சீன, தமிழ் மொழிகளுக்கு எதிரான அரசியல்வாதிகளின் குற்றச்சாட்டுகள் – கி.சீலதாஸ்.

s1சீனம்,  தமிழ்,  ஆகிய  மொழிகளுக்கு  அரசமைப்புச்  சட்டத்தில்  பாதுகாப்பு  இருந்த  போதிலும்  அவை  கற்பிக்கப்படுவதும்,  அவற்றின்  வளர்ச்சியும்  தேசிய  ஒருமைப்பாட்டுக்கு  ஊறு  விளைவிப்பதாகச்  சில  அரசியல்வாதிகள்  குற்றம்  கண்டார்கள்.  இது  நியாயமற்ற,  ஆதாரமற்ற  குற்றச்சாட்டு.

[தமிழ்க் கல்வியும் தமிழ்ப்பள்ளியும் நமது உரிமை – பகுதி 2] 

பல  நாடுகளில்  பல  மொழிகள்  ஆட்சி  மொழியாக  இருப்பதும்,  அங்கே  தேசிய  ஒருமைப்பாடு  செழுமையாக  இருப்பதும்  கண்கூடு.  அரசமைப்புச்  சட்டத்தில்  பேச்சுரிமைக்கு  பாதுகாப்பு  கொடுத்திருப்பது  உண்மையே. (காண்க: அரசமைப்புச்  சட்டம்  10ஆம்  ஷரத்து). பேச்சுரிமை  என்பது  உண்மையைச்  சொல்லும்,  நியாயத்தைச்  சொல்லும்,  அநியாயத்தைச்  சுட்டிக்காட்டும்,  அடக்குமுறையை  வெளிப்படுத்தும்   தராதரத்தை  வெளிப்படுத்துகிறது  என்று  அடுக்கிக்கொண்டே  போகலாம்.

இன துவேஷம், சமய துவேஷம், மொழி துவேஷம், அரசத்  துரோகச்செயலை  ஊக்குவிக்கும்  பேச்சுகள்  யாவும்  குற்றமென்கிறது  நாட்டின்  1948ஆம்  ஆண்டின்  அரசு நிந்தனைச் சட்டம்.  எனவே, பேச்சுரிமை  என்பது  பல  கட்டுப்பாடுகளைக்  கொண்டது  என்பதை  மனதில்  கொண்டிருக்க  வேண்டும்.

சீனம், தமிழ்  மொழிகள்  மீது  கடும்  தாக்குதல்

மலாய்  மொழியைத்  தவிர  பிற  மொழிகள்மீது,  குறிப்பாக  சீனம், தமிழ்  ஆகியவை  மீது,  கடும்  தாக்குதல்  நிகழ்வது  இக்காலகட்டத்தில்  சர்வசாதாரணமாகிவிட்டது.  பேச்சுரிமை  என்றப்  போர்வையின்  கீழ்  பிறமொழிகளின்  அரசியல்  ரீதியான  பாதுகாப்பை  குறை  சொல்ல  இயலுமா?  அல்லது, பிற  மொழிகள்  கற்பிக்கப்படக்கூடாது  என்று  வலியுறுத்தலாமா?  இவை  மிகவும்  சங்கடமான  பிரச்சனைகளாகும்.

protest language issue சீன, தமிழ்  பள்ளிக்கூடங்களை  மூடச்சொல்வது  ஒருவகையில்  பேச்சுரிமையாகக்  கருதலாம்,  ஆனால்  அப்படிப்பட்ட கோரிக்கை  இனப் பிரச்சினை,  இன துவேஷம்  அல்லது  இனக் கலவரம்  ஆகியவற்றை ஏற்படுத்தும்  சாத்தியக்கூறுகள்  தென்பட்டால்  அது  குற்றமாகக்  கருதப்படும்.  எனவே, பேச்சுரிமைக்கும்  நிந்தனைச்  சட்டத்திற்கும்  இருக்கும்  இடைவெளி  மிகவும்  குறுகியதாகும்.  அதைப்  புரிந்துகொண்டு  செயல்படவேண்டியது  ஒவ்வொரு  குடிமகனின்  பொறுப்பாகும்.

1971 ஆம்  ஆண்டில், “தமிழ்  அல்லது  சீன  இடைநிலைப்பள்ளிகளை  ஒழிக்கவும்” என்று  பிரபல  நாடாளுமன்ற  உறுப்பினரான  மூசா s3ஹீத்தாம்  உரைக்கு  தலைப்பு  கொடுத்துப்  பிரசுரித்தது  உத்துசான்  மிலாயு  நாளிதழ். உத்துசான்  மிலாயுவின்  தலைமை  ஆசிரியரும், நாடாளுமன்ற  உறுப்பினரின்  உரைக்குத்  தலைப்பு தந்த  தலைப்புப் பொறுப்பாசிரியர்  ஆகிய  இருவரும்  1948 ஆம்  ஆண்டு  அரசுப்  பகை  ஊட்டும்  சட்டத்தின்  4(1) (c) பிரிவுகளின்  கீழ்  நீதிமன்றத்தில்  குற்றம்  சாட்டப்பட்டனர்.

இந்தப்  பிரிவின்படி  ஒருவர்  அரசுக்கு  எதிரான  எதையாவது  பிரசுரித்தால், வெளியிட்டால், விற்றால், விற்க  அனுமதித்தால், விநியோகித்தால்  என்பன போன்ற  குற்றங்களுக்காகத்  தண்டிக்கப்பட்டால், முதற்தடவை  குற்றம்  எனின்  ஐயாயிரம்  ரிங்கிட்டை  விஞ்சாத  அபராதமும்  மூன்றாண்டு  விஞ்சாத  சிறை  தண்டனைக்கும்  அல்லது  இரண்டுக்கும் ஆளாவார் என்கிறது.

மேலே  குறிப்பிடப்பட்ட   1948 ஆம்  ஆண்டு  சட்டத்தின் 6(2)  பிரிவின்படி  குற்றம்  சாட்டப்பட்டவர்  பிரசுரிக்கப்பட்ட  செய்திக்குப்  பொறுப்பாக  இருப்பினும் அது  தம்முடைய  அனுமதியோடும்  அறிவாண்மையோடும்  பிரசுரிக்கப்படவில்லை, தாம்  கவனத்துடனும், எச்சரிக்கையுடனும்  நடந்துகொண்டதாகவும்  அல்லது  பிரசுரிக்கப்பட்ட  செய்தி  அரசுக்கு  எதிரானது என நம்புவதற்கு  யாதொரு  காரணமும்  இல்லை  என்று  அவர்  நிரூபித்தால்  அவரை  குற்றவாளி  எனத்  தீர்மானிக்க  முடியாது.

உத்துசான்  மிலாயுவின்  ஆசிரியரும்  தலைப்பு  ஆசிரியரும்  முறையே  குற்றவியல்  நடுவரால் (மஜிஸ்ட்ரேட் – Magistrate)  குற்றவாளிகள்  எனத்  தண்டிக்கப்பட்டு  ரிம 500  தலைமை  ஆசிரியருக்கும், ரிம 1000  தலைப்பு  ஆசிரியருக்கும்  அபராதம்  விதிக்கப்பட்டது.  இருவரின்  மேல்முறையீட்டின்  கேட்புரையின்போது  அப்போதைய  தலைமை  நீதிபதி  எச்.டி.ஓங் (H.T.Ong) தலைமை  ஆசிரியர்  கவனத்துடன்  நடந்துகொண்டார்  என்பதற்கு  போதுமான  சான்றுகள்  இருப்பதாகவும்  எனவே  அவர்  குற்றமற்றவர்  என்றும்  தீர்ப்பளித்து  விடுவித்தார்.

