கோழையானதால் மன்னிப்போம் – மறப்போம் – இலக்கியா

கடந்த ஒரு வாரமாக தமிழ்ச் சமூகம் கொந்தளித்துப் போய் கிடக்கிறது. அறிக்கைகள் பறந்துக் கொண்டிருக்கின்றன. ஆளாளுக்குக் கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி என்னதான் நடந்தது?

சம்பவம் 1

அவள் இரண்டாம் ஆண்டு மாணவி. நன்னெறி பாடவேளை. வகுப்பறையில் எதற்காக பேசினாள் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. வகுப்பறையில் பேசுவது அவ்வளவு குற்றமாக என்ற கேள்வியைக் கூட நாம் கேட்கலாம். வகுப்பறையில் பேசினாள் என்பதற்காக சமயக்கல்வி கற்றுத் தரும் ஆசிரியரால் காலணியால் தாக்கப்படுகிறாள். ஆசிரியர் தான் காலில் அணிந்திருந்த காலணியைக் கழற்றி இந்த மாணவியை நோக்கி விட்டெறிகிறார். அக்காலணி மிகச் சரியாக அவள் தலையைப் பகுதியைத் தாக்கி இரத்தம் கொட்டுகிறது. இச்சம்பவத்தை கண்ணுற்ற மற்றுமொரு ஆசிரியரும் அப்பள்ளியின் தலைமையாசிரியரும் அந்த மாணவியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்குள்ள மருத்துவர் கண்டிப்பாக காவல்துறை புகார் செய்யப்பட வேண்டும் என கூறியிருக்கிறார்.

அந்த மற்றுமொரு ஆசிரியரும் தலைமையாசிரியரும் அந்த மாணவியின் தந்தையைச் சந்தித்து சமரசம் பேச சென்றிருக்கின்றனர். அம்மாணவியின் தந்தை நகராண்மைக் கழகத்தில் பணிபுரிகிறார். அதற்குள் பள்ளியிலிருந்து தந்தைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார். மாணவிக்கு நெற்றியில் ஏற்பட்ட காயத்திற்கு மூன்று தையம் போடப்பட்டிருக்கிறது. அங்கும் சிலர் சமரசம் பேசப் போக விஷயம் பெரிதாகி வெளியே தெரியவந்திருக்கிறது.

அந்த நாளே அந்த குற்றவாளி ஆசிரியர் வேறொரு பள்ளிக்கு வேலை மாற்றப்பட்டிருக்கிறார்.

சம்பவம் 2

ஆசிரியர் ஒருவர் துடைப்பக் கட்டையால் மாணவர் ஒருவனை தாக்கியிருக்கிறார்.

இன்ன பிற சம்பவங்கள்Punish school students

1. மாணவர்களைச் சாதிப்பெயர் சொல்லி திட்டுதல்

2. திருடன், கூலிக்காரன், வந்தேறி, குண்டர்கள் என இழிவாகத் திட்டுதல்

3. சமய நம்பிக்கைகளை கேலிக்குள்ளாக்குதல் – கேலி செய்தல்

4. கூடியபட்ச தண்டனைகள் வழங்குதல்

5. பிற மாணவர்களின் முன்பாக இழிவுபடுத்தல்

இப்படியான சம்பவங்கள் தொடர்ந்து ஆங்காங்கே பள்ளிகளில் நடந்து வருகின்றன. மிக முக்கியமாக நாட்டின் அடையாளமாக முன்மொழியப்படும் தேசியப் பள்ளிகளிலே இப்படியான சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன.

நாம் என்ன செய்கிறோம்?

1.       துணைக்கல்வி அமைச்சர்

இப்படியான சம்பவம் நடந்திருக்கக் கூடாது. இது வருத்தமளிக்கும் விசயமாகும். சம்பந்தபட்ட ஆசிரியரிடம் விளக்கம் கோரும் கடிதம் கேட்கப்பட்டுள்ளது. அது கிடைத்தப்பிறகு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

2.       பிற சமூக  தலைவர்கள் ஆர்வலர்கள்

ஒரு வாரத்திற்குக் குறையாது பெரிய தலைவர் தொடங்கி சின்ன தலைவர் வரை கண்டன அறிக்கைகள் பறக்கும். காவல்துறை புகார்களும் செய்யப்படும். பின் எல்லாம் மறக்கப்படும்.

அதற்குள் அந்த சம்பந்தப்பட்ட ஆசிரியர் வேறொரு பள்ளியில் நலமே தன் பணியைத் தொடங்கியிருப்பார். இங்கு எனக்கு ஒன்று மிகத் தெளிவாகத் விளங்குகிறது. உடனடியாக பள்ளி மாற்றலை விரும்பும் ஆசிரியர்கள் மிக தைரியமாக நான் மேற்கூறிய ஏதாவதொன்றை செய்யலாம். உடனடியாக பள்ளி மாற்றல் செய்யப்படுவார்கள்.

children-dayகுழந்தைகளை ஒத்த தொடக்கப்பள்ளி மாணவர்களை அடித்தல் – துன்புறுத்தல் – இழிவுபடுத்துதல் என்பது கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் மலேசிய கல்வி அமைப்பின் மீது நம்பிக்கை இழக்க நேரிடும். ஒரே மலேசியா, தேசிய கல்விக் கொள்கை என நாம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் நிலையிலேயே இப்படியான சம்பவங்கள் நடக்கின்றன.

யாருக்கு நடந்தால் நமக்கென்ன என்றில்லாமல் ஒட்டுமொத்த சமூகமும் இதற்காக ஒருங்கிணைந்து எதிர்வினையாற்றினால் மட்டுமே இப்படியான சம்பவங்களைக் குறைந்தபட்சமாவது தடுக்க முடியும். இல்லையேல், வழக்கமாக கூச்சலிட்டுவிட்டு இவர்கள் மறந்து விடுவார்கள் என சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கும்.