பாக்.: பள்ளிக்கூட நூலகத்திற்கு ஒஸாமா பின் லாடன் பெயர்

Osama bin Ladenபாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பெண்களுக்கான மதப் பள்ளி ஒன்று தனது நூலகத்திற்கு அல்கைதா அமைப்பின் முன்னாள் தலைவர் ஒஸாமா பின் லாடனின் பெயரை வைத்துள்ளது.

2011ஆம் ஆண்டு அமெரிக்க அதிரடிப் படையினரால் கொல்லப்பட்டிருந்த ஒசாமா பின்லாடனை, இஸ்லாத்துக்காக உயிர்த் தியாகம் செய்தவர் என இந்தப் பள்ளிக்கூடம் சார்பாகப் பேசவல்லவர் வர்ணித்துள்ளார்.

இந்தப் பள்ளியை நடத்துபவர் கடும்போக்கு மதபோதகரான மௌலானா அப்துல் அஜீஸ், இஸ்லாமாபாத்தின் சிகப்பு பள்ளிவாசலில் தொழுகையை நடத்திவைக்கும் இமாம்களில் ஒருவராகவும் இருக்கிறார்.

2007ஆம் ஆண்டு கடும்போக்கு இஸ்லாமியவாதிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் ஒரு வாரம் காலம் சண்டைகள் நடந்த இடம் இந்த சிகப்பு பள்ளிவாசல் ஆகும்.

நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்த அந்த சம்பவம், பாகிஸ்தானில் ஆயுததாரிகள் வரிசையாக பல தாக்குதல்களை நடத்துவதற்கு தூண்டுதலாக அமைந்திருந்தது. -BBC