அதாவது  1948 ஆம்  ஆண்டு  சட்டத்தின்  6(2) பிரிவின்படி  தலைமை  ஆசிரியர்  குற்றமற்றவர்  என்பதே  உயர்நீதிமன்றத்தின்  தீர்ப்பு. ஆனால்  தலைப்பு  ஆசிரியரைப்  பற்றி  குறிப்பிடுகையில்  அவர்  மீது   சுமத்தப்பட்டிருக்கும்  குற்றச்சாட்டு அவர்  கொடுத்த  தலைப்பைப்  பற்றியதாகும்,  மூசா  ஹீத்தாமின்  உரையைப்  பற்றியதல்ல.

தமிழ்   சீன  மொழிகள் சார்ந்த வழக்குகள்

“இந்த  நாட்டில்  தமிழ்  அல்லது  சீன  பள்ளிகளை  ஒழிக்க  வேண்டும்”  என்ற  கூற்று  தெளிவானதாகும்.  அது  அரசமைப்புச்  சட்டத்தின்  152(1)  பிரிவுக்குச்  சவால்  விடுவதாக  அமைந்திருக்கிறது.  மூசா  ஹீத்தாம்  தமது  சாட்சியத்தில்  தாம்  தமிழ், சீன  பள்ளிகளை  ஒழிக்கவேண்டுமென  சொல்லவில்லை  என்றார்  என்பதை  உயர்நீதிமன்றம்  தமது  தீர்ப்பில்  குறிப்பிட்டது.

1948 ஆம்  ஆண்டு  சட்டத்தின் 6(2)  பிரிவின்  வழி  வழங்கப்படும்  பாதுகாப்பும்  தலைப்பு  ஆசிரியருக்கு  உதவவில்லை. எனவே,  அவர்  குற்றவாளி  என  உயர்நீதிமன்றம்  உறுதிசெய்தது.

s4அடுத்து, 11.10.1978 இல்  நாடாளுமன்றத்தில், உறுப்பினர்  மார்க்  கோடிங்  உரையாற்றும்போது நாட்டில்  சீன,  தமிழ்  பள்ளிகள்  தொடர்ந்து இயங்குவதை  அனுமதிக்கும்  அரசின்  நோக்கத்தைப்  பற்றி  கேள்வி  எழுப்பினார்.  இரண்டாவதாக,  சாலை  விளம்பரங்களில்  சீனமும்  தமிழும்  பயன்படுத்துவதைப் பற்றி கேள்வி  எழுப்பினார்.  சீன, தமிழ்  பள்ளிகளை  மூடவேண்டுமென்று  சொன்னதோடு  விளம்பரப்  பலகைகளில்  அந்த  இரு  மொழிகளைப்  பயன்படுத்துவதில்  கட்டுப்பாடு  வேண்டுமென்றார்.

மூன்றாவதாக,  சீன, தமிழ்  பள்ளிகள்  மூடுவதிலும்  விளம்பரப்  பலகைகளில்  அம்மொழிகளின்  உபயோகம்  கட்டுப்படுத்துவதானது  அரசமைப்புச்  சட்டத்தின்   152ஆம்  ஷரத்துக்குப்  புறம்பாக  இருக்குமென்றால்  அரசமைப்புச்  சட்டத்தில்  திருத்தம்  கொணர  வேண்டும்  என்றார். இந்த 152 ஆம்  ஷரத்தின்   சரியான  வியாக்கியானம்தான்  என்ன?  இந்த  வழக்கை  விசாரித்த  உயர்நீதிமன்ற  நீதிபதி  முகம்மது  அஸ்மி  தமது  தீர்ப்பில்  கூறியதாவது: தேசிய  மொழி  மலாய்  என்பதை  அரசமைப்புச்  சட்டத்தின்  152(1) ஆம்  ஷரத்து  உறுதிப்படுத்துகிறது.  மற்றமொழிகள்    அதிகாரப்  பூர்வமற்ற  காரணங்களுக்காகப்  பயன்படுத்துவதில்  உத்திரவாதம்  உறுதிப்படுத்துகிறது.

