தமிழ் ஏன் புறக்கணிக்கப்படுகின்றது? -(கோடிசுவரன்)

bangsa malaysia03இன்று தமிழ் பல இடங்களில் புறக்கணிக்கப்படுகின்றது.

தமிழ், அரசாங்க அதிகாரபூர்வ மொழிகளில் ஒன்று. இதில் நமக்கு எந்த ஐயப்பாடும் இல்லை. ஏன்? அரசாங்கத்துக்கும் கூட அப்படி ஒரு ஐயப்பாடும் இல்லை. ஆனாலும் தமிழ் புறக்கணிக்கப்படுகின்றது!

அரசாங்கத்தின் கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. பிரச்சனைகள் எல்லாம் அரசாங்கத்தின் கொள்கைகள் பின்பற்றப்படுவதில்லை. பின் பற்றப்பட வேண்டும். அரசாங்கத்தின் கொள்கைகளை யாரும் மாற்றமுடியாது. அதுவும் சம்பளம் வாங்கும் ஒரு அரசாங்க அதிகாரியால் மாற்றமுடியாது. அதுவும் தேச நிந்தனைதான். அப்படி மாற்றுகின்ற அந்த அரசாங்க அதிகாரிகள் மீது அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது தான் இப்போது நம் முன்னே உள்ள பிரச்சனை! நடவடிக்கை எடுக்காவிட்டாலும் பரவாயில்லை! அரசாங்கமே தட்டிக்கொடுத்து தாலாட்டுவதால் தான் அவர்கள் இன்னும் ஊக்கத்தோடு தங்களது தவறுகளைத் தொடர்கிறார்கள். அப்படிச் செய்பவர்களுக்கு நல்ல பெயரும் கிடைக்கிறது! யார் கண்டார், பொற்கிழியும் கிடைக்கலாம்!

சமீபத்தில், குறைந்தக் கட்டண விமான நிலையத்தில் வழக்கம் போல தமிழ் முற்றிலுமாகப் புறக்கணிக்கப் பட்டிருக்கின்றது.

நமது இயக்கங்கள், மன்றங்கள், கட்சிகள் ஒரு சேர பத்திரிக்கைகளுக்குக் கண்டனங்களைத் தெரிவித்தனர்; ஒய்ந்தும் போய்விட்டனர். அவ்வளவு தான் எங்களால் செய்ய முடியும் என்னும் நிலைமைக்கு அவர்கள் வந்து விட்டனர். ஆனால் இவர்களின் கண்டனங்கள் யாரிடம் போய்ச் சேர வேண்டுமோ அங்குப் போய்ச் சேராது என்பது எழுதுபவர்களுக்கே தெரியும். சும்மா பத்திரிக்கைகளுக்கு நாங்களும் எங்களது எதிர்ப்பினைத் தெரிவித்தோம் என்பதைத் தவிர வேறு எந்தச் சாதனையும் இவர்கள் புரியவில்லை!

சீனாவுக்குச் சென்ற மாஸ் விமானம் சமீபத்தில் மறைந்து போனது. அது என்ன ஆனது என்று இதுவரை எந்தச் செய்தியும் இல்லை. அதன் எதிரொலி என்ன? இங்கிருந்து மாஸ் விமானம் சீனா போகவில்லை! சீனாவிலிருந்து மாஸ் விமானம் இங்கு வரவில்லை! காரணம் பயணிகள் இல்லை! இரண்டு பக்கத்திலிருந்தும் சீனர்கள் புறக்கணித்து விட்டனர்! அங்குள்ள மாஸ் அலுவலகம் மூடப்பட்டு விட்டது!

நம்மாலும் இப்படி ஏதாவது  செய்ய முடியுமா? முடியும். இப்போது இங்கிருந்து ஏர் ஏசியா, ஏர் மெலிண்டோ, மாஸ் விமானங்கள் அதிகமான பயணங்களை இந்தியாவிற்கு மேற்கொள்கின்றன. நாம் இந்த விமானங்களைப் புறக்கணிக்க வேண்டும். அவசியம் போக வேண்டும் என்னும் சூழ்நிலை இருந்தால் மற்ற விமானங்களை[ப் பயன்படுத்தலாம். முடிந்தவரை குறைந்த கட்டண விமான நிலையத்தைப் பயன் படுத்தக்கூடாது!

நாம் இதனைத் தனியாகச் செய்வதை விட பயண முகவர்களிடம் இந்தப் பிரச்சனையை விட்டுவிட வேண்டும். அவர்கள் நினைத்தால் எதையும் செய்ய முடியும். வேறு விமானங்களுக்குப் பயணங்களை அவர்களால் மாற்றிவிட முடியும். தனிப்பட்ட முறையில் பலர் இந்தியா போக கூட்டுப் பயணங்களை ஏற்பாடுகள் செய்கின்றனர்.  இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் போதும். நாம் தனிப்பட்ட முறையில் யாரிடமும் பேச வேண்டிய அவசியமில்லை. இந்தப் பயண முகவர்களே பேச வேண்டிய இடத்தில் பேசி அதற்கு ஒரு தீர்வு காண்பார்கள். பண அடியைப் போல எந்த அடியும் உதவாது!

