பெண்களை தொடர்ந்து, குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லாத நகரமாக மாறும் டில்லி

delhi_childபுதுடில்லி: பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகர் என்ற பெயரை பெற்றுள்ள டில்லி, தற்போது, குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லாத நகர் என்ற பெயரை பெற்றுள்ளது, பல தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு குறித்து, இந்தியா முழுவதும் 53 நகரங்களில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் டில்லியில் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில், டில்லியில் தினந்தோறும், சராசரியாக 16 குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது. டில்லிக்கு அடுத்த இடத்தை மும்பை பெற்றுள்ளது. இங்கு தினந்தோறும், 3 குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் நடைபெறுகிறது. காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் தான், குழந்தைகளுக்கு பாதுகாப்பான நகரம் என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு, தேசிய குற்றப்பதிவேடு அறிக்கையின்படி, டில்லியில் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் நடைபெற்றதாக, 6,124 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மும்பையில் 902 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே ஆண்டில், ஜார்க்கண்டில் உள்ள ராஞ்சி, ஜாம்ஷெட்பூர், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அசன்சோல் நகரங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஏதும் நடைபெற்றதாக வழக்குகள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நாடு முழுவதும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 52.5 சதவீதம் அதிகரித்துள்ளது. 58,224 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில் , கடந்த 2012ம் ஆண்டில் 38,172 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில், 54.2 சதவீதம் குழந்தைகளை கடத்துதல் மற்றும் பலவந்தமாக கடத்தி, பணம் கேட்டு மிரட்டுதல் போன்ற குற்றங்கள் தொடர்புடையது. 51.3 சதவீதம் பெண் குழந்தைகளை கடத்தியது தொடர்புடையது. 49.3 சதவீத வழக்குகள், தற்கொலை தொடர்புடையதும், 44.7 சதவீத வழக்குகள் பாலியல் பலாத்காரம் தொடர்புடையது எனவும் தெரியவந்துள்ளது.

மாநிலங்கள் அளவில், 9857 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உ.பி., முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா, 8.247 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில், நாகாலாந்து மாநிலத்தில் 8 வழக்குகளும், டாமன் டியூ, தாத்ரா மற்றும் நாகர் ஹைவேலியில் 14 வழக்குகளும், சிக்கிம் மாநிலத்தில் 39 வழக்குகளும், புதுச்சேரியில்47 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

TAGS: