900 பத்தாது, சுரண்டலுக்குப் பரிகாரம் வேணும்!

Minimum wageதமிழினி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மனிதவள அமைச்சு மேற்கொண்ட ஓர் ஆய்வின் மூலம் நமது நாட்டு தொழிலாளர்கள் மூன்றில் ஒரு பகுதியினர் 720 ரிங்கிட்டிற்கும் கீழ் வருமானம் பெறுவதாக கண்டறியப்பட்டது. அந்த ஆய்விற்குப் பின், கடந்தாண்டு தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளமான 900.00 ரிங்கிட் வழங்க வேண்டும் என்றும் அவ்வாறு வழங்கப்படாதது ஒரு குற்றம் என்றும் இந்த கொள்கை நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்டறிய சிறப்பு அமலாக்க அதிகாரிகளும் பொறுப்பமர்த்தப்பட்டுள்ளனர்.

min wage2இன்றைய பொருளாதார நிலையில் இந்த 900 ரிங்கிட்டை வைத்து ஒரு அடிப்படையான வாழ்வை வாழவே முடியாது என்பதை நாம் எல்லாருமே ஏற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும், இந்த தொகையைக் கூட முதலாளிகள் முறையாக வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன.

அண்மையில், தமிழ்ப்பள்ளியில் பணியாற்றும் தோட்டக்காரர் ஒருவர் மாதம் ஒன்றுக்கு 450 ரிங்கிட் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுவதாக குறிப்பிட்டார். 900.00 ரிங்கிட் குறைந்தபட்ட வருமானம் குறித்து அவரிடம் வினவியபோது அது குறித்து அவர் அறிந்திருப்பதாகவும் ஆனால் அதைக் கேட்கும் பட்சத்தில் இருக்கிற இந்த வேலையும் பறிக்கப்படுகிற சூழ்நிலை இருப்பதாக குறிப்பிட்டார். இந்த சம்பளத்திற்கு இந்த  வேலையைச் செய்வதற்குப் பலர் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார். இதே நிலையினைப் பல இடங்களில் காணக் கூடியதாய் இருக்கிறது.

இன்றுவரை 700.00 ரிட்டிற்கும் குறைவாக சம்பளம் பெறும் தொழிலாளர்களே அதிகம் இருக்கின்றனர். இவர்களின் பெரும்பான்மையானவர்கள் குத்தகை தொழிலாளர்களாக அரசாங்க அலுவலகம், மருத்துவமனை, பள்ளிக்கூடம், சுத்தம் செய்யும் பணியில் இருப்பவர்களாக, பாதுகாப்பு துறையில் வேலை செய்யும் ஒப்பந்த பணியாளர்களாக இருக்கின்றனர்.  இந்த 900 குறைந்தபட்ச சம்பள கொள்கையினால் நாட்டில் வறுமையில் இருப்பவர்கள் குறைந்தபட்ச பலன்களை அடைவதற்காவது அரசாங்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

ஜெயகுமாரின் விவாதம்

min dr Kumarஇது குறித்து மனிதவள அமைச்சுடனான ஒரு நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ஜெயக்குமார், பள்ளிக்குச் செல்லும் மூன்று பிள்ளைகளைக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் 3000 ரிங்கிட் தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையிலேயே குறைந்தபட்ச சம்பளமாக 1500 வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இருப்பினும், 1500 வழங்கினால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்புறும் என அரசாங்கம் கூறுவதால் மக்களின் சுமையைக் குறைக்க இரண்டு ஆலோசனைகள் முன் வைத்தார்.

சுரண்டும் உழைப்புக்குப் பரிகாரம்

குறைந்த சம்பளம் வழங்குவதால்தான் குறைந்த விலையில் உற்பத்தி செய்து நாட்டின் பொருளாதாரத்தைக் காக்க இயலும் என்று அரசாங்கம் கூறுகிறது. எனவே மக்கள் குறைந்த ஊதியத்திற்குப் பணி செய்து நாட்டின் பொருளாதாரத்திற்கு உழைக்கிறார்கள். அதனால் நாடு செழிப்படைகிறது. இப்படி வாயையும் வயிற்றையும் கட்டி  உழைப்பவர்களுக்கு அரசாங்கம் பரிகாரமாக இரண்டு செயல்களை செய்யலாம்.

முதலாவது 65 வயதிற்குப் பிறகு ஓய்வூதியம் பெறுபவர்களுக்குக் குறைந்தபட்சம் 200 ரிங்கிட் வழங்கலாம். இவ்வுதவி ஓய்வு பெற்றவர்களின் நிதிச்சுமையைக் குறைக்க உதவலாம்.

இரண்டாவது முதல் வீடு வாங்க விரும்புவர்களுக்கு நிலத்தின் விலையை அரசாங்கம் ஏற்று கட்டுமான செலவை மட்டும் வீட்டின் விலையாக நிர்ணயிக்கலாம்.

இதன் மூலம் குறைந்த பட்ச சம்பளம் பெறும் தொழிலாளர்கள் சொந்த வீட்டினைப் பெற்றிருப்பர். இதன்வழி அவர்களின் கடன் சுமையைக் குறைக்க முடியும்.