புகை பிடித்து குழந்தைகளின் காதுகளைச் செவிடாக்குவோம் – தமிழினி

c4இப்போதெல்லாம் உணவகங்களுக்கு உணவருந்தப் போவதென்றால் உணவு சுவையாக இருக்குமா என்று யோசிப்பதை விட அங்கு புகைப்பிடிக்காதவர்கள் நிம்மதியாக அமர்ந்து உணவருந்த இடம் இருக்குமா என்று யோசிப்பதுதான் மிக முக்கியமாக இருக்கிறது. அந்தளவிற்கு புகைப்பிடிப்பவர்கள் நமது பெரும்பாலான உணவருந்தும் நேரங்களை நிம்மதியற்றதாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சம்பவத்தைக் படியுங்கள்.

காலை பசியாறல் நேரம். பெட்டாலிங் ஜெயாவிலுள்ள ஓர் உணவகம். காலைப் பசியாறலுக்காக கணிசமான அளவு கூட்டம் உணவகத்தில் நிரம்பியிருந்தது.  நானும் உணவகத்தின் உள்ளே ஓரிடம் தேடி உணவுக்குச் சொல்லிவிட்டு சுற்றியிருப்பவர்களை கவனிக்கத் தொடங்கினேன்.

c6நிறைய வயதில் மூத்தவர்கள்   (இந்தியர்கள் மட்டுமின்றி சில சீனர்களும்) காலை உடற்பயிற்சிக்குப் பிறகு மிக உற்சாகமாக உணவருந்தி கொண்டிருந்தனர். ஒரு பெண் மூன்று அழகான குழந்தைகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். மிக அழகாக எல்லாரையும் பார்த்து சிரித்தபடி இருந்தனர் அந்த குழந்தைகள். எனக்குப் பக்கத்து மேசையில் நமதின இளைஞன் ஒருவனும் பெண் ஒருவரும் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர்.

அந்த இளைஞன் உணவருந்தி முடித்த அடுத்த நிமிடமே சுற்றியிருந்த எவரையும் பொருட்படுத்தாமல் சிகரெட் ஒன்றினைப் பற்றவைத்து புகையை வெளிவிட்டபடியே இருந்தான். இந்த இளைஞனைப் போன்றவர்களைத் தான் நான் சமூகப் பொறுப்பற்ற புகைப்பவர்கள் என்கிறேன்.

அதுவரை அந்த உணவகத்தில் இருந்த சுமூகமான சூழல் அந்த பொறுப்பற்ற புகைப்பவனால் மாறியிருந்தது. பெரியவர்கள் பலர் இருமத் தொடங்கியிருந்தனர். பலர் அந்த இளைஞனை மீண்டும் மீண்டும் பார்த்தபடி இருந்தனர். அந்த மூன்று குழந்தைகள் மிக வேகமாக இருமத் தொடங்கின. ஒரு குழந்தை அழத் தொடங்கி விட்டாள். அதற்கு மேல் எனக்குப் பொறுமையில்லை.

எழுந்து அந்த இளைஞன் அருகில் சென்று மெதுவாக வெளியே சென்று சிகரெட் புகைக்கும் படி தமிழில் கூறினேன். என்னை ஒரு மாதிரியாக பார்த்து ‘what’ என்று ஆங்கிலத்தில் கேட்டான். நானும் மிகத் தெளிவான ஆங்கிலத்தில் ‘நாங்கள் உணவருந்திக் கொண்டிருக்கிறோம். அதனால், தட்டைத் தூக்கிக் கொண்டு வெளியே போய் நின்று சாப்பிட முடியாது. நீங்கள் சாப்பிட்டு முடித்து விட்டீர்கள். வெளியே போய் புகைப்பிடிக்கலாம் தானே. இங்கே குழந்தைகள் இருப்பது கூடவா உங்களுக்குத் தெரியவில்லை’ என்று எல்லாருக்கும் விளங்குபடி கொஞ்சம் சத்தமாகவே கேட்டேன்.

c1எல்லாருக்கும் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு அந்த இளைஞனைக் கவனிக்கத் தொடங்கினர். அந்த இளைஞன் பேசாமல் எழுந்து வெளியே போய்விட்டார். அந்தப் பெண்தான் என்னைப் பார்த்து முறைத்தபடியே மெதுவாக பணம் கட்டிவிட்டு என்னைத் திரும்பி திரும்பி பார்த்தபடியே போனாள். அந்த இளைஞன் புகைக்க கூடாது என்று தான் கேட்காமல் நான் சொல்லி கேட்டதால் கோபமோ!

சிகரெட் புகை குழந்தைகளின் காதுகளைச் செவிடாக்கும்.

பலருக்கு இந்த தகவல் மிக அதிர்ச்சியானதாக இருக்கலாம். சிகரெட் புகையைத் தொடர்ந்து சுவாசிக்கும் குழந்தைகளுக்குக் காது செவிடாகும்  என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. குழந்தைகளால் சுவாசிக்கப்படும் சிகரெட் புகை, மூக்கு மற்றும் வாய் வழியாக சென்று காதின் உட்பகுதியில் அமைந்துள்ள ஒலியைக் கிரகிக்கும் மெல்லிய உறுப்பைச் சேதப்படுத்துகிறது.

இதனால் ஒலியை உள்வாங்கும் திறனை அந்த உறுப்பு இழப்பதால் செவிட்டுத் தன்மை உண்டாகிறது. மேலும், பிறர் பேசுவதைப் புரிந்துக் கொள்ளும் சக்தி குறைவதுடன் படிப்பில் நாட்டம் இல்லாமை, அடங்காத்தன்மை போன்ற குறைபாடுகள் பள்ளி குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன.

புகைப்பிடிக்கும் தந்தைமார்கள் பலர் தங்கள் குழந்தைகளையும் மனைவியையும் எப்போதும் பொருட்படுத்துவதே இல்லை. வாகனம் செலுத்தும் போது, வீட்டின் உள்ளே தொலைக்காட்சிப் பார்க்கும் போது, படுக்கையறையில், உணவகத்தில் என குடும்ப உறுப்பினர்கள் புடைசூழ சிகரெட் புகைப்பார்கள். குழந்தைகள் விபரீதம் புரியாமல் புகையோடு விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

அவ்வப்போது இரும்முவார்கள். கண்களைக் கசக்கிக் கொள்வார்கள். ஆனால், யாருமே அவர்களைப் பொருட்படுத்த மாட்டார்கள். குழந்தைகள் புகைப்பிடிப்போரின் அருகில் இருந்தால், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி போன்றவை ஏற்படுவதோடு, வளர வளர நுரையீரலின் வளர்ச்சியும் வளராமல் தடைபடும் என்பதைப் பலர் அறிந்திருப்பதில்லை.

புகைப்பிடிப்பதால் புற்றுநோய், கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி, மாரடைப்பு, இதய நோய் பாதிப்பு, இரத்த தொடர்புடைய நோய்கள், இரைப்பை தொடர்பான நோய்கள் எல்லாம் வரும் என்பதைத் தாண்டி வேறு என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதைப் பார்ப்போம்.

மஞ்சள் நிற பற்கள் – நகங்கள்

c7புகையிலையில் உள்ள நிக்கோட்டின் என்ற நச்சுத்தன்மை பார்ப்பதற்கு அழகில்லாத அசிங்கமான மஞ்சள் நிற பற்கள் தோன்றுவதற்கான முக்கிய காரணமாகும். பற்களில் மஞ்சள் நிறம் ஏற்பட்டால், அதை இலகுவாக நீக்கிவிட முடியாது. இதை நீக்க வேண்மெனில் ‘teeth Cleaning’ அல்லது ‘Whitening’ போன்றவற்றைப் பல் மருத்துவரின் உதவியோடு செய்ய வேண்டும். இதற்கு அதிகம் செலவாகும். அதற்கும் வாய்ப்பில்லையெனில் மஞ்சள் நிறப் பற்களோடுதான் இருக்க வேண்டும். மேலும், அதிகமாக புகைப்பிடிப்பதால் பற்கள் அனைத்தும் முழுமையாக பாதிப்படையும். இந்த மஞ்சள் நிற பற்கள் எல்லாம் வெறும் ஆரம்ப நிலை மட்டுமே. இதன் அடுத்தக்கட்டமாக, அனைத்து பற்களும் பாதிக்கப்பட்டு பற்கள் விழுவதற்கான வாய்ப்பு மிக வேகமாக அதிகரிக்கும். நிக்கோட்டின் பற்கள் மட்டுமின்றி விரல் நகங்களிலும் மஞ்சள் நிறக் கறைகளை ஏற்படுத்துகிறது.

வயதானவர் போன்ற தோற்றம்

ஒருவர் தொடர்ந்து புகைப்பிடிப்பதால், தோல் அல்லது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க தேவையான இரத்த ஓட்டம் தடைப்படும். இதனால், புகைப்பிடிக்காதவர்களைவிட புகைப்பவர்கள் சீக்கிரத்திலேயே வயதானவர் போன்ற தோற்றத்தை அடையும் அபாயம் ஏற்படலாம்.

சருமத்தில் ஏற்படும் தழும்புகள் – முக வடுக்கள்

c2நிக்கோட்டின் சருமத் திசுகளை பாதிப்பது மட்டுமின்றி, சருமத்தின் நெகிழ்வுத் தன்மையைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கின்றது. உடல் எடை திடிரென கூடுதல் அல்லது குறைதல் போன்ற சிக்கல்களும் புகைப்பவர்களுக்கு ஏற்படுவதால், வெளுத்த கோடு போன்ற போன்ற தழும்பு தோலில் ஏற்படு;ம். சருமம் தானாக குணமடையும் தன்மையை நிக்கோட்டின் தடை செய்வதால், இந்த தழும்புகள் எப்போதுமே நிலைத்திருக்கும். மேலும், புகையிலையில் காணப்படும் கரியமிலவாயு (carbon Dioxide)  சருமத்தில் உயிர்வளியைக் (Oxygen) குறைக்கிறது. நிக்கோட்டின் இரத்த ஓட்டத்தையும் தடை செய்கிறது. இதனால், வெளுத்த, பொலிவற்ற வறட்சியான முகத்தோற்றம் உருவாகும். மேலும், முகத்தில் நிரந்தர வடுக்கள் ஏற்படுவதற்கும் இந்நிலை வழிவகுக்கிறது.  இந்நிலையானது புகைப்பவனின் முகம் ‘Smoker’s face’ என்றழைக்கப்படுகிறது.

படபடப்புத்தன்மை (Hyper Tension)
c3ஆரோக்கியமான ஒவ்வொரு மனிதனின் உடலிலும் சராசரியாக 5 லிட்டர் இரத்தம் இருக்கும். இரத்த நாளங்கள் மூலம் உடலின் பல்வேறு பகுதிக்கும் இரத்தம் சுழன்று உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்கிறது. இரத்தத்தை பம்ப் செய்ய இதயம் நுரையீரலிலிருந்து உயிர்வளியை எடுத்துக் கொள்ளும். புகைப்பதால் உயிர்வளியின்   அளவு குறைந்து கரியமிலவாயுவின்  அளவு கூடுகிறது. இதனால், படபடப்புத்தன்மை ஏற்படுகிறது.

இப்படியான நிறைய சிக்கல்கள் புகைப்பவர்களுக்குத் தொடர்ந்து ஏற்படுகின்றன.

இன்றைய நிலையில் புகைப்பிடிப்பது என்பது ஒரு கலாச்சாரமாகிவிட்டது. எப்போதும் புகைப்பிடிப்பவர்கள், எப்போதாவது புகைப்பவர்கள், உணவருந்தியப்பின் மட்டும் புகைப்பவர்கள், ஒரு மனமகிழ்ச்சிக்காக புகைப்பவர்கள், மனஇறுக்கம், வேலைப்பளு, கவலை அதிகமாகும்போது புகைப்பவர்கள் பல ரகத்தினர் இருக்கின்றனர்.  சிகரெட் புகைப்பதால் மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்வு ஏற்படும் என்பதும் வேலையின் பளு தெரியாமல் இருக்கும் என்பதும் வேலையை உற்சாகமாக செய்ய உதவும் என்பதும்தான் புகைப்பவர்கள் பலரது கருத்தாக இருக்கிறது.

மலேசியாவில் புகைப்பிடிப்பதற்குத் தடைசெய்யப்பட்ட பகுதிகள்

  1. குளிர்சாதன வசதியுடைய உணவகங்கள்
  2. பேரங்காடிகள்
  3. திரையரங்குகள்
  4. பொது மருத்துவமனை, கிளினிக்குகள்
  5. மின்தூக்கிகள்
  6. பொது கழிவறைகள்
  7. பொது போக்குவரத்து வாகனங்கள் அல்லது பொது போக்குவரத்து நிறுத்தங்கள்
  8. விமான நிலையங்கள்
  9. அரசு அலுவலங்கள்
  10. பள்ளிப் பேருந்து

(இவற்றின் உள்ளே புகைப்பிடிப்பது சட்டப்படி குற்றமாகும்)

 

  1. கூட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படும் பொது கட்டங்களில் அறைகள்
  2. கல்விக் கூடங்கள் மற்றும் உயர்க்கல்விக் கூடங்கள்
  3. குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள்
  4. சேவையளிப்பினை மையமான கொண்டிருக்கும் கட்டங்கள் (எ.கா. தபால் நிலையம், வங்கி, மி;ன்சார வாரியம்)
  5. பெட்ரோல் நிலையங்கள்
  6. அரங்கங்கள், விளையாட்டு மையங்கள், உடற்பயிற்சி நிலையங்கள்
  7. சமய நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இடங்கள்
  8. நூலகம்
  9. இணைய மையங்கள்
  10. தேசிய சேவை பயிற்சி மையங்கள்
  11. குளிர்சாதன வசதியுடைய வேலையிடங்கள் மற்றும் ஓரிடத்தில் மையப்படுத்தப்பட்ட குளிர்சாதன வசதியுடைய இடங்கள்

(இவற்றின் உள்ளேயும் அதன் பிற பகுதிகள் மற்றும் வளாகங்களிலும் புகைப்பிடிப்பது குற்றமாகும்)

அண்மைய தகவல்

c5நேற்று சுகாதாரா அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்பிரமணியத்தின் கூற்றுப்படி இவ்வாண்டு இறுதிக்குள் நெடுஞ்சாலைகளில் உள்ள ஓய்விடங்களும் அதன் உணவங்களும் புகைப்பதற்குத் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். ‘புகையிலை அல்லாத நாள்’ நாளை முன்னிட்டு நடந்தப்பட்ட நிகழ்ச்சியொன்றில் அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும், இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின், பதின்ம வயது புகைப்பிடிப்பாளர்களுக்கு எதிராக கடுமையான அமலாக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற எச்சரிக்கையினையும் வெளியிட்டுள்ளார். 15 வயதிலிருந்து 18 வரையிலான  23 விழுக்காடு பதின்ம வயதினர் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியிருக்கின்றனர் என் சுகாதார அமைச்சின் ஆய்வு குறித்து கருத்துரைக்கையில் கைரி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதில் பதின்ம வயது பெண்களும் கணிசமான அளவு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பெரும்பான்மை சமூகத்தைப் புகைத் தின்னக் கொடுத்து விட்ட நிலையில் இன்று நாம் இருக்கிறோம். இப்போதைய நிலையில் நமது குழந்தைகளை இக்கொடிய பழக்கத்திலிருந்து காக்க வேண்டியது நமது கடமை ஆகும். புகைப்பிடிப்பது தனிமனித சுதந்திரம் என்றாலும் அந்த சுதந்திரமானது மிக அதிகமாக சுற்றியிருப்பவர்ளைப் பாதிக்கிறது என்பதே உண்மை. இதில் பெற்றோர்களே முக்கிய பங்காற்ற வேண்டியவர்களாக கருதப்படுகின்றனர். புகைப்பிடிக்கும் பழக்கம் அதன் தொடக்கத்திலேயே தவிர்க்கப்பட வேண்டும். இப்பழக்கம் தொடர்ந்து ஆழப் பரவாமல் இருக்க அனைவருக்கும் ஒன்றிணைந்து ஆவன செய்ய வேண்டும்.