மதமாற்ற விவாகரத்தில், தோற்றது நீதியா? வீழ்ந்தது தர்மமா?

K. Arumugam_suaramகா. ஆறுமுகம். தீபாவும் வீரனும் 2003-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்து மத முறைப்படி  திருமணம் செய்து கொண்டனர். அத்திருமணம் முறைப்படி திருமணச் சட்டத்தின் கீழ் பதிவும் செய்யப்பட்டது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு 2012-இல் வீரன் இஸ்லாத்தைத் தழுவினார். அவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும் 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

தீபாவின் கதை

இஸ்வான் வீரன் அப்துல்லா என்று பெயர் மாற்றிக் கொண்ட தனது கணவருடன்  தீபாவால் ஓர் இந்துவாக சட்டப்படி வாழ இயலாது.

தீபாவின் எதிர்காலம் சட்டப்படி எப்படி அமையும்? அவர்களது குழந்தைகள் இந்துவாக வளர்வார்களா அல்லது முஸ்லீமாக வளர்வார்களா? யாரிடம் வளர்வார்கள்?

இதற்கு யார் பதில் கூறினாலும் அதில் நீதியும் தர்மமும் இருந்தால் பதில் இதுவாகத்தான் இருக்கும்.

முதலாவதாக, தீபா இஸ்லாத்தைத் தழுவ விரும்பாததால் அவர் வீரனிடமிருந்து விவாகரத்தைப் பெற வேண்டும்.

3 deepaஇரண்டாவது, அவர்களின் குழந்தைகள் இருவரும் அவர்களது பெற்றோர் இந்துக்களாக வாழ்ந்த போது பிறந்ததால் அவர்கள் பிறப்பால் இந்துக்கள். எனவே அவர்கள் 18 வயதுக்குக் குறைவாக இருந்தால் அவர்கள் மதம் மாறுவதை அவர்களது பெற்றோர் அல்லது கவனிப்பாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று அரசமைப்பு சட்டம் 12 (3) சொல்கிறது.

இவர்களது பெற்றோர் வெவ்வேறு மதத்தில் இருப்பதால், அதை இருவரிமே முடிவு செய்ய இயலாத சூழ்நிலை உள்ளது. அதனால் அக்குழந்தைகளுக்கு 18 வயது வரும் வரையில் அவர்களை மதம் மாற்ற இயலாது. எனவே இரு குழந்தைகளும் 18 வயது வரை இந்துக்களாகவே இருக்க வேண்டும்.

அமைச்சரவையின் முடிவு (2009) இப்படித்தான் இருந்ததாக முன்னாள் நீதித்துறை அமைச்சர் முகமட் நஸ்ரி கூறுகிறார்.

ஆனால், இஸ்லாத்தைத் தழுவிய வீரன் 2012-இல் தனது இந்து மனைவியான தீபாவுக்குத் தெரியாமல் இந்துக்களாக இருந்த தனது குழந்தைகளின் மதத்தை இஸ்லாமாக மாற்றினார். பிறகு குழந்தைகள் இருவரும் தன் பாதுகாப்பில் வாழ்வதற்கான அனுமதியையும் சிரம்பான் ஷரியா நீதிமன்றத்தில் பெற்றார்.

இது சட்டப்படி தவறு என்றும், தனக்கு விவாகரத்தும் குழந்தைகளும் வேண்டும் என்றும்   கடந்த ஆண்டு தீபா வழக்குத் தொடுத்தார்.

இரண்டு தரப்பினரையும் விசாரித்த சிரம்பான் உயர் நீதீ மன்ற நீதிபதி சபாரிய முகமாட் யுசோப், 7.4.2014-இல் தீபாவுக்கு நீதி வழங்கினார். அதாவது அவருக்கு விவாகரத்தும் இனி குழந்தைகள் அவரிடம் தான் இருக்க வேண்டும் என தீர்பளித்து, வீரன் வாரம் ஒரு முறை குழந்தைகளைக் காண அனுமதியளித்தார்.

இதன்வழி ஷரியா நீதிமன்றத்தின் முடிவு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் குழந்தைகளின் மதமாற்றம் பற்றிய முடிவை நீதிமன்றம் செய்யவில்லை.

இஸ்வான் என்ற வீரனின் கதை

2 veeranவீரன் தான் ஒரு முஸ்லிம் என்றும் குழந்தைகளின் மதம் இஸ்லாம் என்பதால், இந்துவாக உள்ள தீபாவால்  அவர்களை வளர்க்க இயலாது, அதற்கான தகுதி தனக்கு மட்டுமே உண்டு என்று வாதிட்டார். இஸ்லாமிய அரசு சார்பற்ற அமைப்பான காசே சயாங்கில் பணியாற்றும் வீரன் தீர்ப்பிற்குப் பின்னர் கோபத்துடன் காணப்பட்டார்.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்போவதாக அறிவித்தார்.

உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய இரண்டாவது நாள் காலையில் தீபாவின் வீட்டுக்குக் காரில் வந்த வீரன், தனது மகனைக் கைப்பற்றினார். தற்காக்க வந்த தீபாவை தள்ளிவிட்டு தன் மகனுடன் தப்பிச் சென்றார்.

குழந்தைகளைப் பாதுகாக்கும் தகுதியை ஷரியா நீதிமன்றம் தனக்கு கொடுத்துள்ளதாக வீரன் வாதிடுகிறார்.

உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வீரன் செய்தது ஒரு கிரிமினல் ஆள்கடத்தல் குற்றம் என்று தீபா போலிஸில் புகார் செய்தார். ஆனால், போலிஸ் இது இரண்டு நீதிமன்றங்களுக்கும் இடையே உள்ள பிரச்சனை என்பதால் தலையிட இயலாது என கையைக் கழுவியது.

குழந்தைகளின் கதை

இந்துக்களாக இருந்த பெற்றோருக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளும் (மகன் 6 வயது மகள் 9 வயது) வீரனால் இஸ்லாத்திற்கு மாற்றப்பட்டனர். இப்போது மகன் தாயைப் பிரிந்தும் மகள் தந்தையை பிரிந்தும் சட்டத்திற்குப் புறம்பான வகையில் மதமாற்றம் செய்யப்பட்ட சூழலில் இருக்கின்றனர்.

 சட்டத்தின் கதையிலுள்ள இயலாமை

ஒருவர் மேஜரான (வயது 18) பிறகுதான் தனது சமயத்தை முடிவு செய்யும் தகுதியைப் பெறுவர். ஆனால், ஒரு மைனர் (18 வயதுக்கு குறைவானவர்) மதமாற்றம் செய்ய, 1966 குழந்தை பராமரிப்பு சட்டமும் அரசமைப்பு சட்ட விதி 11(1), 12(3) மற்றும் 12(4) சட்டமும் அவருடைய கார்டியனின் (Guardian) அனுமதி வேண்டும் என்கிறது

4 courtஇதை 1986-இல் சூப்ரிம் கோர்ட் ஒரு வழக்கில் நிலைநாட்டியது. சுசி தியோ என்பவர் தனது வயது 17 வயது 8 மாதம் இருக்கும் போது இஸ்லாத்தைத் தழுவினார். சுசி தியோவின் தந்தை தியோ யெங் ஹுவாட் மதமாற்றத்தை ஆட்சேபித்து அதைச்செய்த பாசிர் மாஸ் காடி மீது வழக்குத் தொடுத்தார்.

அந்த வழக்கு சூப்ரிம் கோர்ட் வரை சென்றது. அதன் முடிவு 18 வயதுக்கு குறைவானவரை மதமாற்றம் செய்யும் உரிமை பெற்றோர் அல்லது கார்டியனுக்கு மட்டுமே உள்ளது என்பதாகும்.

பெற்றோர்களில் ஒருவர் மட்டுமே மதமாற்றத்தைச்  செய்ய முடியுமா?

முடியாது என்ற வகையில் சபா உயர் நீதிமன்றம் 2003-இல் தீர்ப்பு வழங்கியது. இது  சாங் ஆ மீ (Chang Ah Mee) என்ற தாய், இஸ்லாத்தைத் தழுவிய தனது கணவர் தனது 2 வயது மகளை இஸ்லாத்துக்கு மாற்றியதை எதிர்த்து தொடுத்த வழக்காகும்.

2004-இல் ஷாமலா சத்தியசீலன் என்பவருக்கும் இதே கதிதான். இவரது கணவர் மருத்துவர் ஜெயகணேஷ் இஸ்லாத்தைத் தழுவியதோடு 8 மற்றும் 9 வயதுடைய அவர்களுடைய குழந்தைகளை இஸ்லாத்திற்கு மாற்றினார்.

இந்த வழக்கில் குழந்தைகளைப் பராமரிக்கும் உரிமை ஷாமலாவுக்கு வழங்கப்பட்டது ஆனால், அவர் சமயக்கல்வியையும் பன்றி உணவுகளையும் குழந்தைகளுக்கு வழங்கக்கூடாது என்றும் அப்படி செய்தால் பராமரிப்பு உரிமை ரத்து செய்யப்படும் என்று உத்தரவிடப்பட்டது.