பிற  மொழிகள் கற்பிப்பதிலும்,  கற்பதிலும்  உறுதி  வழங்கப்பட்டுள்ளது. ஆனால்,  பிற  மொழிப்  பள்ளிகளைப் பாதுகாக்கவேண்டும்  என்கின்ற  கருத்துக்கு  இடமில்லை  என்பதே  152 ஆம்  ஷரத்தின்  சாராம்சம்  என்ற  கருத்தை  வலியுறுத்தி,  மார்க்  கோடிங்கின்  சீன, தமிழ்  பள்ளிகளை  மூட வேண்டுமென்ற  கோரிக்கை  குற்றமல்ல  என்றார்.  அதுபோலவே  விளம்பரப்  பலகைகளில்  சீன, தமிழ்,  மொழிகள்  பயன்படுத்துவதைக்  கட்டுப்படுத்த  வேண்டும்  என்கின்ற  கோரிக்கையும்  குற்றமல்ல  என்றார்  நீதிபதி.  அதோடு  விவகாரம்  முடிந்துவிடவில்லை.

மார்க் கோடிங்  விடுத்த  அடுத்த  கோரிக்கையான  மேலே  குறிப்பிட்ட  இரு  பிரச்சினைகளும்  அரசமைப்புச்  சட்டத்தின்  152 ஆம்  ஷரத்துக்குப்  புறம்பானதாக  இருக்குமென  கருதினால்  அரசமைப்புச்  சட்டத்தில்  திருத்தம்  கொண்டுவர வேண்டுமென்ற  கோரிக்கை  எப்படிப்பட்ட  தரத்தைக்  கொண்டது  என்பதை ஆய்ந்து  பார்த்தார்  நீதிபதி.

தேசிய  மொழி  அமலாக்கத்தை  அரசமைப்புச்  சட்டத்தின்  152 ஆம்  ஷரத்துக்கு  இணங்கச்  செய்யப்படும்  பரிந்துரை  குற்றமாகாது,  ஆனால்  அப்படிப்பட்ட  பரிந்துரை   சினமூட்டும்  தன்மை  கொண்டிருக்குமாயின் மக்களிடையே  வேற்றுமை,  பிரச்சனை, தகராறு,  வெறுப்பு  போன்ற  பிரச்சனைகளை  கிளப்புமானால்  அது  குற்றமே  என்றார்  நீதிபதி  அஸ்மி.

நாடாளுமன்ற  உறுப்பினர்  என்பதால்  அந்த  அவையில்  தாம்  கூறியதை  குற்றப்படுத்த  முடியாது  என்ற  வாதத்தொகுப்பை  ஏற்றுக்கொள்ளவில்லை  நீதிபதி:  காரணம்,  நாடாளுமன்றத்தில்  பேச்சுரிமை  உண்டு  என்பதில்  எந்த  மாற்று  கருத்தும்  கிடையாது.  ஆனால் 1971ஆம்  ஆண்டில் அரசமைப்புச்  சட்டத்தின்  63 ஆம்  ஷரத்துக்கு  கொண்டு வரப்பட்டு  ஏற்றுக்கொள்ளப்பட்ட  திருத்தத்தில்  நாடளுமன்ற  பேச்சுரிமைக்கு  வரம்பு  விதித்துள்ளது.

இதை  கூட்டரசு  நீதிமன்றம்  ஏற்றுக்கொண்டது.  எனவே மார்க்  கோடிங்கின்  நாடாளுமன்ற  சிறப்புரிமை  வாதத்தொகுப்பும்  எடுபடவில்லை.  பொதுநலனைக்  கருத்தில்  கொண்டு  மார்க்  கோடிங்  ஈராயிரம்  வெள்ளி  நன்னடத்தை  பிணையத்தில்  விடுவிக்கப்பட்டார்.  அவர்  குற்றவாளி  என்ற  போதிலும்  அது  பதிவு  செய்யப்படவில்லை.

