சிரியா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது: பிரான்ஸ் ஜனாதிபதி

french-president-francois-hollandeசிரியா ஜனாதிபதி பஷார் அல் அசாத் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துகின்றார் என பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்கோய்ஸ் ஹோலண்டே தெரிவித்துள்ளார்.

சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய போராட்டம் இன்னும் முடியாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி, சிரிய அரசு மக்களை கொன்றுகுவிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை தொடர்ந்து இரசாயன ஆயுதங்களை முற்றிலுமாக அழித்துவிட சிரியா அரசு முடிவு செய்தது.

இந்நிலையில் தொடர்ந்து இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி வருவதாகவும், ஆயினும் தகுந்த ஆதாரங்கள் இல்லை என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்கோய்ஸ் ஹோலண்டே தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் வெளிவிவகாரத்துறை அமைச்சர் கூறுகையில், இரசாயன ஆயுத தாக்குதல்கள் பொதுமக்கள் மீது நடத்தப்பட்டது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், லெபனானின் எல்லைப் பகுதியில் சிரியாவின் வடமேற்கு பகுதியில் உபயோகப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இதை திட்டவட்டமாக நிரூபிப்பதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த ஏப்ரல் மாத முதல் வாரத்தில் “குளோரின் கேஸ்” என்ற விஷவாயு உபயோகப்படுத்தப்பட்டு, 100 பேர்களுக்கு மேல் சுவாசிக்க இயலாமல் மூச்சுத்திணறி இறந்துள்ளனர்.

ஆனால் இதற்கு அல்கொய்தா தீவிரவாதிகள் தான் காரணம் என சிரிய அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.