின்றான். உயிர்கள் பிறந்தும் இறந்தும்  பக்குவப்படும் வரை தன்னை மறைக்கின்றான். பிறப்பு இறப்பிலிருந்து இளைப்பாறும் பொருட்டு படைத்தவற்றை அழிக்கின்றான். பக்குவப்பட்ட உயிர்களை இடையறா இன்பத்தில் நிலைக்க அருளுகின்றான். இவ்வாறு படைத்தல், காத்தல், மறைத்தல், அழித்தல், அருளல் என்னும் ஐந்தொழிகளை  உயிர்கள் பொருட்டு இறைவன் செய்தபடி இருக்கின்றான் என்பது சித்தாந்தம்.

 

இருபத்தெட்டு சைவ ஆகமங்களைத் தனக்கு வேதமாய்க் கொண்டது சிவனைப் போற்றும் சைவம். ஆகமங்களின் செயல்முறை நூலாக அமைவது பன்னிரு திருமுறைகள். இவ்விரண்டு நூல்களின் வழியில் அமைந்தவை பதினான்கு மெய்கண்ட சாத்திரங்கள். இவற்றுள் ஆகமம் விதி நூல், திருமுறை செயல் நூல், மெய்கண்ட சாத்திரங்கள் சைவத்தின் இலக்கண நூல்கள். மற்றோர் முறையில் கூறினால் சைவத்தின் வேதம் ஆகமம், மெய்யறிவு நூல் மெய்கண்ட சாத்திரங்கள், மெய்யுணர்வு (பத்தி) நூல் திருமுறைகள்.

 

சைவம் இமயம் முதல் குமரி வரை பல அடைமொழிகளைக் கொண்டு விரிந்தது. என்றாலும்  தென் தமிழ் நாட்டில் நுண்ணிய தத்துவத் துறையாக செம்மைப்பட்டது. இதன் வளத்தை இந்தியச் சிறு மதங்கள் யாவும் பங்கிட்டுக் கொண்டன. கணபதியைப் போற்றும் காணாபத்தியம், முருகனைப் போற்றும் கெளமாரம், சக்தியைப் போற்றும் சாக்தம் ஆகிய மதங்கள் யாவும் முறையே சிவனின் பிள்ளைகள் என்றும் மனைவி என்றும் உறவு முறைகளால் தம் நிலையை உறுதிப்படுத்திக் கொண்டன.

 

உறவுமுறைகளை வலிமைப்படுத்த ஏராளமான புராணங்கள்  உருவாக்கப்பட்டன. தமிழர் சமயக் கிரியைகளோடு வைதீக வேள்விக் கிரியைகள் கலந்தன. ஆரிய பிராமணர்களின் தொழில் வளம் கருதி உருவாக்கப்பட்ட கிரியைகள் அறிவுக்கு ஒவ்வா நம்பிக்கைகளை  உருவாக்கின. இன்றும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

 

தனிப்பெரும் சமயமான சைவம் தென்னிந்தியச் சிறு சமயங்கள் உயிர்த்து உறுதி பெற உதவிய காலத்தில் வைதீகம் சைவம் உட்பட அனைத்துச் சமயங்களையும் வாரி விழுங்கித் தன் வயிற்றில் அடக்கிக் கொண்டது. இதனால் வேதங்களை ஏற்காத சமணம், பெளத்தம் அவைதீகம் என்றும் மற்றவை அனைத்தும் வைதீகம் என்றும் ஆரிய மயப்பட்டன.

 

இக்காலத்தில்  தமிழரின் பழஞ்சமயங்களான கிராமத்துத் தெய்வங்கள் வைதீகத்தின் கைகளுக்குத் தப்பித் தம் மரபுகளைக் காத்துக் கொண்டன. சிற்றூர்களைக் கடந்து விரிந்த சமயங்கள் வைதீகத்தில் கலந்து உரு மாறின. முருகன் சுப்ரமணியன், கந்தன் என்றும் திருமால் விஷ்ணு என்றும்  மாற்றம் கண்டனர். நிலத்திணை கடந்து பொதுக் கடவுளாய் இருந்த சிவன் உருத்திரன் ஆனான். தமிழர் அமைத்த கோயில்களில் பிராமணர் பூசகராயும் சமற்கிருதம் பூசனை மொழியாகவும் ஆனது. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த அரசர்களே இதற்கெல்லாம் வழி கொடுத்து வணங்கி நின்றனர்.

 

ஆரிய மயப்பட்ட சைவ சமயத்தை மீட்டுப் புத்துருவாக்கம் செய்யும் முயற்சியில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்னும் நால்வர் பெருமக்கள்  அரும்பாடு பட்டனர். சமண, பெளத்த மதங்களின் வலிமையை எதிர்கொள்ள இயலாத நிலையில் வைதீகத்தைப் பகைத்துக் கொள்ளாமல் அதே வேளையில் சைவத்தையும் தமிழையும்  மீட்கும் போராட்ட முறையை மேற்கொண்டனர்.

