தமிழகம், புதுச்சேரியில் இன்று வாக்குப் பதிவு

electionஇந்திய மக்களவை தேர்தல் 9 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டு, ஐந்து கட்ட வாக்குப்பதிவு ஏற்கனவே முடிவடைந்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 11 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று ஆறாவதுகட்ட வாக்குபதிவு நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் 39 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. புதுச்சேரி மாநிலத்தில் ஒரு தொகுதி உள்ளது.

தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் ஓட்டுப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 500 வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மற்றும் ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களும், நேற்று அந்தந்த வாக்குச்சாவடி ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, வாக்களிப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

நேற்றிரவு வாக்கு சாவடிகளில் வாக்குப் பதிவு எந்திரங்கள் பொருத்தப்பட்டு, வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

அனைத்து தொகுதிகளிலும் இன்று காலை சரியாக 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை இடைவிடாமல் நடைபெறும். மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வரும் அனைவரும் ஓட்டுப்போடலாம்.

தங்கள் தொகுதியில் உள்ள எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்றாலும், வாக்குச்சாவடிக்கு சென்று ‘நோட்டா’ பொத்தானை அழுத்தி, “யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை” என்பதை பதிவு செய்துவிட்டு வரலாம். இந்த வசதி முதல்முறையாக பாராளுமன்ற தேர்தலில் இப்போதுதான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு, ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்துக்கு கொண்டு செல்லப்படும். அங்கு ஒரு அறையில் வைக்கப்பட்டு, அந்த அறை ‘சீல்’ வைக்கப்படும். இந்தியா முழுவதும் மீதமுள்ள 3 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு, மே மாதம் 16-ந்தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

தமிழ்நாட்டில் தேர்தல் பாதுகாப்பு பணியில், பொலிஸார், முன்னாள் ராணுவத்தினர், மத்திய ரிசர்வ் பொலிஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், துணை ராணுவத்தினர் என ஏறக்குறைய ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

வாக்குச்சாவடிகளில் எந்தவித சிரமமும் இல்லாமல் வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 18 ஆயிரம் வாக்குச்சாவடிகள் வெப்-காஸ்டிங் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படுகின்றன. மேலும், 2 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வீடியோ கேமராக்கள் மூலம் படப்பதிவு செய்யப்பட உள்ளன.

கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்கு தேவையான பந்தல்கள், தேவையான அளவுக்கு தண்ணீர், உடல் ஊனமுற்றோர் எளிதாக ஓட்டுப்போடுவதற்காக சாய்வு பாதை (ரேம்ப்) போன்ற வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் எக்காரணம் கொண்டும் ஓட்டுப்போட அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. வாக்காளர் அடையாள அட்டை வைத்து இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறவில்லை என்றால் ஓட்டுப்போட முடியாது.

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள், தேர்தல் துறை அனுமதித்துள்ள, புகைப்படத்துடன் கூடிய 12 அடையாள அட்டைகளில் ஒன்றை காண்பித்து ஓட்டுப்போடலாம்.

தமிழகம் முழுவதும் இருந்து தேர்தல் தொடர்பான புகார்களை அனைத்து தரப்பினரும் சொல்வதற்கு வசதியாக, சென்னை தலைமைச்செயலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான புகார்களை, 1950 என்ற இலவச எண்ணுடன் தொடர்புகொண்டு தெரியப்படுத்தலாம்.

தேர்தலை அமைதியாகவும், நியாயமாகவும் நடத்துவதற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரின் நேரடி மேற்பார்வையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

சென்னையில் உள்ள வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை ஆகிய 3 தொகுதிகளிலும் 37 லட்சத்து 75 ஆயிரத்து 380 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக வடசென்னை தொகுதியில் 1,051 வாக்குச்சாவடிகளும், மத்திய சென்னையில் 1,153 வாக்குச்சாவடிகளும், தென்சென்னையில் 1,133 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 4,072 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக 42 வேட்பாளர்கள் தென்சென்னை தொகுதியில் களத்தில் உள்ளனர். இதனால், இந்த தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதேபோல், மத்திய சென்னையில் 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால், அங்கு 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. வடசென்னையில் 40 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் அங்கு 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

பாராளுமன்ற தேர்தலுடன் ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடப்பதால், அந்த சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 316 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள்  ஓட்டுபோட உள்ளனர்.

TAGS: