தெரிவுக்குழுவில் பங்கேற்க மாட்டோம்! சர்வதேச அனுசரணையுடன் பேசத் தயார்! கூட்டமைப்பு திட்டவட்டம்

TNA-Govt-metingஇலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் தீர்வு காண்பதற்கு சர்வதேச அனுசரணையுடன் பேசுவதற்கு நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம். ஆனால் அரசு நியமித்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கெடுக்க மாட்டோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாட தயாராக இருக்கின்றோம். எனினும் தீர்வு காண்பதற்கு இலங்கை அரசு நியமித்துள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைய வேண்டும் என்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தார்.

இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சின்போது தலைமை தாங்கியவரும், கடந்த பெப்ரவரி மாதம் தென்னாபிரிக்காவுக்குச் சென்ற அரசதரப்புக் குழுவுக்குத் தலைமை தாங்கியிருந்தவருமாவார்.

இலங்கை அரசின் சிரேஷ்ட  அமைச்சரான டியூ குணசேகரவும் அதே கருத்தைப் பிரதிபலித்திருந்தார்.

இவ்விரு அமைச்சர்களின் கருத்துகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று அதன் ஊடகப் பேச்சாளரும் பேச்சுக் குழுவின் உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து கூறுகையிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

சர்வதேச அனுசரணையுடன் அரசுடன் பேசுவதற்கு நாம் எப்போதும் தயாராக இருக்கின்றோம். ஆனால் அரசு நியமித்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் நாம் ஒருபோதும் பங்கேற்கமாட்டோம்.

தெரிவுக்குழுவின் ஊடாகவே தீர்வு என சூளுரைக்கும் அரசு அதை தென்னாபிரிக்க அரசிடம் திட்டவட்டமாகக் கூறியிருக்கலாமே?

தென்னாபிரிக்கா அரசு தெரிவித்த கருத்துகளுக்கு ஒப்புக்கொண்டுவிட்டு இங்கு வந்து வீரவசனம் பேசுவது நாகரிகமற்ற செயல்.

தமிழர்களை ஏமாற்றுவது போன்று சர்வதேச சமூகத்தையும் இலங்கை அரசு ஏமாற்ற முயற்சிப்பது நாட்டுக்கே பாதகம் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

TAGS: