தேசிய மீனவர் ஆணையம் அமைக்கப்படும்: ராஜ்நாத் சிங்

  • திருச்சியில் பேட்டியளிக்கிறார் பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங்.
    திருச்சியில் பேட்டியளிக்கிறார் பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங்.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர்கள் மட்டுமல்லாது நாட்டிலுள்ள அனைத்து மாநில மீனவர்களின் நலன்களைக் காக்கும் வகையில் தேசிய மீனவர் ஆணையம் அமைக்கப்படும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் உறுதியளித்தார்.

பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரசாரம் செய்ய தமிழகம் வந்துள்ள அவர், திருச்சியில் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து விடப்பட்டிருக்கிறது. திமுகவும், அதிமுகவும் ஆட்சிக்கு வந்தாலும் ஒருவரையொருவர் பழிவாங்கவே நினைக்கின்றனர். இந்த இரு கட்சிகளிடம் தமிழகம் சிக்கி சீரழிகிறது.

இந்த நிலையில்தான், தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்கும் வகையில் பாரதிய ஜனதா தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவாகியிருக்கிறது. அதிமுக, திமுகவுக்கு மாற்றாக உருவாகியுள்ள இந்தக் கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும்.

இளைஞர்கள் அரசியலுக்கு நிச்சயம் வர வேண்டும். அப்போதுதான் மாற்றத்தையும், ஊழல் இல்லாத ஆட்சியையும் உருவாக்க முடியும். தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி நிச்சயம் 20 இடங்களைக் கைப்பற்றும்.

இந்திய – இலங்கை அரசின் ஒப்பந்தத்தின்படி இலங்கைத் தமிழர்களின் நலன் காக்க 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை இந்திய அரசு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யத் தவறிவிட்டது. மேலும் ராஜதந்திர ரீதியாகவும், ராஜீய ரீதியாகவும் இந்தியா தோல்வியடைந்துவிட்டது.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் அண்டை நாடான இலங்கையுடன் நேச உறவு கொண்டு தமிழர்களைப் பாதுகாக்கவும், அமைதிக்கும் பாரதிய ஜனதா கட்சி பாடுபடும்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன், காவிரிப் பிரச்னையில் கர்நாடக மாநில அரசு எந்த நிலையை எடுத்தாலும், அதற்கு முக்கியத்துவம் தராமல் நெடுநாளாக நிலவிவரும் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சேதுசமுத்திரத் திட்டம் கைவிடப்படும்: மத்தியில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தால் சேது சமுத்திர திட்டம் கைவிடப்படும். கூட்டணியிலுள்ள வைகோ போன்ற தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் பாரம்பரிய சின்னத்தை நாங்கள் ஒருபோதும் அழிக்கவிட மாட்டோம்.

தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி 272-க்கு மேல் 300 இடங்களில் வென்று,அறுதிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும். நரேந்திர மோடிதான் பிரதமர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் அமைத்துள்ள கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளே போதுமானது. தேர்தலுக்குப் பின்னர் மற்றக் கட்சிகளைச் சேர்த்துக் கொள்ளும் நிலை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வராது.

குஜராத் மாநிலம் பலதுறைகளில் வளர்ச்சி பெறவில்லை, தமிழகத்தைவிட அந்த மாநிலம் பின்தங்கிதான் இருக்கிறது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளாரே என்று கேட்கிறீர்கள். 2008-ம் ஆண்டிலேயே ராஜீவ் காந்தி ஆராய்ச்சி அறக்கட்டளை வளர்ச்சித் திட்டங்கள் குஜராத்த்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்ல அமெரிக்க நாடாளுமன்றக் குழு கூட குஜராத் வளர்ச்சித் திட்டங்களை பாராட்டியுள்ளது.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. நாங்கள் பிரித்தாளும் செயலில் ஈடுபட மாட்டோம். பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் நாடு சிதறுண்டு போகும் என்று காங்கிரஸார் கூறுகின்றரே என்று கேட்கிறீர்கள்.

குஜராத்தில் 12 ஆண்டுகளாக மோடிதான் முதல்வர். அந்த மாநிலம் சிதறுண்டு போகவில்லை. வளர்ச்சி அடைந்து வருகிறது. அதுபோல பாஜக ஆட்சிக்கு வந்தால் நாடு சிதறுண்டு போகாது என்றார் ராஜ்நாத் சிங்.

பேட்டியின் போது, இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனரும், பெரம்பலூர் தொகுதி வேட்பாளருமான பாரிவேந்தர் என்கிற டி.ஆர். பச்சமுத்து, திருச்சி தேமுதிக வேட்பாளர் ஏ.எம்.ஜி. விஜயகுமார், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் தமிழிசை சௌந்தர்ராஜன், பார்த்திபன், மோகன்ராஜுலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

TAGS: