பத்மநாப சுவாமி கோயில் சொத்துகள் தணிக்கை: வினோத் ராய் நியமனம்

திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோயில் சொத்துகளை தணிக்கை செய்ய முன்னாள் மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராயை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை நியமித்துள்ளது.

மேலும், அந்தக் கோயிலை திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையிலான 5 பேர் குழுவினர் நிர்வகிப்பார்கள் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பத்மநாப சுவாமி கோயில் நிலவரம் குறித்து உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்பிரமணியன் ஆய்வு செய்து தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதிகள் ஆர்.எம். லோதா, ஏ.கே. பட்நாயக் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவின் விவரம்:

திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையில் 5 பேர் கொண்ட குழு பத்மநாப சுவாமி கோயில் நிர்வாகத்தை நிர்வகிப்பார்கள். அந்தக் குழுவில் பத்மநாப சுவாமி கோயிலின் தலைமை பூசாரி, தந்திரி, 2 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். அதில் ஒருவர் கேரள அரசிடம் ஆலோசனை நடத்திய பிறகு நியமிக்கப்படுவார்.

கோயில் சொத்துகளையும், கணக்குகளையும் முன்னாள் மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராய் தணிக்கை செய்வார்.

பத்மநாபசுவாமி கோயிலின் முன்னாள் நிர்வாகி ஒருவரும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரும் கோயிலின் செயல் அதிகாரிகளாக இருப்பார்கள் என்று உத்தரவிட்டனர்.

பின்னணி: கேரள மாநிலம் பத்மநாப சுவாமி கோயிலின் பாதாள அறைகளில் இருந்து பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் கண்டெடுக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவி செய்வதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்பிரமணியன் கோயில் நிலவரம் குறித்து ஆய்வு செய்து கடந்த 15ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், பத்மநாப சுவாமி கோயில் சொத்துகளை நிர்வகிப்பதில் முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றம்சாட்டியிருந்தார். இதை புதன்கிழமை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் கவலை அளிக்கின்றன. இது குறித்து தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்திருந்தனர்.

TAGS: