மூழ்கியக் கப்பல்: மாலுமிக்கு எதிராக பிடி-ஆணை கோரப்பட்டுள்ளது

south_korea_searchதென்கொரியாவில் கடந்த புதன்கிழமையன்று 475 பேருடன் கடலில் மூழ்கிய கப்பலின் தலைமை மாலுமியை கைதுசெய்வதற்கான பிடி-ஆணை ஒன்றை பிறப்பிக்குமாறு சட்ட நடவடிக்கை அதிகாரிகள் நீதிமன்றம் ஒன்றிடம் கோரியுள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கப்பல் ஊழியர்கள் வேறு இரண்டு பேர் மீதும் நீதிமன்றத்தில் பிடி-ஆணை கோரப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் நடந்த நேரத்தில் கேப்டன் தலைமையில் கப்பல் இயக்கப்பட்டிருக்கவில்லை, மாறாக இளநிலை அதிகாரி ஒருவர் கட்டுப்பாட்டில்தான் கப்பல் இயக்கப்பட்டிருந்தது என தெரியவந்துள்ளது.

இதனிடையே, மூழ்கிய இந்தக் கப்பலில் இருந்து உயிரோடு காப்பாற்றப்பட்டிருந்த பள்ளிக்கூடத்தின் துணைத் தலைமை ஆசிரியர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிகின்றன.

இதனிடையே கடலில் மூழ்கி தேடும் மீட்புக் குழுவினர் முதல்தடவையாக கப்பலுக்குள் நுழைந்து தேட முடிந்துள்ளது.

இந்தக் கப்பலின் கட்டுப்பாட்டு அறை மற்றும் உணவு விடுதி ஆகிய இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அங்கு உயிர் தப்பியவர்கள் எவரையும் அவர்களால் காணமுடியவில்லை.

தவிர வேறு சில மூழ்கித் தேடும் மீட்புக் குழுவினரால் இந்தக் கப்பலின் சரக்கு வைக்கும் தளத்தில் நுழைய முடிந்தது. ஆனால் அதைத் தாண்டி செல்ல முடியாத அளவுக்கு அந்த இடத்தில் தடங்கல்கள் இருந்தன. மேலும் கப்பலின் வெள்ளைச் சுவர்களையே கையால் தொட்டுப்பார்த்துதான் அவர்களால் விளங்கிகொள்ள முடிந்தது என்ற அளவுக்கு நீர் கலங்கலாக இருந்துள்ளது.

29 பேர் இறந்திருப்பது இதுவரை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சுமார் 270 பேரின் கதி என்ன ஆனது என்று இன்னும் தெரியவராமல் உள்ளது.

மூழ்கிக் கிடக்கும் இந்த கப்பலுக்குள் பிராணவாயுவை அனுப்ப மீட்புக் குழுக்கள் முயல்கிறார்கள். யாரேனும் உயிரோடு இருந்தால் அவர்கள் சுவாசிக்க காற்று வேண்டும் என்பது இந்நடவடிக்கையின் நோக்கம். -BBC