என் எஸ் ராஜேந்திரனின் தமிழ்ப் பள்ளிகளின் திட்ட வரைவு உழைப்பின் வெளிப்பாடு!

ns rajendranஅண பாக்கியநாதன் நமது தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் படும் அவதியை நன்றாகவே படம் பிடித்து காட்டியுள்ளார். ஆனால்  டத்தோ என் எஸ் ராஜேந்திரன் மீது என்ன கோபமோ தெரியவில்லை அவரை வாட்டி வதக்கி எடுத்திருக்கின்றார். அவரையும் வேதமூர்த்தியும் ஒரே தராசில் வைத்து எடை வேறு போட்டிருக்கின்றார்.

பொதுவாக இரு பொருட்களின் வேற்றுமை ஒற்றுமைகளை வரிசைப்படுத்துபோது அந்த இரு பொருட்களும் சம நிலையைக் கொண்டுள்ளதா என்று முதலில் பார்க்க வேண்டும்.

பேராசாரியர் ஒரு அரசாங்க ஊழியர். அரசாங்கம் இடும் கட்டளையை நிறைவேற்றுவது அவரது கடமை. எந்த கட்சி ஆட்சியிலிருக்கிறதோ அந்த கட்சி அமைத்த அரசாங்கம் இட்ட பணியை செய்வது அரசாங்க ஊழியர்களின் கடமை.

வேதமூர்தி ஒரு தனிப்பட்ட நபர் , தன்னேச்சையாக யார் கீழும் இயங்காமல் தானே முடிவு செய்யும் சுதந்திரம் அவருக்கு உள்ளது. அவராகவே முன் வந்து இந்தியர் நலனுக்காக அராசாங்கத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கி , தேர்தல் இறுதி கட்டத்தில் விரக்தியடைந்து  தான் எதிர்த்த அரசாங்கத்தின்  காலிலேயே விழுந்து அதற்கு பரிசாக துணை அமைச்சர் பதவியும் பெற்றவர்.. இந்தியர்களுக்காக தான் போட்ட ஒப்பந்தத்தில் அரசாங்கம் கையெழுத்திட்ட பின்னர் , அது நிறைவேற்றப்படும் என்று முழுமையாக நம்பி , அதை செயலாக்க அப்பணி தன்னிடமே ஒப்படைக்கப் படும் என்று பெரிதும் எதிர்பார்த்து அந்த துணை அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார்.  பின்பு அவராகவே பாரிசான் அரசாங்கத்தின் சுய ரூபத்தை அறிந்து  தன்னால் இந்திய சமுதாயத்திற்கு ஒன்றுமே செய்ய முடியவில்லை என்று கூறி வெளியில் வந்தவர். அவர் நுழையும் முன்பே இது தெரிந்திருந்தும் அவர் உள்ளே சென்றது அவரின் அரசியல் அறிவு பூஜியம் என்பதனைக் காட்டுகிறது. அதை விட்டுவிடுவோம்  அது வேறு விஷயம்.

ஆகவே ராஜேந்திரனை வேதமூர்தியை வைத்த அதே தட்டில் வைத்து எடை போடமுடியாது. அவருக்கு கொடுத்த வேலையை அவர் செவ்வனே செய்து  முடித்தார் என்பதனை யாராலும் மறுக்க முடியாது. அது அரசியலுக்காக , இந்தியர்களை வசப்படுத்த போட்ட நாடகமாகவே இருக்கட்டும். பிரதமர் கட்டளை என்பதால் அதனை ராஜேந்திரன் மேற்கொண்டார். அதற்காக நூற்றுக் கணக்கானவர்களை சந்தித்து நாட்டிலுள்ள எல்லா தமிழ்ப்ப் பள்ளிகளுக்கும் விஜயம் செய்து ஆயிரக்கனக்கான தரவுகளைத் திரட்டி அதன் பின்னர் ஒரு முழுமையான அறிகையை தயாரித்து கொடுப்பது என்பது சாதாரன காரியமல்ல.அதற்கு தனி ஆற்றல், திறமை அறிவு அனுபவம் அதற்கு மேலாக மொழி ,சமுதாயத்தி மீது பற்றும் மிகவும் அவசியம்  அவர் ஆளும் கட்சி எதிர்கட்சி என்று இனம் பாராமல் எல்லா தரப்பினர்களிடையேயும்  –அவர்கள் தமிழ்க் கல்வியின் மேல்அக்கறை கொண்ட பங்குதாரர்கள் என்ற காரணத்தால் –சந்திப்புகள் நடத்தி  ஆலோசனை கேட்டவர். அதற்கு சான்றாக , எதிர்கட்சியைச் சார்ந்த  , ஈப்போ  பாராட் மாண்புமிகு குலசேகரனையும் அந்த திட்ட வரைவு சமர்ப்பிப்பு அன்று அழைதிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

அதோடு பேராசிரியர் என் எஸ் ராஜேந்திரன் உப்சி பல்கலைகழகத்திலிருந்து இப்பணிக்காக இரவல்கொடுக்கப்பட்டவர் என்பது நினைவில் கொள்க . இந்த 2 வருட பணி முடிந்த அவர் பேராசிரியர் தொழிலுக்கு மீண்டும் உப்சி பல்கலைக்கழகத்திற்கே திரும்ப வேண்டும்.

வேதமூர்தியைப் போல் தமிழ்ப்பள்ளிகளுக்காக “நான் இப்படியெல்லாம் செய்ய திட்டமிட்டுள்ளேன் , எனக்கு குழு ஒன்றை அமைத்துக் கொடுங்கள்” என்று பிரதமரிடம் வேண்டி ஒப்பந்தம் போட்டு அங்கு போனவர் அல்ல. நஜீப் அரசியல் நோக்கோடு இதை செய்திருக்கலாம் , ஆனால் ராஜேந்திரனின் உழைப்பு  உண்மையானது. அவரின் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டால் தமிழ்ப் பள்ளிகளுக்கும் தமிழ் மொழிக்கும் புதிய விமோசனம் கிடைக்கும் . இவரின் பரிந்துரைகள் சமுதாய நோக்கை முன்நிறுத்தி அரசியலுக்கு அப்பால் உருவாக்கப்பட்டது ஆனால் அவற்றின் அமலாக்கமோ முழுக்க முழுக்க அரசியல் சார்புடையது.

இதற்றையெல்லாம் பற்றி சிந்திக்காமல் “பிரதமர் பொதுத்தேர்தலுக்கு முன் பேராசிரியர் என்.எஸ்.ராஜந்திரனினை முன் நிறுத்தி அமைத்த  மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுகான மேம்பாட்டு திட்டவரைவு குழு முழு  அரசியல் கண்துடைப்பு. இப்படிப்பட்ட குழுவில் பங்கேற்பதே அவர் இச்சமுதாயத்திற்கு செய்யும் மாபெரும் துரோகம்” என்று பாக்கியநாதன் கூறுவது டூ மச்ச் என்றே கருதுகிறேன்.

அவருக்கு அந்த வரைவுத் திட்டத்தை நிறைவேற்ற உத்தரவிட்டு அதற்கான பண பலம் , ஆள்பலம் , அதிகாரம் எல்லாம் கொடுத்து அதனை செய்யத் தவறினால் பாக்கியநாதனுக்கு ராஜேந்திரனை திட்ட முழு உரிமை உள்ளது. இவை யாவும் இல்லத பட்சத்தில் அல்லது அப்பணி அவரிடம் ஒப்படைக்கப்படாத பட்சத்தில் அவரை குறை கூற தார்மீக அடிப்படையில்  பாக்கியநாதனுக்கு உரிமையில்ல. இந்த திட்ட வரைவை கல்வி அமைச்சிடன் சமர்ப்பிக்கப்பட்டு தேசிய கல்வித்திட்டத்துடன் ஒருங்கிணைகப்படும் என்று அன்றே பிரதமர்  கூறிவிட்டார்.

அப்படியே அவர் வகுத்த அந்த திட்டங்கள் கல்வி அமைச்சினால் நிறைவேற்றப்படாமல் போனாலும் அதற்கு ராஜேந்திரனைக் குறை கூற முடியது. அதை நிறைவேற்ற வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அது பாரிசானாக இருந்தாலும் சரி , மக்கள் கூட்டணி யாக இருந்தாலும் சரி, நடப்பு அரசை எக்கட்சி எடுத்து நடத்துகிறதோ அவ்வரசின் கடன். அப்படியே பாரிசான் தொடர்ந்து இந்த நாட்டை ஆளுமேயானால் இந்திட்டங்கள் நிறைவேற்றப்படுவதை பாரிசானின் பங்காளிக் கட்சியா ம.இ.கா தான் கண்காணிக்கவேண்டும் , அது ராஜேந்திரனுக்கு பணிக்கப்பட்ட பணிகளின் பட்டியலில் இல்லை. முன்பு டத்தோ பத்மநாபன் காலத்தில் இந்தியர்களுக்க்காக அவர் முன்வரைந்த பச்சை புத்தகத்திற்கு ஏற்பட்ட கதி இதற்கும் ஏற்படக்கூடிய சாத்தியமுண்டு.  அதற்கு பத்மாநபனை யாரும் கரித்துக்கொட்டவில்லை. அரசு அதனை நிறவேற்றவில்லை அவ்வளவுதான்.

இங்கு எதிர்கட்சிகளும் தங்கள் கடமையை நிச்சயாமாக செய்யவேண்டும். ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டங்களை  நிறைவேற்றத் தவறினாலோ அல்லது சாக்கு போக்குச் சொல்லி காலாந் தாழ்த்தினாலோ அரசாங்கத்தை  தட்டிக் கேட்க அவற்றிற்கு  தார்மீக உரிமையுண்டு.

ராஜேந்திரனுக்கு, காஜாங் இடைதேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டவுடன் தமிழ்ப் பள்ளிகளுக்கான திட்டவரை சமர்ப்பிப்பு என்ற நாடக அரங்கேற்றத்தை பிரதமைரை வைத்து நடத்தியுள்ளார் என்று கூறுவது அவர் செய்த 2 வருட சேவைக்கு அரசியல் சாயம் பூசி கொச்சைப் படுத்துவது போலாகும். காஜாங் இடைதேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் ராஜேந்திரனுக்கு  தனிப்பட்ட விதத்தில் எந்த லாபமும் இல்லை அதோடு தேர்தல் அறிவிப்பு  தேதிக்கும் திட்ட வரைவு சமர்ப்பிப்பு தேதிக்கும்  எந்த வித சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை. பாக்கியநாதன் கற்பனை எல்லை மீறுகிறது.

தமிழ்ப் பள்ளிகளின் மீதான ஆய்வு ஒரு காலங்கடந்த செயல் என்று கூறுவதும் ஏற்புடயதல்ல. கட்டுரையாளரே ஓரிடத்தில் சொல்லுகிறார் காலங்காலமாக  சுப்பனும் குப்பனும் கோரி வந்தததைத்தான் இவர் பட்டியலிட்டிருகின்றார் என்று. அவற்றைத்தான் இவர் முறையாக அராசாங்கதின் ஆசியோடும் முழுமையாக செய்திருகின்றார் என்று சொல்ல வருகிறேன்

நஜிப் தன்னுனைடய தன்னுடைய அரசியல் செல்வாக்கை தக்கவைக்க படித்தவர்களையும் டத்தோக்களையும் முனைவர்களையும் பயன்படுத்துகிறார் என்ற கூற்றில் அரசியல் ரீதியாக  உண்மை இருந்தாலும் ராஜேந்திரன் மேற்கொண்ட திட்ட வரைவு பரிந்துரைகளில் என்ன அரசியல் இருக்க முடியும் என்பதனை பாக்கியநாதன் தெளிவு படுத்தவில்லை. எல்லோரும் ஏறுக்கொள்ளும் வண்ணம் அமைந்த ஒரு  விரிவான முழுமையான பரிந்துரைகளைத்தானே முனைவர் செய்திருகின்றார்.

ஆக  மொத்தத்தில் அண பாக்கியனாதனின் கட்டுரை தமிழ்ப் பள்ளிகளின் அழியாத அவலங்களை எடுத்து கூறும் அருமையான கட்டுரை – ராஜேந்திரனின் மேல் இட்ட குற்றச்சாட்டுக்களை  தவிர்த்திருத்திருக்குமேயானால்.

– அ.கோவிந்தசாமி

தஞ்சோங் மாலிம்