பட்டப்படிப்பிற்குப் பிந்தைய ஆசிரியர் பயிற்சி – ஒரு விவாதம் – தமிழினி

teachers_21027447நேற்று நன்கு அறிமுகமான பெரியவர் ஒருவரை யதேச்சையாக சந்தித்தேன். அவர் மகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சபா பல்கலைக்கழகத்தில் காட்டுவளம் சார்ந்த ஏதோ ஒரு துறையில் பட்டம் பெற்றவர். இப்போது என்ன செய்கிறார் எனக் கேட்டேன். நிரந்தரமாக எந்த வேலைக்கும் இதுவரை செல்லவில்லை என்றும் பட்டப்படிப்பிற்குப் பிந்தைய ஆசிரியர் பயிற்சிக்கு நம்பிக்கையோடு காத்திருப்பதாகவும் கூறினார்.

அரசாங்கமும் கல்வியமைச்சும் இது குறித்து விரைந்து நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் குறிப்பிட்டார். தனது மகளை ஒரு ஆசிரியர் ஆக்க வேண்டும் என்ற கனவு கண்டிப்பாய் நிறைவேறும் என்ற கண்களில் கனவு மின்ன குறிப்பிட்டார்.

ஆனால், இந்த பட்டப்படிப்பிற்குப் பிந்தைய ஆசிரியர் பயிற்சி 2011-ஆம் ஆண்டோடு நிறுத்தப்பட்டு விட்டது. இந்த பெரியவரின் மகளைப் போலவே எண்ணற்ற இந்திய பட்டதாரிகள் பட்டப்படிப்பிற்குப் பிந்தைய ஆசிரியர் பயிற்சிக்கு இன்றுவரை நம்பிக்கையோடு காத்திருப்பதை பல நிலைகளில் நம்மால் அறிய முடிகிறது.

Kursus Perguruan Lepasan Ijazah (KPLI)  என்றழைக்கப்படும் பட்டப்படிப்பிற்குப் பிந்தைய ஆசிரியர் பயிற்சி  கல்வியமைச்சின் கீழ் இயங்கும் ஆசிரியர் கல்விப் பிரிவினால் வழங்கப்படுகிறது. ஆசிரியர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும் பட்டம் பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் ஒரு குறுக்கு வழியாகவும் பட்டப்படிப்பிற்குப் பிந்தைய ஆசிரியர் பயிற்சி அமல்படுத்தப்பட்டது.

இத்திட்டம் அமல்படுத்தப்பட்ட போதே நிறைய கேள்விகள் முன்வைக்கப்பட்டது. தொடக்கத்திலிருந்தே ஆசிரியர் பயிற்சி வழங்கப்படாதவர்கள் பட்டம் படிப்பிற்குப் பின்னான ஓராண்டுகால பயிற்சிக்குப் பின் நல்லாசியர்களாக உருவாக முடியுமா என்ற கேள்வி மிக முக்கியமான கேள்வியாக முன்வைக்கப்பட்டது.

இருந்தும் குறைந்தது ஆறு ஆண்டுகளுக்கு மேல் அமலில் இருந்த இத்திட்டம் முழுமையான ஆசிரியர் பயிற்சியைச் சார்ந்திராத பல்வேறு துறைகளில் பட்டம் பெற்றவர்களை எல்லாம் ஆசிரியர்களாக்கியது. கல்வித் துறைக்கு சம்பந்தமில்லாத துறைகளில் பட்டம் பெற்றவர்கள் கூட ஆசிரியர்களானார்கள்.

இதில் வாய்ப்பு கிடைத்து இன்று நல்லாசிரியர்களாய் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் செம்பருத்தியின் வாழ்த்திற்கும் வணக்கத்திற்கும் உரியவர்கள். ஆனால், தான் பட்டம் பெற்ற துறையில் இருக்கும் சவால்களுக்குப் பயந்து நல்ல சம்பளமும் விடுமுறையும் இன்ன பிற அனுகூலங்களும் கிடைக்கும் என்பதற்காகவும் இந்த பட்டப்படிப்பிற்குப் பிந்தைய ஆசிரியர் பயிற்சி  மூலம் ஆசியர்களானவர்கள் எங்கெங்கு நமது மாணவர்களை வதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அந்த இறைவனுக்கே வெளிச்சம். மேலும், இத்திட்டத்தின் வழி ஆசிரியர் பயிற்சி பெற்ற இந்திய மாணவர்களில் பலர் தேசியப்பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர் என்பது  வருத்தமளிக்கும் ஒரு செய்தி. Teachers

எல்லாரும் ஆசிரியர்களாகிவிட முடியாது என்ற கூற்றை பெரும்பாலும் யாரும் மறுக்க மாட்டார்கள். ஏனெனில், ஆசிரியர் பணியானது மாணவனை செதுக்கும் பணி. அதற்கு கூடியபட்ட பொறுப்புணர்வும், சகிப்புத் தன்மையும், புதியனவற்றைக் கற்றறியும் திறனும் மிக அவசியம். தொடர்  பயிற்சியின் மூலமும் சொந்த ஆர்வத்தின் வழியுமே அதனைப் பெற முடியும்.

இன்றைய நிலையில், எஸ்பிஎம் தேர்வில் சிறந்த தேர்ச்சியினைப் பெற்ற மாணவர்கள் மட்டுமே ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் வழி, கல்வி நிலையில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர்களாவது வரவேற்கத் தக்க ஒன்றாக இருக்கிறது. அதைத் தவிர, இவர்களுக்குக் குறைந்தபட்சம் 5 ஆண்டுகால பயிற்சி வழங்கப்படுகிறது. தங்கள் பயிற்சிக்காலத்தில் நிறைய பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்குக் கற்றுத் தரவும் இவர்கள் கற்றுக் கொள்ளவும் நிறையவே வாய்ப்பு வழங்குகிறது.  இதை நான் வரவேற்கிறேன். ஒரு தரமான ஆசிரியர் உருவாகுவதற்கு இதுபோன்ற பயிற்சிகள் வழிவகுக்கும் என நான் நம்புகிறேன். இது குறித்து நாம் தொடர்ந்து விவாதிக்கலாம். கருத்துரைக்க விரும்புவர்கள் செம்பருத்திக்குக் தங்களின் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

இந்த நிமிடம் வரை பட்டப்படிப்பிற்குப் பிந்தைய ஆசிரியர் பயிற்சியில் வாய்ப்பு வழங்கப்படும் எனக் காத்திருப்பவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து தீவீரமாக முடிவெடுக்க வேண்டும் என்ற கருத்தையும் முன்வைக்கிறேன்.