ஓரினச் சேர்க்கை: மறுசீராய்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது உச்சநீதிமன்றம்

supreme_court_indiaஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் எனக் கூறி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை இந்திய உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமையன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

தன்னார்வ தொண்டு நிறுவனமான நாஸ் அமைப்பு உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மறுசீராய்வு மனு, இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் மற்றும் நீதிபதிகள் ஆர்.எம்.லோத்தா, எச்.எல்.தத்து, சுதான்ஷு ஜோதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அவர்கள் அந்த மனுவை ஏற்றுக்கொண்டனர்.

மேலும் இந்த மனு மீதான வெளிப்படையான விசாரணைக்கு ஒப்புக்கொண்ட நீதிபதிகள், அடுத்த வாரம் இதன் மீதான விசாரணை துவக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இடையில் பரஸ்பர ஒப்புதலுடன் மேற்கொள்ளப்படும் ஓரினச் சேர்க்கை குற்றச்செயல் இல்லை என்று டில்லி உயர்நீதிமன்றம் முன்னதாக தீர்ப்பளித்துள்ளது.

இதைத்தொடர்ந்து ஓரினச் சேர்க்கையை குற்றமாக்கும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவை ரத்து செய்து டில்லி உயர்நீதிமன்றம் அளித்த முந்தைய தீர்ப்பை, இந்திய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அப்போது சட்டப்பிரிவை மாற்றும் அதிகாரம் இந்திய நாடாளுமன்றத்துக்கே இருக்கிறது என்று கூறியதோடு ஓரினச் சேர்க்கை என்பது நீதிமன்றம் தலையிடக்கூடிய விவகாரம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியது.

மேலும் அந்த விசாரணையை மேற்கொண்ட நீதிபதிகள் சிங்வி மற்றும் முக்கோபாத்யாய தலைமையிலான அந்த அமர்வு, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377ன் கீழ், ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும், அந்த சட்டத்தின்படி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு ஆயுள் சிறை தண்டனை வரை அளிக்கப்படலாம் என்றும் கூறி தீர்ப்பளித்துள்ளது.

2001ஆம் ஆண்டில் நாஸ் அறக்கட்டளை எனப்படும் எய்ட்ஸ் மற்றும் பாலியல் சுகாதாரத்திற்காக செயல்படும் ஒரு அமைப்பு டில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை பதிவு செய்திருந்தது.

அதில் ஒருவரின் பாலியல் விருப்பத்தின் அடிப்படையில் அந்த நபர் சட்டரீதியில் குற்றவாளியாக கருதப்படும், இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவை திருத்த வேண்டும் என்று கோரி மனு அளிக்கப்பட்டது.

இதை அப்போது விசாரித்த டில்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் அஜித் பிரகாஷ் ஷா மற்றும் எஸ்.முரலிதா ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு, வயதுக்கு வந்தவர்களுக்கு இடையிலான பரஸ்பர சம்மதத்துடன் மேற்கொள்ளப்படும் ஓரினச் சேர்க்கை சட்டப்படி குற்றமற்றது என்று 2009ம் ஆண்டில் தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமும், மற்ற பல அரசியல், மத மற்றும் சமுகக் குழுக்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, இந்த சட்டப்பிரிவினை மீண்டும் சேர்க்க அப்போது வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டு

இதே சமயம், தமிழ்நாட்டில், ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடைவிதிக்கக் கோரி விலங்குகள் நலவாரியம் தரப்பு இந்திய உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், இதற்கு தடை விதிக்க முடியாது என்று திடமாக எடுத்துரைத்து தமிழக அரசு தரப்பு அதன் இறுதி வாதத்தில் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராதாகிருஷ்ணன் மற்றும் பி.சி.கோஷ் ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு முன்பு நடைபெற்ற இந்த விசாரணையில், தொடர்ந்து விலங்குகள் நலவாரியம் தரப்பு தனது இறுதி வாதத்தை தொடங்கியது.. வரும் வியாழக்கிழமை ஒத்திவைக்கப்பட்ட இந்த வாதத்தின் தொடர்ச்சி அன்றோடு நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. -BBC

TAGS: