கர்பாலுக்கு காணிக்கை

karpalஆண்டியை அரவணைத்தான், அரசனை எதிர்த்தான், தலைமை நீதிபதியை நீயா நானா என்று கேட்டான் மாட்டுக்காரப் பையன் கர்பால் சிங்! அந்த கர்ஜிக்கும் சிங்கத்தின் குரல் இன்று அதிகாலையில் அடங்கிவிட்டது.

“குற்றம் புரிந்தவன் கொற்றவனேயானாலும் குற்றம் குற்றமே” என்று படித்திருக்கிறோம்; பலர் பேசக் கேட்டிருக்கிறோம். ஆனால், இந்நாட்டில் குற்றம் புரிந்த கொற்றவன் மீது குற்றம் சுமத்திய ஒரே ஒரு வழக்குரைஞர் கர்பால் சிங் மட்டுமே. அதற்காக அக்கொற்றவன் அவருடைய நாய்களில் ஒன்றுக்கு கர்பால் சிங் என்று பெயரிட்டார். புண்ணியம் செய்த நாய்!

சட்டம், நீதி ஆகியவற்றுக்காக ஆட்சியாளர்களுடன் மோதிய ஒரே வழக்குரைஞர் கர்பால் சிங். பேராக் மாநில அரசியல் நெருக்கடியின் போது அம்மாநில ஆட்சியாளர் மேற்கொண்ட முறை குறித்து கேள்வி எழுப்பி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதற்காக அரசால் தொடரப்பட்ட வழக்கின் முதல் சுற்றில் அவர் வெற்றி பெற்றாலும், மேல்முறையீட்டின் வழி கர்பால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எதையும் எதிர்க்கும் சிங்கம் அதையும் எதிர்த்தது. கர்பால் சிங்கை உள்ளே தள்ளி அவரது அரசியல் வாழ்க்கையை அழிக்க வேண்டும் என்று கனவு கண்ட அரசியல்வாதிகள், சமயவாதிகள் போன்றோரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டார் கர்பால். இனி அவரை யாரும் பிடிக்க முடியாத அளவிற்கு அவர் ஏழை எளிய மலேசிய மக்களின் நிரந்தர ஹீரோ ஆகிவிட்டார்.

பினாங்கில் ஒரு சாதாரண மாடு வளர்த்து பிழைத்து வந்த குடும்பத்தில் பிறந்த கர்பால் சிங்கையில் சட்டம் பயின்று வழக்குரைஞரானார்.

மே 13, இனக் கலவரத்திற்குப் பின்னர், நாட்டில் பல்லின சுபிட்சத்தை உருவாக்குவதற்காக தோற்றுவிக்கப்பட்ட டிஎபியில் 1970 ஆம் ஆண்டில் இணைந்தார்.

1974 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கெடா மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார். பின்னர், பினாங்கு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்த்டுக்கப்பட்ட கர்பால் 21 ஆண்டுகளுக்கு அப்பதவியில் தொடர்ந்தார். 1999 இல் அவர் தோல்வி கண்டாலும், 2004 ஆண்டிலிருந்து இன்று வரையில் அவர் புக்கிட் குளுகுர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்.

கர்பாலின் சட்ட மற்றும் நாடாளுமன்ற வாழ்க்கை சூறாவளி நிறைந்தது. அம்மன்றங்களின் உறுப்பினர் என்ற முறையில் தமது உரிமையை நிலைநிறுத்துவதில் அவர் விடாப்பிடி மன்னனாக இருந்தார்.

karpal2பினாங்கு மாநில சட்டமன்ற தலைவர், கர்பாலை அவையிலிருந்து வெளியேற்ற உத்தரவு பிறப்பித்து அவரை வெளியேற்ற போலீசாரை அழைத்தார். அவையினுள் நுழைந்த போலீசாரிடம், “Don’t touch me. You have no business to be in this House” என்று கர்பால் முழங்கியதைக் கேட்டு போலீசார் திகைத்து நின்றனர். கர்பால் தாமாகவே வெளியேறினார். கர்பாலை வெளியேற உத்தரவிடுவது, அவரை நாடாளுமன்ற அவையிலிருந்து தள்ளி வைப்பது, ஆறு மாதங்கள் வரையில் கூட, போன்ற சம்பவங்கள் ஏராளம். ஆனால், இவை அனைத்தும் அவரின் திண்மையைச் சிதைப்பதில் தோல்வி கண்டன. சக்கர நாற்காலில் வாழ்ந்தாலும் “Singh is King” என்றார்!

மகாத்மா காந்தியாலும் ஜோன் கென்னடியாலும் கவரப்பட்ட கர்பால் சிங், மரண தண்டனையைக் கடுமையாக எதிர்த்தார். அதிலும், குறிப்பாக போதைப் பொருள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கட்டாயமாக்கப்பட்டிருக்கும் மரண தண்டனையை அவர் எதிர்த்தார். பல வழக்குகளில், வெளிநாட்டவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் உட்பட, அவர் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

இரு விவகாரங்கள் கர்பாலுக்கு அவருடைய உயிருக்கும் மேலானதாக இருந்தன. இஸ்லாமிய ஹூடுட் சட்டத்தை கர்பால் கடுமையாக எதிர்த்தார். இந்த விவகாரத்தில் பாஸ் கட்சிக்கு சிம்மசொப்பனமாக இருப்பது கர்பால் சிங்தான். இனிமேல், ஹூடுட் சட்ட விவகாரத்தில் டிஎபியின் நிலைப்பாட்டில் ஆட்டம் காணலாம்.

karpal1மலேசியா ஒரு சமயசார்பற்ற நாடு. நமது அரசமைப்புச் சட்டம் நமது நாடு சமயச் சார்பற்ற நாடு என்று திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளது என்பதை வலியுறுத்தி வந்ததில் கர்பாலுக்கு இணை கர்பால்தான். பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் தலைவர்களுக்கும் மலேசியா ஒரு சமயச் சார்பற்ற நாடு என்பது தெரியும். ஆனால், அவர்கள் வாய் திறப்பதில்லை. கர்பாலுக்கு மலேசியா ஒரு சமய சார்பற்ற நாடு என்பது அவரது உரிமை. அந்த உரிமைக்காக அவர் உயிர்விட தயாராக இருந்தார். இஸ்லாம் என்பது அதிகாரபூர்வ சமயம் என்பதை ஏற்றுக்கொண்ட அவர், மலேசியா ஓர் இஸ்லாமிய நாடு என்பதை தாம் இறந்தாலும் விடமாட்டேன் என்பதை வலியுறுத்த “over my dead body” என்று கர்ஜித்தார். இந்த ஒரு விவகாரத்தில் கர்பால் கிட்டத்தட்ட இந்நாட்டிலுள்ள அனைத்து சமயவாத கொள்கை கொண்ட அரசியல் கட்சிகளின் முதல் எதிரியாக விளங்கினார் என்று கூறினால் மிகையாகாது.

இன்னொரு விவகாரத்திலும் கர்பால் மிகக் கடுமையான கொள்கையைப் பின்பற்றினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட சட்ட மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலுக்குப் பின்னர் கட்சி தாவுதலை அவர் கடுமையாக எதிர்த்தார். அவ்வாறான செயல் மக்களையும் ஜனநாயக முறையையும் அவமதிப்பதாகும் என்பது அவரது நிலைப்பாடு.

karpal32008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர், “செப்டெம்பர் 16” இல் அன்வார் இப்ராகிம் ஓர் அரசாங்கத்தை அமைப்பதற்காக கட்சி தாவுதல்களுக்கு தீவிரமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன என்ற தகவல் ஒவ்வொரு நாளும் வெளியாகிக் கொண்டிருந்த வேளையில், இக்கீழறுப்பு செயலுக்கு அன்வார்தான் பின்னணி என்று உணர்ந்த கர்பால், அன்வாரிடம் “Resign and Get out” என்று உத்தரவே இட்டார் என்று கூறலாம். அன்றே “செப்டெம்பர் 16” முடிவிற்கு வந்தது. அதன் வழி ஏற்பட்டிருக்கக்கூடிய ஒரு பெரும் கலவரம் நிறுத்தப்பட்டது. இதனைச் சாதிக்கக்கூடிய தகைமை பெற்றிருந்த ஒரே தலைவராக கர்பால் விளங்கினார். அதற்காக, இந்த நாடும் இந்நாட்டு மக்களும் கர்பாலுக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளனர்.

மாட்டுக்கார பையன் கர்பால் மகத்தான தலைவரானார். இன்றைய தினத்திலிருந்து அவர் நம்முடன் இருக்க மாட்டார். ஆனால், நமது நாட்டின் மற்றும் நமது மக்களின் மகத்தான நல்வாழ்க்கைக்காக நமது நாடு ஒரு சமய சார்பற்ற நாடு என்பது நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பது போன்ற பல முக்கிய பொறுப்புகளை நம்மிடம் ஒப்படைத்துள்ளார். அவற்றுக்காக போராட வேண்டியது நமது கடமை. போராட்டம் ஒன்றே வெற்றிக்கான ஒரே வழி. “ஒருவர் எப்போதும் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்க முடியாது. ஆனால், அதற்காக முயற்சி செய்யாமலும் இருக்கக் கூடாது” என்று கர்பால் நமக்கு ஊக்க மூட்டியுள்ளார். நமது உரிமை, நீதி போன்றவற்றுக்காக நாம் போராடுவோம். அதன் வெற்றியை கர்பாலுக்கு காணிக்கையாக படைப்போம்.

செம்பருத்தி குழுவினர்