மார்க்  கோடிங்  வழக்கு  முடிந்து  முப்பத்தொரு  ஆண்டுகளாகிவிட்டன  என்ற  போதிலும்  இந்த  சீன, தமிழ்  பள்ளிகள்  இயங்குவதைப்  பற்றி  சிலர்  பேசுவது  பேச்சுரிமைக்கு  உட்பட்டதாகக்  கருதப்படலாம்.  ஆனால்,  அப்படிப்பட்ட  பேச்சு  எளிதில்  இனப்  பிரச்சினையையும்  இன  உணர்ச்சியையும்  சீண்டிவிடும்  என்பதை  எல்லாரும்  உணர்ந்திருத்தல்  நல்லது.  அரசும் பாராபட்சமின்றி  செயல்படவேண்டும்.

மொழி  பிரச்சினை  மிகவும்  உணர்ச்சி  மிகுந்தது 

மொழி  பிரச்சினை  மிகவும்  உணர்ச்சி  மிகுந்தது  என்பது  யாவரும்  அறிவர்,  காலம்  மாறிக்  கொண்டே  இருக்கிறது. இன்று  பொருளாதார  மேம்பாட்டை  மட்டும்  கருத்தில்  கொண்டு  அரசியல்  கொள்கைகளை  வகுக்க  முடியாது,  வழிநடத்திச்  செல்லவும்  முடியாது.  தேசிய  மொழிதான்  முக்கியம்  என்பதில்  எந்தக்  கருத்து  வேறுபாடுமில்லை.  ஆனால்,  பிற  மொழிகளைக்  கற்பதால்  ஒருவரின்  அறிவு  வளர்ச்சி  பன்மடங்கு  உயருமே  அன்றி  குறையாது.

tamilschool-in-malaysiaதாய்  மொழியைக்  கற்பவன்,  அதில்  புலமை  கொண்டவன்  பிற  மொழிகளைக்  கற்று  பலனடைகின்றான்.  பிறநாடுகளுடனான  நட்பும், உறவும்,  உலகைச்  சுருக்கிவிட்டது.  பிற  இனத்தவர்களோடும், சமயத்தினரோடும், பழக  வேண்டிய  நிர்பந்தம்  ஏற்பட்டுக்கொண்டே  இருக்கும்.  அதைத்  தவிர்க்க  முடியாது.  இனவாரியாக,  சமயவாரியாக  மக்களைப்  பிரித்து  செயல்பட  நினைப்பது  தென்னாப்பிரிக்காவின்  கொடுமையான  இன  ஒதுக்கீடு  கொள்கைக்கு  ஒப்பானதாகும்.  அந்த  நிலை,  அதன்  சாயல்கூட  இந்த  நாட்டில்  பட  அனுமதிக்கக்கூடாது.  காலத்தின்  மாற்றத்துக்கு  ஏற்ப  நாமும்  மாறவேண்டும்.  சிந்தனையில்  மாற்றம் வேண்டும்.  அவை  நன்மைக்காக  இருக்கவேண்டும். இதை  எல்லா  இனத்தவர்கள்  மட்டுமல்ல  அரசும்  உணரவேண்டும்.

தமிழ்  மொழிக்குப்  பாதுகாப்பு  இருக்கிறது  என்பதில்  எந்தச்  சந்தேகத்துக்கும்  இடமில்லை,  ஆனால்  தமிழர்கள்  தாய்  மொழி  தமிழை  கற்கத்  தயாராக இருக்கிறார்களா  என்பதே  கேள்வி.  அழகான வீணை  இருக்கிறது  என்று  சொல்லிக்கொண்டு  பெருமை  அடைவதில்  எந்தப்  பலனும்  இல்லை.  வீணையை  இயக்கக்  கற்றுக்கொள்வதில்தானே  மகிமை  இருக்கிறது.  கொடுக்கப்படிருக்கும்  அரசமைப்பு  பாதுகாப்பை  வைத்துக்கொண்டு  தமிழைப்  பாதுகாக்கலாம். வளர்க்கலாம்.  தமிழ்  இலக்கியங்களின்  வளர்ச்சியைக்  காணலாம்,  கலையிலும்  முன்னேற்றம்  காணலாம்.  தமிழ்  மொழியின்  எதிர்காலம்  தமிழர்களிடத்தில்தான்  இருக்கிறது. –  முற்றும். முதல் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.