நமது என்.ஜி.ஒ.க்கள் இந்தப் பயண முகவர்களிடம் பேச்சு நடத்தினாலே இந்தப்பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்துவிடும். அங்கும் இங்கும் போய் நமது எதிர்ப்பினைத் தெரிவிப்பதை விட பயண முகவர்கள் இதனைக் கையில் எடுக்கட்டும். ஒரு வழி பிறக்கும்

ATM இயந்திரத்தில் தமிழ்மொழி இல்லை என எல்லாக் காலங்களிலும் கூப்பாடுப் போட்டுக் கொண்டிருக்கிறோம். எந்த ஒரு முடிவும் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை.

நமது வர்த்தகர்கள் நினைத்தால் இதற்கும் ஒரு முடிவு காணலாம். நம்முடைய வர்த்தகர்கள் வங்கிகளில் பணம் தினசரி போடத்தான் செய்கின்றனர்.  ஒவ்வொரு நாளும் நமது இந்திய வர்த்தகர்களால் கோடிகணக்கில் பணம் வங்கிகளில் போடப்படுகின்றது. ஏன்? அதை விட கூடுதலாகவும் இருக்கலாம்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமது குறைபாடுகளை இந்திய வர்த்தகர் சங்கத்திடம் எடுத்துச் செல்லவேண்டும். அது நமது என்.ஜி.ஒ.க்களின் வேலை. எந்த வங்கி தங்களது ATM  இயந்திரத்தில் தமிழ் மொழி பயன்படுத்துகின்றதோ அந்த வங்கியில் எங்களது பணத்தைப்போட நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை வங்கிகளுக்குப் புரியவைக்க வேண்டும். ஒரே வங்கியில் வர்த்தர்களின் பணம் போடப்பட்டால் அது ஒரு பெரிய தொகை தானே!

இந்த விஷயத்தில் ஹாஜி தஸ்லிம், கென்னெத் ஈஸ்வரன், ஆர்.கே.நாதன், கே.ஆர்.சோமசுந்தரம், ஞானலிங்கம் போன்ற தொழில் அதிபர்களின் தலையீடு பயன் தரும் அல்லவா.  கூட்டுறவு சங்கம் தனது கட்டுப்பாட்டில் உள்ள தோட்டங்களின் பணப் பட்டுவாடாக்களை ஒரே வங்கியில் செய்தால் அது சாதாரண விஷயம் அல்லவே! கென்னெத் ஈஸ்வரன் அவர்கள் ஒரு நாளிதழை ஒரு வெள்ளிக்கு விற்பனைச் செய்கிறவர். வேறு யாராலும் செய்ய முடியாததை அவர் செய்கிறார். அப்படி என்றால் அவருடைய மற்றைய நிறுவனங்களின் வங்கிக்கணக்கில் எத்தனை கோடி புரளும் என்று யோசித்துப் பாருங்கள். கப்பல் தொழிலதிபர் ஞானலிங்கம் என்ன சாதரண மனிதரா? ஆர்.கே.நாதன் இரும்பு மனிதர் அல்லவா! ஹாஜி தஸ்லிம் அவர்கள் இனப்பற்று, மொழிபற்று என்று வரும் போது முன்னிலையில் உள்ளவர். வங்கிகளைப் பொறுத்த வரை இவர்கள் அனைவரும் பலம் வாய்ந்தவர்கள்; சக்தி வாய்ந்தவர்கள். இவரைப் போல் இன்னும் பலர் உள்ளனர். மேலும் இவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பது கூடுதல் நன்மை.

இதல்லாம் சிறிய முயற்சிகள் தாம். உண்மையைச் சொன்னால் நமது முயற்சிகள்  சரியாக அமையவில்லை. நாம் சூரியனைப் பார்த்துக் குலைத்துக் கொண்டிருக்கிறோம்! ஒரு வேளை நாம் இந்த முயற்சிகளில்  கவனம் செலுத்தினால் இதற்கெல்லாம் ஒரு முடிவு காணலாம். ‘எனக்கென்ன’ என்னும் போக்கும் நம்மிடத்தில் இருந்தால் வருங்காலங்களில் வங்காள தேசிகளின் மொழி, தமிழின் இடத்தைப் பிடித்திக்கொள்ளும்! இப்போதும் காற்று அவர்கள் பக்கம் தான் வீசுகிறது என்பதை மறக்கவேண்டாம்!

பணத்தால் அடிக்க வேண்டிய இடத்தில் பணத்தால் தான் அடிக்க வேண்டும்! வங்காள தேசிகள், சீனர்களைப் போலவே,  பணத்தைக் கொடுத்து காரியத்தைச் சாதிப்பவர்கள் என்பது நமக்குத் தெரிந்த விஷயம் தானே!

இவைகள் எல்லாம் சில ஆலோசனைகள் தாம்.  இவைகளை விட இன்னும் சிறப்பான ஆலோசனைகள்  உங்களிடமும் இருக்கும். அவைகளையும் தெரியப்படுத்துங்கள். இந்தப் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு காண்போம்.

இது மட்டும் அல்ல. இன்னும் பல வழிகளில் தமிழ் புறக்கணிக்கப் படுகின்றது. கொடிபிடிப்பது, ஆர்ப்பாட்டம் செய்வது ஆகியவை பழைய முறைகள். வேறு வழிகளை ஆராய்வோம்.

அரசு சாரா இயக்கங்கள் தான் இதற்கான வழி வகைகளை ஆராய வேண்டும்.

முடிந்த வரை பணத்தால் இவர்களை எப்படிக் கவிழ்ப்பது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அது சீனர்களுக்குக் கை வந்த கலை! நாமும் அதே கலையைப் பயன்படுத்துவோம்! நமது மொழியைப் பாதுகாப்போம்!

(கோடிசுவரன்)