அதோடு குழந்தைகளின் சமய உரிமை இரு பெற்றோருக்கும்  இருக்கும் என்றது. முக்கியமாக ஷரியா நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை விசாரிக்கும் உரிமை கிடையாது என்றும் தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கு மேல் முறையீட்டுக்காக 2010 நவம்பர் 12ஆம் தேதி, கூட்டரசு நீதிமன்றத்திற்கு வந்த போது ஷாமலா ஆஜராக வில்லை (அவர் குழந்தைகளுடன் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்). அதை காரணம்காட்டி நீதிபதிகள் தீர்ப்பு வழங்க மறுத்து விட்டனர். ஷாமலா ஆஜராகவில்லை என்பதற்காக முக்கியமானதாக கருதப்பட்ட மதம் மாற்றம் சார்புடைய சட்ட கேள்விகளுக்கு கூட்டரசு நீதிமன்றம் பதிலளிக்க தவறி விட்டது வருத்தத்தையும் அதன் இயலாமையையும் காட்டுவதாகவே உள்ளது.

இந்த வருடம் 2014இல் நாம் காண்பது தீபாவின் கதையாகும்.

சட்டம் எதைத்தான் சொல்கிறது?

தீபா-வீரன் இஸ்வான் வழக்கின் அடிப்படை மோதலுக்குக் காரணம் கூட்டரசு அரசமைப்பு சட்டம் 121(1A) படி சிவில் உயர் நீதிமன்றத்திற்கும் மற்றும் அதற்கு கீழ் உள்ள நீதிமன்றங்களுக்கும் ஷரியா நீதிமன்றங்களுக்கு உட்பட்ட தீர்ப்புகளுகளில் தலையிட இயலாது என்பதாகும்.

Article 121(1A)மற்றொரு பிரச்சனை, பிரிவு 3 மற்றும் பிரிவு 51(1) சீர்திருத்த சட்டம் (திருமணம் மற்றும் விவாகரத்து) சட்டத்தில் உள்ளது (LRA 1976). இச்சட்டம் முஸ்லீம்களுக்கு செயல்படுத்த முடியாதென பிரிவு 3 குறிப்பிடுகிறது. பிரிவு 51(1) படி சிவில் திருமணம் செய்து கொண்ட ஒருவர் இஸ்லாத்திற்கு மதம் மாறினால், மற்றொருவர் சிவில் நீதிமன்றத்தில் விவாகரத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்கிறது.

ஒருவர் இஸ்லாத்துக்கு மாறினால் அவருக்கு சிவில் சட்டத்தின் கீழ் தன் திருமணத்தை முறித்துக் கொள்ள எவ்வித உரிமையும் இல்லை. எனவே இஸ்லாத்தைத் தழுவிய வீரன் ஷரியா நீதிமன்றத்தின் வழிதான் திருமண முறிவை பெற இயலும்.

ஆனால் தனது இரண்டு பிள்ளைகளின் பராமரிப்பு உரிமையை சிவில் நீதிமன்றத்தில் பெற்ற தீபாவின் வெற்றி மிக குறுகிய காலமே நீடித்தது காரணம் வீரன் உயர் நீதிமன்றத்தின் ஆணையை மீறி ஒரு பிள்ளையைக் கடத்திச் சென்றார்.

முடிவுதான் என்ன?

திருமணத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வர விரும்புவர்கள் மத மாற்றத்தை ஒரு வழி முறையாக பயன் படுத்துவதை குற்றமாக்க வேண்டும். மதமாற்றம் என்பது முறையான விவாகரத்திற்கு பிறகுதான் என்றவகையில் இருக்க வேண்டும். அப்படி நடைமுறை படுத்த இயலவில்லை என்றால் மதம் மாறுபவரின் விவாகரத்து மனுவை சிவில் நீதிமன்றங்கள் செவிமடுக்க வேண்டும்.

அரசமைப்பு சட்டம் 121(1A) மாற்றப்பட வேண்டும். அதை மாற்றினால்தான் விவாகரத்து சார்ந்த வழக்குகளில் மதமாற்றம் செய்தவர்களும் சிவில் நீதிமன்றம் வழி நீதி கோரலாம்.

இதைச் செய்ய அரசியல் துணிவு வேண்டும். அது தற்போது இருப்பதாக தெரியவில்லை. இதற்கிடையில் ஹுடுட் சட்டம் வேண்டும் என்ற ஒரு முட்டாள்தனமான அரசியல் நாடகம் அரகேற்றம் கண்டுள்ளது!