மீனவர் பிரச்சனை தொடர்பாக இந்திய பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

modi_jayaசர்வதேச கடல் எல்லைப் பகுதியில் மிதவைகளைப் பொறுத்தக்கூடாது என்றும், மீனவர்களுக்குப் பரந்த வாழ்வாதரங்களை அளிக்கும் வகையில் பல்வேறு நிதியுதவிகளைக் கோரியும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்தக் கடிதத்தில், தமிழக மீனவர் பிரச்சனையில் மத்திய அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்திருக்கும் அவர், கடந்த பதினேழாம் தேதியன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நடத்திய பல்துறை அமைச்சர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முயற்சிகள் குறித்து தன் கவலையை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக, சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் அடையாளத்திற்காக மிதவைகளை மிதக்கவிடுவது குறித்து தன் கவலையை அவர் தெரிவித்துள்ளார்.

1974,76ஆம் வருட ஒப்பந்தங்களின் மூலம் இலங்கைக்குக் கொடுக்கப்பட்ட கச்சத்தீவு மீதான இறையாண்மையை மீட்க வேண்டும் என தான் வலியுறுத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் முதலமைச்சர், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது நீதிமன்ற நடவடிக்கையில் குறுக்கிடுவதாக அமைந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

அந்தப் பகுதியில் சர்வதேச கடல் எல்லை வரையறுக்கப்படும் விவகாரம் முடிந்துவிட்டதாக தாங்கள் கருதவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மீன்பிடித்தல் தொழிலுக்கென முழுமையான சிறப்பு நிதியாக 1,520 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யவும் வருடாவருடம் பத்து கோடி ரூபாய் பராமரிப்புப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யவும் தான் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருப்பதையும் இந்தக் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிதியுதவி தவிர, பாக் நீரிணைப் பகுதியில் நீடித்த மீன்பிடி முறைகளை அறிமுகப்படுத்த கூடுதலாக 100 கோடி ரூபாயை மானியமாக அளிக்கவும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இலங்கை மற்றும் தமிழக மீனவர்களுக்கு இடையில் நடந்த பேச்சுவார்த்தையில், நீடிக்கக்கூடிய மீன்பிடி முறைகளைப் பயன்படுத்துவதன் மூலமும் மீன் பிடிக்கும் தினங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலமும் பாரம்பரியமாக மீன் பிடிக்கும் கடல் பகுதிகளில் இருதரப்புமே மீன்பிடிக்க முடியும் என்பது உணரப்பட்டிருப்பதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உணர்ச்சிகரமான பிரச்சனையில் பொருத்தமான நீண்ட காலத் தீர்வை எற்படுத்தும் முயற்சியில் பல்துறை அமைச்சர் குழு, தமிழக அரசின் கவலையையும் கவனத்தில்கொள்ளும் என தான் நம்புவதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார். -BBC

TAGS: