கிட் சியாங் போலீசாரால் விசாரிக்கப்படவிருக்கிறார்

Kit Siang-IGPடிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் த ரோக்கெட் என்ற தளத்தில் தியோ பெங் கோக் மரணம் குறித்து சமீபத்தில் வெளியிட்டிருந்த கருத்து குறித்து அவரிடம் விரைவில் போலீஸ் வாக்குமூலம் பெறும்.

கிட் சியாங் வெளியிட்டுள்ள கருத்து தேச நிந்தனைக் கூறுகளைக் கொண்டிருப்பதால் போலீஸ் பல புகார்களைப் பெற்றுள்ளது என்று ஐஜிபி காலிட் அபு பாக்கார் கூறுகிறார்.

“அக்கட்டுரையில் அவரது சொற்கள் தேச நிந்தனையானவைகளாக இருக்கலாம். தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் லிம்மை நாங்கள் விசாரிப்போம்”, என்று காலிட் நேற்று கோலாலம்பூரில் கூறினார்.

“தியோ பெங் கோக் கொல்லப்பட்டதற்கு நியாயம் கிடைக்கும் வரையில் மலேசியர்கள் ஓயமாட்டார்கள்” என்ற தலைப்பில் லிம் கிட் சியாங்Teo Beng எழுதியிருந்த கட்டுரையில் தியோவை கொன்றவர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.

கிட் சியாங் வெளியிட்டுள்ள அறிக்கை தியோவின் மரணம் ஒரு கொலை என்று மக்களை நம்பவைக்கும் ஒரு முயற்சி என்று காலிட் கூறினார். “உண்மையற்ற ஒன்றை உருவாக்க முயற்சிக்க வேண்டாம். அது மக்களைச் சினமடயச் செய்வதோடு சந்தேகத்தை வளர்க்கும்”, என்றார் காலிட்.

தியோ பெங் கோக் ஜூலை 16, 2009 இல் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் 14 ஆவது மாடி அலுவலகத்தில் வாக்குமூலம் அளித்த பின்னர் அக்கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.