வேண்டும் ஒரு கடவுள்!

 

aru nagappan-முனைவர் நாகப்பன் ஆறுமுகம், ஜூலை 5, 2014.

 

தமிழர் சமய வாழ்க்கை நெறியற்ற குறியற்ற போக்கில் போய் பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழினத்தில் தோன்றிய அருளாளர்கள் ஒரு கடவுள் வழிபாட்டை முன்மொழிந்து சிவபெருமானின் பரத்துவம் குறித்த சித்தாந்தத்தை முன் வைத்தனர்.

 

அக்காலத் தமிழ் அரசர்கள் வைதீகத்தில் சிக்கிக் கிடந்ததால் சிவ பரத்துவத்தைப் போற்றத் தவறினர். இதன் விளைவாகத் தமிழர் பல தெய்வ வழிபாட்டிலேயே நிலைத்து விட்டனர். இன்று பல தெய்வ வழிபாடு அறிவுப் பாதையிலிருந்து விலகி நம்பிக்கைக் காடுகளில் திசையறியாது சென்று கொண்டிருக்கிறது.

 

ஒரு கடவுள் வழிபாட்டுக்கு மாறான வழிபாடு பல தெய்வ வழிபாடு. தெய்வங்கள் பல, கடவுள் ஒன்றே. உலக இனங்களின் சமய வரலாறுகள் அனைத்தும் இயற்கை வழிபாட்டில் தொடங்கி பல தெய்வ வழிபாட்டில் வளர்ந்து ஒரு கடவுள் வழிபாட்டில் நிறைவு பெற்றுள்ளன.

 

தமிழர் சமய வரலாறு

 

சங்க இலக்கியம் தமிழரின் சமூக வரலாற்றின் கண்ணாடி. இவற்றில் தமிழரின் இயற்கை சார்ந்த சமயமும் தெய்வங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிஞ்சி

, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் நில அமைப்பைச் சார்ந்து முறையே முருகன், திருமால், இந்திரன், வருணன், கொற்றவை என்னும் தெய்வங்கள் போற்றப்பட்டுள்ளன. இவை தவிர இல்லுறை தெய்வம் என்னும் குல தெய்வங்கள், காடு, வயல், ஊர் ஆகியவற்றைக் காக்கும் காவல் தெய்வங்கள், போரில் இறந்த வீரர்களுக்கான நடுகல் வழிபாடு போன்றவையும் இருந்தன. மோகினி என்று சொல்லப்பட்ட அணங்கு என்னும் தெய்வம் பற்றித் திருவள்ளுவரும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளும் குறிப்பிடுகின்றனர்.

 

மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றிய பக்தி இலக்கியங்களில் வைதீகம் கலந்த போது வேதங்களில் சொல்லப்பட்ட தெய்வங்களும் தமிழர் சமயங்களில் கலந்தன. வடக்கே தோன்றிய புராணங்கள், மகாபாரதம், இராமாயணம் போன்ற கதைகளின் பாத்திரங்களும் தமிழர் சமயங்களில் தெய்வ நிலையைப் பெற்றன.

 

தெய்வ இலக்கணம்

 

பக்குவப்பட்ட ஆன்மாக்கள் தெய்வ நிலை பெறுவர் என்பது சைவ சமயக் கோட்பாடு. சுத்த மாயைக்குக் கீழ் அசுத்த மாயா உலகங்களுக்கு அதிகாரியாய் இருப்பவை தெய்வங்களே. அசுத்த மாயையின் வித்தியா தத்துவ உலகங்களுக்கு அனந்தேஸ்வரர் அதிகாரியாவார். பிரகிருதி மாயையைச் செயல்படுத்தும் ஸ்ரீகண்ட உருத்திரர் ஆன்மாக்களில் பக்குவப்பட்டவர். பரம்பொருளால் அதிட்டிக்கப்பட்டுச் செயல்படுபவர். பிரகிருதி மாயைக்குப் பிரமன், திருமால், உருத்திரன் ஆகியோர் முறையே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்வர். இவர்களை அதிட்டித்துச் செயல்படுத்துபவர் கடவுளாகிய சிவபெருமான்.

 

சிலர் மும்மூர்த்திகளைப் பிரம்மா, விஷ்ணு, பரமேஸ்வரன் என்பது பிழையான கருத்தாகும். பரமேஸ்வரன் சிவபெருமான். அவன் மூவருக்கும் முதல்வன்; பரம்பொருள். பரம்பொருளை மூவரில் ஒருவன் என்பது பரம்பொருள் இலக்கணம் அறியாதார் கூற்று. அல்லது சிவ பரத்துவத்துவத்தை இகழும் திட்டமிட்ட செயல்.

 

சிவபெருமான் ஒருவனே கடவுள். சிவபெருமான் அல்லாத பிற தெய்வங்கள் அனைத்தும் ஆன்ம வர்க்கமே ஆதலால் தோன்றி நின்று அழியும். இவை வாழும் உலகங்களுக்கேற்ற  உடல் கொள்ளும். கடவுளாகிய பரம்பொருள் முற்றழிப்பைச் செய்யும்போது இத்தெய்வங்களின் உடல்களும் உலகங்களும் அழியும். மீண்டும் இறைவன் உயிர்களுக்கு உடல், உலகங்கள் படைத்துத் தரும்போது பக்குவப்பட்ட வேறு ஆன்மாக்கள் தெய்வ நிலை பெற்று பரம்பொருள் கொடுத்த உடல், உலகங்கள் கொண்டு செயலாற்றும்.

 

தெய்வங்கள் பிறக்கும் இறக்கும்

 

இத்தெய்வங்கள் ஒவ்வொன்றும் ஏகதேசம் என்னும் ஒரு தொழில் மட்டுமே செய்ய வல்லவை. இதற்கான அறிவையும் ஆற்றலையும் பரம்பொருளே அருளி அதிட்டிக்கும். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழிலும் செய்யும் சுதந்திரம் இல்லாதவை. மறைத்தல், அருளல் ஆகிய தொழில்களால் முறையே உயிர்களைப் பக்குவப்படுத்தி வீடுபேறு அருளும் ஆற்றல் இல்லாதவை. தெய்வங்கள் பிறக்கும் இறக்கும். வினைகள் செய்யும். வினைகளால் வரும் இன்ப துன்பங்களையும் நுகரும்.

 

அருணந்தி சிவாச்சாரியார் அருளிய சிவஞான சித்தியார் பாடல்கள் இக்கருத்துகளை வலியுறுத்துகின்றன.

 

யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் ஆகிஆங்கே

மாதொரு பாகனார்தாம் வருவர் மற்று அத்தெய்வங்கள்

வேதனைப்படும் இறக்கும் பிறக்கும் மேல்வினையும் செய்யும்

ஆதலினால் இவை இலாதான் அறிந்து அருள் செய்வன் அன்றே 115

 

இப்பாடலுக்குச் சித்தாந்த அறிஞர் சி.சு மணி செய்த உரை கீழ்வருமாறு:

 

“எந்தத் தெய்வத்தை வழிபடு தெய்வமாக வணங்கினாலும் வினை வயப்படாதவனாகிய சிவபெருமானே அம்மையப்பனாக வந்து அவ்வழிபாட்டை ஏற்று அதற்குரிய பயனை அருளுவான். மற்றைத் தெய்வங்கள் எல்லாம் உயிர் வகையுள் ஒன்றாகுமே தவிர வேறு இல்லை. அத்தகைய பல தெய்வங்களும் பிறக்கும், இன்ப துன்பங்களுக்கு உட்படும். இருவினைகளைச் செய்யும். இறக்கும் என்ற வரலாறு அனைவரும் அறிந்ததே. இவற்றுள் எதுவும் இல்லாதவனாகிய சிவபெருமான் ஒருவனே வினை வயப்படாத முதல்வன். ஆகையால் அவனே உயிர்களுக்கு வினையின் பயனைக் கூட்ட வல்லவன்.

 

இறைவன் ஒருவனே என்பதும் அவன் இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன் என்பதும் சைவ சமயத்தின் கொள்கை. மிகப் பழமையான தமிழ் நூல்களும் கூட சிவபெருமானைப் பிறவா யாக்கை பெரியோன் (சிலப்பதிகாரம்) என்றே குறிப்பிடுகின்றன. இந்த உண்மையை அறியாதவர் செத்துப் பிறக்கின்ற இயல்புடைய சிறுதெய்வங்களை வழிபடுவராயினார். “சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம், சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்” என்ற அப்பரடிகள் திருவாக்கை நினைவு கூர்க” (சிவஞான சித்தியார் பரபக்கமும் சுபக்கமும், பக்.199, அருள் நந்தி சிவம் அருட்பணி மன்றம், 1995)

 

சிவஞான சித்தியாரில் மற்றொரு பாடல்,

 

இங்குநாம் சிலர்க்குப் பூசை இயற்றினால் இவர்களோ வந்து

அங்குவான் தருவார்? அன்றேல் அத்தெய்வம் அத்தனைக் காண்

எங்கும் வாழ் தெய்வம் எல்லாம் இறைவன் ஆணையினால் நிற்பது

அங்குநாம் செய்யும் செய்திக்கு ஆணைவைப்பால் அளிப்பன்  116

 

சி.சு. மணியின் உரை:

 

“உலக வாழ்க்கையில் தாய் தந்தை, ஆசிரியர் ஆகியோரை நாம் வழிபடுகிறோம். அந்த அவ்வழிபாட்டின் பயனை மறுமையிலே நமக்குத் தருவதற்கு அவர்கள் வல்லவர் அல்லர். அது போன்றே உலகத்தார் கொண்ட முப்பத்து முக்கோடி தேவர்க்கும் செய்யப்படும் வழிபாட்டின் பயனை அத்தெய்வங்கள் வழங்க வல்லன அல்லன. சிவபிரான் ஆகிய முதல்வனே தன் ஆணையைத் தனது ஏவல் வழி நிற்கும் அந்தந்த தெய்வத்தின் இடத்து வைத்துப் பயனை வழங்குவான்.” என்பது இப்பாடலுக்கான விளக்கம்.

 

கடவுள் அல்லாத பிற தெய்வங்களை வழிபட்டால் அவை தரும் பயனும் கூடப் பரம்பொருளாகிய கடவுள் தருவதே என்பதுதான் இந்தச் சித்தியார் பாடல்களின் பொருள். உண்மை இவ்வாறு இருக்க பிறப்பு, இறப்புக்கு உட்படும் பலவாகிய தெய்வங்களை வழிபடுவதால் என்ன பயன்? இவற்றோடு சோதிடம் குறிக்கும் நவக்கிரகங்களையும் தெய்வங்களாக்கி அவற்றை வழிபடுவதாலும் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி என்று அவற்றின் பெயர்ச்சிகளை பெரும் சமய விழாக்களாகக் கோயில்களில் கொண்டாடுவதாலும் என்ன பயன் என்று சிந்திக்க வேண்டாமா?

 

கடவுள் இலக்கணம்

 

இலக்கணம் என்னும் சொல் பண்பு அல்லது தன்மை என்னும் பொருளில் ஆளப்பெற்றுள்ளது. சைவம் இறைவன் எண் வகைப் பண்புகள் உடையவன் என்கிறது. கடவுள் ஒரு பொருள். பொருள்கள் ஒவ்வொன்றுக்கும் பண்பு உண்டு. வெம்மை நெருப்பின் பண்பு, தண்மை நீரின் பண்பு.  கடவுளை ‘என்குணத்தான்’ (9) எனத் திருவள்ளுவரும் கூறுகிறார்.

 

தன்வயத்தன், இயற்கை அறிவினன், முற்றறிவு உடையவன், தூய உடம்பினன், மலமற்றவன், பேராற்றல், பெருங்கருணை உடையவன். இன்ப வடிவு உடையவன் ஆக இவை கடவுளின் எண்வகைப் பண்புகள்.

 

ஒன்றிலிருந்து தோன்றாமல், எப்பொருளையும் சாராமல், தனக்கு மேல் தலைமை ஒன்று இல்லாமல் இருப்பது தன் வயத்தன் அல்லது சுதந்திரன். தனக்கு மேல் ஒருவன் இருந்து அறிவிக்காமல் இயற்கையில் எல்லாம் அறிந்தவன், காலம், இடம் கடந்து அனைத்தையும் அறிதல், பிறப்பும் பிணி, மூப்பு, சாவும் இல்லாத திருமேனி உடையவன், ஆணவம் என்னும் இருளால் மறைக்கப்படாதவன், நினைத்த அளவில் அரிய பல செயல்கள் ஆற்ற வல்லவன், எல்லையற்ற கருணை உடையவன், என்றும் இனப வடிவாய் இருப்பவன் ஆகிய எண்வகைப் பண்புகள் கடவுளுக்கு இலக்கணம் என்பது சைவம். திருவள்ளுவர் சிந்தனையும் இதுவே.

 

ஒரு கடவுளே நால்வர் நெறி

 

சைவ சமய அடியாருள் நால்வர் முன்னிலை பெறுவர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் சிவத்தைச் சிந்திப்போருக்கு வழி காட்ட வந்த அருளாளர்கள். இவர்களில் ‘ஈறாய் முதல் ஒன்றாய்’ (1.11.2) என்று திருஞானசம்பந்தரும் ‘சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம், சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம்’ (6.98.5) என்று திருநாவுக்கரசரும் ‘எந்தாய் உன்னையல்லால் இனி ஏத்த மாட்டேனே’ (7.21.1) என்று சுந்தரரும் ‘ஒருவன் என்னும் ஒருவன் காண்க’ (8.3.43) என்று மாணிக்கவாசகரும் சிவபெருமானே முழுமுதல் பரம்பொருள் என்னும் கருத்தை நிறுவியுள்ளனர்.

 

இவ்வாறு ஒரு கடவுள் நெறியை நமது அருளாளர்கள் உணர்த்தியும் அதனைப் பின்பற்றி வாழத் தவறியதால் இன்று ஓரூரில் பல கோயில்கள், ஒவ்வொன்றிலும் பல தெய்வங்கள், ஒவ்வொன்றுக்கும் பல கிரியைகள், விழாக்கள் என்று ஆகிவிட்டன. பல தெய்வ வழிபாட்டை நியாயப்படுத்தும் புராணங்கள் பரம்பொருளுக்கும் மனைவிகள், பிள்ளைகள் என்று உறவுகள் கற்பித்தன. இதனால் சமயத்தில் அறிவார்ந்த சிந்தனை அழிந்து புராணங்களின் அடிப்படையிலான நம்பிக்கைகள் பெருகிவிட்டன.

 

ஆன்மாக்கள் படிமுறையால் பக்குவப்படவே பலதெய்வ வழிபாடு வந்தது என்று சிலர் கூறுவர். ஆனால் கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகவே தமிழர் எந்தப் படியிலும் முன்னேறி வரவில்லை என்பதே சமய வரலாறு காட்டும் காட்சியாய் உள்ளது.

 

எனவே, பல தெய்வ வழிபாட்டிலிருந்து ஒரு கடவுள் வழிபாட்டுக்கும் அறிவுக்குப் பொருந்தாத நம்பிக்கைகளிலிருந்து அறிவார்ந்த சிந்தனைக்கும் புராணங்களிலிருந்து மெய்ஞ்ஞான நூல்களுக்கும் அர்த்தமற்ற சடங்குகளிலிருந்து அன்பு சார்ந்த வழிபாட்டுக்கும் தமிழர் சமயநெறி திருத்தம் பெற வேண்டும்.

 

இரண்டாம் உலக சைவ சமய மாநாடு

 

எதிர்வரும் ஜூலை 26,27 மிட்லாண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இரண்டாம் உலக சைவ சமய மாநாடு தமிழர் சமய வாழ்வுக்குப் பல சீர்திருத்தங்களை முன்மொழிகிறது. கலந்து கொள்ள விரும்புவோர் saivaperavai.org என்னும் இணைய தளத்திற்குச் சென்று விளக்கம் பெறுவதோடு முன்பதிவும் செய்து கொள்ளலாம். தொடர்புக்கு: [email protected]

முனைவ ர் நாகப்பன் ஆறுமுகம் 0169691090.