பண்பற்றதாகி வரும் மின்னல் பண்பலை – தமிழினி

திங்கட்கிழமை, காலை மணி 7.25. மின்னல் பண்பலையில் பாடல் ஒலிக்கிறது.

லவ் லெட்டரு எழுத ஆசைப்பட்டேன்;  இன்னும் எழுதல; அத உன்னிடம் கொடுக்க ஆசைப்பட்டேன்; கொடுக்க முடியல.

தொரத்தி தொரத்தி காதலிச்சேன்; வெறி பிடிச்ச நாயாட்டம், 

ஆசைய மூடி மறைக்காத; உங்கப்பன் பேச்சை மதிக்காத; ஐ லவ் யூ சொல்லிடு..

m1காலையில் பள்ளிகளுக்கு பிள்ளைகளை அழைத்துச் சென்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், முக்கிய பணிகள் குறித்து சிந்தித்தப்படி வாகனம் செலுத்தி கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி தரங்கெட்ட பாடல்கள் ஒலியேற்றப்பட்டால் எப்படி இருக்கும்?

அதுவும், மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசாங்க வானொலி இப்படியான பாடல்களை ஒலியேற்றினால் சமூக பொறுப்புமிக்க மக்கள் அதைக் கேட்டு கொண்டு சும்மா இருந்து விடுவார்கள் என்று நினைத்து விட்டார்கள் போலும்.

அண்மைய காலமாக மின்னல் பண்பலை நிகழ்ச்சிகளின் தரம் அதி பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை மட்டும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஒரு காலத்தில் இந்த நேரத்தில் இந்த நிகழ்ச்சி ஒலிபரப்படும் எனக் காத்திருந்து வானொலி கேட்டவர்கள் எல்லாம் இப்போது புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு நாளையும் துவக்கி வைக்கும் முக்கியமான வானொலி நிகழ்ச்சி காலைக்கதிர். அந்த காலைக்கதிர் நிகழ்ச்சி கொஞ்ச காலத்திற்கு முன்பு வரை ஒரு சில குறைப்பாடுகள் இருந்தாலும் தாராளமாக கேட்கலாம் என்ற நிலையிலேயே இருந்தது.

m2எப்போது புதுப்பொலிவுடன் ‘மின்னலின் காலைக்கதிர்’ என்ற அறிவிப்பு வெளிவந்ததோ அன்றுதான் எல்லா சிக்கல்களும் தொடங்கின. அறிவிப்பாளர்கள் தேவையில்லாத விசயங்களுக்கெல்லாம் சிரிக்கின்றனர். ஆண் அறிவிப்பாளரும் பெண் அறிவிப்பாளரும் தங்களுக்கிடையில் கிண்டல், கேலி என ஏகத்துக்கு கூத்தும் கும்மாளமுமாக காலைக்கதிர் நிகழ்ச்சி போய்க்கொண்டிருக்கிறது. கேட்டால் இளைஞர்களுக்கு ஏற்ற மாதிரி தருகிறார்களாம். எந்த இளைஞர்கள் உங்களிடம் வந்து இப்படி நிகழ்ச்சி நடத்த சொன்னார்கள் என்றுதான் தெரியில்லை.

இதில் உச்ச கட்ட கொடுமை என்னவென்றால் இந்த காலைக்கதிர் கூத்தடிப்புகளுக்கு இப்போது தனியாக தயாரிப்பாளர் வேறு. அவர் வேறு யாருமல்ல. முன்பு விழுதுகள் நிகழ்வில் தயாரிப்பாளராக இருந்தவர்தான் இப்போது காலைக்கதிர் நிகழ்வில் தயாரிப்பாளர். அவர், வந்தபிறகு காலைக்கதிர் நிகழ்ச்சி தனித்தன்மையோடு ஒலிபரப்படும் என எதிர்ப்பார்த்திருந்த பல நேயர்களில் நானும் ஒருவர். ஆனால், எங்கள் நம்பிக்கை வீணடிக்கப்பட்டதுதான் மிச்சம்.

