வாகன நெரிசலுக்கு யார் காரணம்? – தமிழினி

ttவாகன நெரிசல் பலரை கோபத்தின் விளிம்பிற்குப் கொண்டு செல்கிறது. நாள்தோறும் பொதுப் போக்குவரத்து சேவையைப் பயன்படுத்துகிற பட்சத்தில் என்னைவிட அதுகுறித்த அதிக தகவல்கள் உங்களிடம் இருக்கக்கூடும். மலேசியா சுதந்திரம் அடைந்து 57 ஆண்டுகள் நிறைவடையப் போகிற இன்றைய நிலையிலும் தரமானதொரு பொதுப் போக்குவரத்து சேவையை வழங்க முடியவில்லை என்பதே வருத்தமளிக்கும் மறுக்க முடியாத உண்மையாகும்.

இயற்கைப் பேரிடர்கள் அற்ற மலேசியாவில் தரமான அதே வேளையில் நிரந்தரமான பொதுப் போக்குவரத்து சேவை வழங்கப்பட முடியாமல் இருப்பதற்கு என்னதான் காரணம்?

இன்றைய நிலையில், தன் வாழும் நகரத்தைத் தன் தேவைகளுக்காக சுற்றி வருவதைத் தவிர வேறு பாதிப்பளிக்கும் விசயம் ஒரு நகர்ப்புறவாசிக்கு இல்லை என்றே நான் நினைக்கிறேன். மில்லியன் கணக்கான நகர வாசிகள் ஒவ்வொரு நாளும் வீட்டிலிருந்து வேலையிடத்திற்கு, வேலையிடத்திலிருந்து வீட்டிற்கு, தன் இன்ன பிற தேவைகளுக்கு என மிக முகாமையாக பொதுப் போக்குவரத்தினை நம்பி இருக்கின்றனர்.

நாட்டில் 70 விழுக்காட்டு மக்கள் நகர்புறங்களில் வசிக்கின்றனர். கோலாலம்பூரில் மட்டும் சுமார் 1.2 மில்லியன் மக்கள் தினசரி தேவைக்காக பேருந்து, விரைவு இரயில், கொம்யூட்டர் இரயில் சேவை போன்ற பொது போக்குவரத்து வசதிகளை நம்பியுள்ளனர்.

இன்றைய நிலையில், உலக முழுவதும் உள்ள மாநகர்களில்  போக்குவரத்து நெரிசல் தலையாய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதிகரித்து வரும் மக்கள் தொகையும் வாகனங்களின் எண்ணிக்கையும் இதற்கு முக்கிய காரணங்களாகின்றன. ஆற்றல் குறைந்த போக்குவரத்து முறை, நிலைமையை மேலும் கடுமையாக்குகிறது.  கோலாலம்பூரைத்தவிர ஜொகூர் பாரு, ஈப்போ, ஜோர்ஜ்டவுன், கூச்சிங் போன்ற நகரங்களிலும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண தனிபட்ட கவனம் தேவைப்படுகிறது.

நாட்டில், பொதுப் போக்குவரத்தை சேவையை மேம்படுத்துவதற்குப் பல நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அவையெல்லாம் எந்தளவிற்கு போக்குவரத்தை நெரிசலைக் குறைக்க உதவியுள்ளன என்றால் நம்பிக்கையளிக்கும் பதிலினை நம்மால் வழங்க முடியவில்லை.

t1நாட்டில் பொது போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் தரைமார்க்க பொது போக்குவரத்து ஆணையம் SPAD அமைக்கப்பட்டதும் ஒன்று. தேசிய அடைவுநிலைக்கான முக்கிய துறைகளில் ஒன்றான பொது போக்குவரத்து முறையை தரம் உயர்த்தும் முக்கிய பங்கினை SPAD கொண்டுள்ளது.

கடந்தாண்டு இறுதியில் பரபரப்பான வேளைகளில் சராசரி 437 ஆயிரத்து 500 பயணிகள் பொது போக்குவரத்து சேவையைப்  பயன்படுத்தினர். அடுத்தாண்டு முதல், பரபரப்பான நேரங்களில் 750 ஆயிரம் பேர் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் இலக்கை அரசாங்கம் கொண்டுள்ளது. அதேவேளை மக்களில் 75 விழுக்காட்டினர் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதற்கான வசதியை ஏற்படுத்தும் இலக்கும் நிர்ணயக்கப்பட்டுள்ளது.