 

சமற்கிருத மொழியைத் தேவபாஷை என்று கூறும் பிராமண மரபில் வந்த திருஞானசம்பந்தர் தன்னைத் தமிழ்ஞானசம்பந்தர் என்று வலிந்து பல பாடல்களில் குறிப்பிட்டார்.  வைதீக நெறிக்கு ஒவ்வாத உருவ வழிபாட்டு மரபை மீட்டார். தமிழால் சிவபெருமானைப் பாடும் பதிகங்கள் இயற்றினார். இவர் வழியில் திருநாவுக்கரசர் மேலும் உறைத்தெழுந்தார்.

 

கிரியைகள் மட்டும் வழிபாடு ஆகிவிடாது, உண்மை அன்பே வழிபாடு என்றார். ‘ நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன்’ (5.90.9) என்றார். ‘சாத்திரங்கள் பல பேசும் சழக்கர்காள், கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்’ (5.60.3)என்று சமூக நீதியுரைத்த திருநாவுக்கரசர் ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ (6.98.1)என்று முடியரசை எதிர்த்த முதல் குடியரசர் ஆனார்.

 

‘அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய்

ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்

கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்

அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவுளாரே (6.95.10)

 

என்று சாதிமை கடந்த பத்திமையை அப்பர் முன்னைலைப்படுத்தினார்.

 

இவர்கள் வழியில் வந்த சுந்தரர் இல்லறத்தினின்றும் இறைவன் திருவடியைச் சென்றடைய முடியும் என்று வாழ்ந்து காட்டினார்.

 

‘சாதி குலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்

ஆதம் இலி நாயேனை…’ (8.கண்டபத்து 5)

 

என்று சாதி, குலம், பிறப்பால் மக்களை உயர்ந்தோர் தாழ்ந்தோர் எனக் கூறுவதை இழிந்த பண்பு எனச் சாடினார் மாணிக்கவாசகர்.

 

இவ்வாறு நால்வர் பெருமக்களும்  ஏனைய சைவச் சான்றோரும் ஆரிய வருணாச்சிரமத்தைக் கண்டிக்கும் போராட்டத்தின் மறுதலையாகச் சைவம் குறிக்கும் ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ (10.2072) என்ற மனித குல ஒருமைப்பாட்டை வலியுறுத்தினர்.

 

ஆரிய மாயை என்று கூறி வைதீகம் கலந்த தமிழர் சமயங்களைப் புறக்கணிக்கும்  தமிழ்ச் சிந்தனையாளர் ஆரியமும் வைதீகமும்  நீங்கிய தமிழர் சமயங்களை அடையாளம் கண்டு மீட்டெடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். இவற்றுள்ளும் சைவம் தமிழர் வளப்படுத்திய தத்துவக் களஞ்சியம் என்பதை உணர்ந்து அதனைப் போற்றிக் கைக்கொள்ள வேண்டும்.

 

‘தமிழருக்குச் சமயமே இல்லை’ என்ற முரட்டு வாதம் தமிழரின் சமயம் இருந்த இடத்தில் அந்நிய மதங்களுக்கு ஆட்சி பீடங்களை அமைத்திருக்கிறது. தமிழர் சமயங்களைச் சார்ந்தோரைப் பார்த்து ‘கடவுள் இல்லை, இல்லவே இல்லை’ என்போர் அந்நிய மதங்களைச் சார்ந்துவிட்ட தமிழரையும்  தமிழரை மதம் மாற்றும் அந்நியரையும் பார்த்து அப்படிச் சொல்வதில்லை என்பதால் கடவுள் மறுப்பாளர் வந்தாரை வாழ வைப்பதை மறைமுகப் பணியாகச் செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை உணர்த்த வேண்டியுள்ளது.

 

தமிழரின் மரபு சார்ந்த சமயங்களை வைதீகப் பிடியிலிருந்து மீட்கும் முயற்சியில் தோற்றுப் போனவர்கள் தமிழருக்குச் சமயமே இல்லை என்று மறுதலிப்பது தமிழரின் பண்பாட்டு வரலாற்றை ஊனப்படுத்திவிடும். குறிப்பாகச் சைவ சமயத்தையும் சைவ சித்தாந்தத்தையும் மறுதலிப்பது ஆய கலைகள் அறுபத்து நான்கையும் அறிந்த தமிழனுக்குக் கடவுள் பற்றிய சிந்தனை மட்டும் இல்லை என்று கூறுவதாய் முடியும். இப்பார்வையினின்று மாறி வைதீகப் பிடியிலிருந்து சைவத்தை மீட்க வேண்டும். மீட்டால் சைவம் அறிவார்ந்த சமயமாகச் சமய உலகைத் தலைமை கொள்ளும் என்பது உறுதி.