விழுதுகள் நிகழ்வில் சிறப்பாக செயல்பட்ட அந்த தயாரிப்பாளர் ஏன் காலைக்கதிர் அங்கத்தில் ஏகப்பட்ட குழறுபடிகளைச் செய்து வருகிறார் என்றுதான் தெரியவில்லை.

m3மின்னல் பண்பலையில் இளைஞர் பட்டாளத்தை முன்னிறுத்துவது வரவேற்கப்பட வேண்டியது தான். அதற்காக பொறுப்போடு படைக்கப்பட வேண்டிய பல வானொலி நிகழ்ச்சிகள் தன் தரத்தை இழந்துக் கொண்டிருப்பதை நம்மால் எப்போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இவற்றின் உச்சகட்டமாக, சனி, ஞாயிறு காலைக் கதிர் அங்கத்தை படைக்கும் பெண் அறிவிப்பாளர் தேவையே இல்லாமல் கொஞ்சி கொஞ்சி பேசி ஏகத்துக்கு எரிச்சல் பட வைப்பார். அறிவிப்பு செய்வதற்குக் கொஞ்சல் மொழி எதற்கு. சொல்ல வந்ததைத் தெளிவாக சொல்லவேண்டியதுதானே ஒரு அறிவிப்பாளரின் முதல் தகுதி. எந்த தகுதியில் அடிப்படையில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற கேள்வியைப் பலர் இதுவரை என்னிடம் கேட்டுவிட்டனர்.

ஏற்கனவே, மின்னல் வானொலி செய்திகள் அரசாங்கத்தை மட்டுமே துதிபாடுகின்றன என்றும் மக்களுக்குத் தேவையான உண்மையான செய்திகளை வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில் மி;ன்னலின் 24 மணி நேர அறிவிப்பும் எந்தவொரு பயனையும் மக்களுக்குக் கொண்டு வருவதில்லை என்றே நான் கருதுகிறேன்.

அதைத் தவிர, இன்றைய நிலையில் மிக அதிகமான விளம்பர நிகழ்ச்சிகள் மின்னல் பண்பலையில் ஒலிபரப்பாகின்றன. முன்பிருந்ததைவிட இப்போது விளம்பரங்கள் அதிகரித்து விட்டன. மக்களின் அறிவினைத் தொடர்ந்து மழுங்கடிக்கச் செய்யும் விளம்பரங்களே தொடர்ந்து ஒலிபரப்பாகின்றன. சிவப்பழகு கிரிம்கள், மூடநம்பிக்கையின் உச்சகட்டமான பூஜை என்ணெய், தீப விளக்குகள், ஊதுபத்தி, சுற்றுலா நிறுவனங்கள் தொடர் விளம்பரங்கள் என மி;ன்னல் பண்பலை விளம்பரங்களின் கூடாராமாகிவிட்டது.

அரசாங்க வானொலி ஏன் இவ்வளவு அதிகமான விளம்பர நிகழ்ச்சிகள் என்றுதான் எனக்குத் தெரியவில்லை. விளம்பர நிகழ்ச்சிகள் தயாரிக்கவும், அவர்களின் பொருள் விளம்பரத்திற்குக் குரல் கொடுக்கவும் முண்டியடிக்கும் அறிவிப்பாளர்கள் கொஞ்சம் மக்களுக்குப் பயனள்ள நிகழ்வுகள் செய்வதற்கும் மெனக்கெட்டால் நம்மையாவது கிட்டும்.

இதைப்பற்றியெல்லாம் பலரும் ஒவ்வொரு வாரம் ஞாயிறு தமிழ் நாளிதழ்களிலும் பல நேயர்கள் தொடர்ந்து எழுதியபடித்தான் இருக்கின்றனர். ஆனால், மாற்றம் நடப்பதற்கான எந்த அறிகுறியும் இதுவரை காணப்படவில்லை. கடந்த நம்நாடு நாளிதழில் கூட அதன் ஆசிரியர் வித்தியாசாகர் மிக நாசூக்காக மின்னல் பண்பலை குறைகள் குறித்து எழுதியிருந்தார். ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் இதையெல்லாம் வாசிப்பார்களா என்றுகூட தெரியவில்லை.

எனது புலம்பலை செவிமடுத்த ஒருவர், “முன்பு ஒரு முறை கோலாலம்பூர் கண்ணன் குழுவினர் தொலைகாட்சி பெட்டியை தெருவில் போட்டு உடைத்து ஆர்ப்பாட்டம் செய்தது போல் ஒரு வானொலியை ஆர்டிஎம் முன் போட்டு உடைத்தால், ஒரு வேளை அவர்கள் செவிகளுக்கு எட்டும்”, என்றார்.

சம்பந்தப்பட்டவர்கள் நம்மை அந்த நிலைமைக்கு கொண்டு செல்ல மாட்டார்கள் என நம்புவோம்.