நாட்டில், பொதுப் போக்குவரத்தை சேவையை மேம்படுத்துவதற்குப் பல நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அவையெல்லாம் எந்தளவிற்கு போக்குவரத்தை நெரிசலைக் குறைக்க உதவியுள்ளன என்றால் நம்பிக்கையளிக்கும் பதிலினை நம்மால் வழங்க முடியவில்லை.

t2அதேவேளையில், இலக்குகளை அடைவதற்கான சரியான தடத்தில் நாம் பயணிக்கிறோமா என்பது குறித்து நாம் மீள்பார்வை செய்ய வேண்டியது இன்றைய நிலையில் மிகவும் அவசியமாகிறது.

KTM சேவைக்கான ரயில் பெட்டிகள் அதிகரிக்கப்பட்டிருப்பது, விரைவு இரயில் சேவைக்கான இரயில் பெட்டிகள் அதிகரிக்கப்பட்டிருப்பது, எம்ஆர்டி துரித இரயில் சேவை நிர்மாணிப்பு, இலவச நகர் பேருந்துகள், BANDAR TASIK SELATAN ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கப்பட்டிருப்பது, புடுராயா பேருந்து நிலையம் மறுசீரமைப்பு போன்றவை நம்பிக்கையளித்தாலும் இன்னும் நாம் மேம்படுத்த வேண்டியது அதிகம் இருப்பதாகவே நடப்பு சூழல் நமக்குப் புலப்படுத்துகிறது.

விரைவு இரயில் சேவைகள் (Rapid KL LRT, KL Monorail, KLIA Express, KLIA Transit)  சேவைகள் ஓரளவு திருப்தியளித்தாலும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் கொம்யூட்டர் இரயில் சேவை மற்றும் பேருந்து சேவைகள் இன்றுவரை குறைந்தபட்ச திருப்தியை அளிக்கக்கூடிய நிலையைக் கூட எட்டிப் பிடிக்க வில்லை.

மிக தாமதமாக வரும் இரயில்கள் மற்றும் பேருந்துகள், அறிவிக்கப்படும் நேரம் அடிக்கடி மாற்றப்படும் கொடுமை, அதிக மக்கள் வசிக்கும் இடங்களுக்குக் குறைந்தளவிலான பொதுப் பேருந்துகள், மக்கள் கூட்டத்தில் திக்கி திணறி ஓடிக் கொண்டிருக்கும் பேருந்துகள் என இத்தகைய குறைப்பாடுகள் களையப் படாதவரை பொதுச் சேவைகளை முதன்மை போக்குவரத்தாக பயன்படுத்துவதை கண்டிப்பாக ஊக்குவிக்க முடியாது.

t3மக்கள் நெரிசல் அதிகம் நிறைந்த பகுதிகளில் மக்கள்  பொதுப்போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்துவதை ஊக்குவிக்க முதலில் பொதுப் போக்குவரத்து தரமுயர்த்தப்பட வேண்டும். இதன்வழி மட்டுமே சாலை நெரிசலைக் கட்டுப்படுத்த முடியும். இல்லையேல், வாகனங்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதை நம்மால் தவிர்க்க இயலாது.

கோலாலம்பூரில் வாகன நெரிசல் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணாவிட்டால் வாழ்க்கைத் தர ரீதியில் அது மிகபெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். நிறைவளிக்கும் பொதுப் போக்குவரத்து சேவை இருக்கும் பட்சத்தில் மக்கள் அதனைப் பயன்படுத்துவதற்குத் தயங்க மாட்டார்கள். அரசாங்கம் அந்த நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் துரிதமாக ஈடுபட வேண்டும். இல்லையேல், கட்டுப்படுத்த முடியாத சாலை நெரிசல் நமது நகரங்களின் அமைதியையும் அழகையும் கெடுத்து மக்களின் நிம்மதியையும் குலைத்து விடும் என்பது மட்டும் நிதர்சனம்.