யுக்ரேய்ன் தூதரகம்: விமானத்தை வீழ்த்தியவர்கள் ரஷ்ய-ஆதரவு கிளர்ச்சிக்காரர்கள்தான்

ukraineஎம்எச் 17 சுட்டு  வீழ்த்தப்பட்டதற்கு  யுக்ரேய்ன்  காரணமல்ல  என்று  கோலாலும்பூரில்  உள்ள  அதன்   தூதரகம்  கூறியுள்ளது. “ரஷ்ய-ஆதரவு  கிளர்ச்சிக்காரர்களும்  ரஷ்யாவில்  தயாரிக்கப்பட்ட  ஆயுதமும்தான்  அதற்குக்  காரணம்”  என்று  அது  கூறியது.

“யுக்ரேய்ன்  பயங்கரவாதிகளுக்கு  எதிரான  நடவடிக்கைகளை  மேற்கொண்ட  நேரங்களில் எல்லாம்  அதன்  ஆகாயத்  தற்காப்புச்  சாதனங்களைப்  பயன்படுத்தியது  இல்லை  என்பதை  வலியுறுத்த  விரும்புகிறோம்”, எனத்  தூதரகத்தின்  அறிக்கை  தெரிவித்தது.

“அச்சம்பவம்  நிகழ்ந்தபோது  யுக்ரேய்னின்  போர்  விமானங்கள்  எதுவும்  வானில்  பறக்கவில்லை”, எனவும்  அது  குறிப்பிட்டது.

இதனிடையே, இன்று  சீனாவிலிருந்து  திரும்பிய  போக்குவரத்து  அமைச்சர்  லியோ  தியோங்  லாய்,  எம்எச் 17-இல்  பயணம்  செய்தோரின்  குடும்பத்தினரை  கேஎல்ஐஏ-இல்  சந்தித்துப்  பேசினார். ஆனால்,  அவர்  செய்தியாளர்களைச்  சந்திக்கவில்லை.

தற்காப்பு  அமைச்சர் ஹிஷாமுடின்  உசேன்,  எம்எச் 17  தடைசெய்யப்பட்ட  பகுதியில்  பறந்ததால்தான்  சுட்டு வீழ்த்தப்பட்டது  எனக்  கூறப்படுவதை  மறுத்தார்  என  பெர்னாமா  கூறியது.

அனைத்துலக  விமானப்  போக்குவரத்து  சங்கமும்  அந்த  விமானம்  பறந்த  பாதை  தடை  விதிக்கப்பட்ட  பாதை  அல்ல  என்றுதான்  கூறியுள்ளது.

ஆனால்,  நியு  யோர்க்  டைம்சின்  செய்தியொன்று  ஏர்  பிரான்ஸ்,  பிரிட்டிஷ்  ஏர்வேய்ஸ்  போன்ற  விமான  நிறுவனங்கள்  சில  காலமாகவே  ஆயுதப்  போராட்டம்  நடைபெறும்  அப்பகுதிக்கு  உயரே பறப்பதைத்  தவிர்த்து  வருவதாகக்  கூறுகிறது.