ஐயோ! டிஎபி ஆளும் பினாங்கில் இஸ்லாத்திற்கு ஆபத்து, அலறுகிறார் முன்னாள் தலைமை நீதிபதி

 

Ex-CJ-Dapபினாங்கு தீவில் முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளை வெளிப்படுத்தி பேசிய முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகமட்,  தடுத்து நிறுத்தப்படாவிட்டால் அது பரவக்கூடும் என்று கூறுகிறார்.

அவர் குறிப்பிட்டவற்றில் ஒன்று, அம்மாநிலத்தில் இஸ்லாமிய நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பு பெறுவதில் சிரமம் இருக்கிறது ஏனென்றால் இதர சமய அமைப்புகளும் அவர்களுக்குரிய நியாயமான பங்கைக் கேட்கின்றனர் என்று பினாங்கு முன்னாள் முப்தி அவரிடம் கூறியுள்ளாராம்.

“இது நிறுத்தப்படாவிட்டால், அது மலேசியா முழுமைக்கும் பரவும். ஒருவேளை, இஸ்லாமிய செயல்திட்டங்களை இதர சமயங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும்.

“அரசாங்கத் துறைகளும் வளாகங்களும் தொழுகை இடங்களை மட்டுமல்லாமல் தேவாலயங்கள், குருத்துவாராக்கள், கோயில்கள் ஆகியவற்றையும் கட்டித்தர வேண்டியிருக்கும்” என்றாரவர்.

அவ்வாறான காட்சிகள் இஸ்லாம் பெடரேசனின் சமயம் என்ற சிறப்பு நிலையை அர்த்தமற்றதாக்கிவிடும் என்று ஹமிட் கோலாலம்பூரில் நேற்று பல அரசு சார்பற்ற அமைப்புகளின் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் கூறினார்.

“அரசமைப்புச் சட்டத்தை நாட்டின் அடித்தளமாக பாதுகாத்தல்” என்ற தலைப்பிலான அவரது உரை அவருடைய இணையதளத்தில்கூட பதிவு செய்யப்பட்டுள்ளது.

பினாங்கிலிருந்து வந்தவரான அந்த முன்னாள் தலைமை நீதிபதி இன்னொரு சம்பவத்தை வெளிப்படுத்தினார். மாநில துணை முதலமைச்சர் பங்கேற்ற ஓர் அரசு கட்டட திறப்பு விழாவில் நடந்த ஒரு சம்பவத்தையும் முப்தி அவரிடம் கூறியிருந்தாராம்.

அந்நிகழ்ச்சியில் பிரார்த்தனைகளை கிறிஸ்த்துவ மத குருவும், இந்து அர்ச்சகரும், மாநில மசூதியின் இமாமும் நடத்தினராம்.

“அவ்வாறான ஒரு சடங்கில் ஏன் இமாம் பங்கேற்றார் என்பது எனக்கு புதிராக இருக்கிறது. அவருக்கு சிந்திக்கத் தெரியாதா?”, என்று அவர் கேட்டார்.

“மலாய்க்காரர்களும் முஸ்லிம்களும் விசயம் தெரியாதவர்களாக நடந்துகொள்வதைக் கண்டு நான் வருத்தமடைகிறேன். அவர்களை சாலையில் படுக்க வைத்து  ‘அல்லாஹூ அக்பர்” என்று கோசமிடும் கைப்பாவைகளாக்கியுள்ளனர். அதனால் பயனடைபவர்கள் முஸ்லிம்-அல்லாதவர்கள்”, என்று அவர் மேலும் கூறினார்.

2008 ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பேராக் மாநில அரசை பாரிசான் கைப்பற்றியதைத் தொடர்ந்து நடந்த எதிர்ப்பு போராட்டங்களை குறித்து ஹமிட் மேற்கண்டவாறு கூறினார்

Ex-CJ-Dap2“மறைத்து வைக்கப்பட்டுள்ள திட்டங்கள்”

“அல்லா” விவகாரத்தைப் பற்றி பேசிய ஹமிட், சில இஸ்லாமிய அறிஞர்கள் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் “மறைத்து வைக்கப்பட்டுள்ள திட்டங்கள்” குறித்து அறியாதிருப்பது தமக்கு புதிராக இருக்கிறது என்றாரவர்.

மலாய்க்காரர்களை கிறிஸ்துவர்களாக ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் மாற்ற இயலாமல் போனது குறித்து தேவாலயம் ஏமாற்றம் அடைந்துள்ளது என்று ஹமிட் கூறிக்கொண்டார்.

மக்கள் செழிப்பான நிலையை எட்டியதைத் தொடர்ந்து மலாய்க்காரர்கள் வெகுவாக மாறியுள்ளனர், இப்போது கடுமையாகப் பிளவுப்பட்டுள்ளனர் என்றாரவர்.

இதனால் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராகியுள்ளனர். அது மலாய்க்காரர் வாக்குகளை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது.

மலாய்க்காரர்களுக்கிடையிலான பிளவின் விளைவாக தீவிரவாத தரப்பினர் மலாய்க்காரர்களைத் தாக்குகின்றனர், அரச குடும்ப அமைப்பு முறைகள் குறைகூறப்படுகின்றன, மலாய் தலைவர்கள் அவமானப்படுத்தப்படுகின்றனர் மற்றும் இஸ்லாம் நயமாகக் கண்டிக்கப்படுகிறது.

சமுதாய ஒப்பந்தம்

பேராசிரியர் ஷாட் சலீம் ஃபருக்ஹி எழுதியுள்ள ஒரு நூலில் (“Document of Destiny”) மலாய்க்காரர்கள் மலாய்க்காரர்-அல்லாதவர்களுடன்Ex-CJ-Dap1 செய்து கொண்ட சமுதாய ஒப்பந்தத்தின் அடிப்படையில் பிரிட்டீஷ் மலாயாவில் பல மில்லியன் குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது என்று கூறப்பட்டிருக்கிறது என்று ஹமிட் தெரிவித்தார்.

சிறுபான்மை சமூகத்தினர் அவர்களுடைய சுதந்திரம் பற்றி அதிருப்தி காட்டக் கூடாது என்று ஹமிட் மேலும் கூறினார்.

“சிறுபான்மையினருக்கு உரிமைகள் அளிக்கும் ஒரு நாட்டை எனக்கு காட்டுங்கள்? ரோஹிங்யாவின் முஸ்லிம்களுக்கு என்ன நடந்தது? ஓர் அண்டை நாட்டில் சிறுபான்மையினர் அவர்களுடைய பெயரை மாற்றிக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர்.

“தாய்மொழிப்பள்ளிகள் அமைக்க அனுமதித்து அவற்றுக்கு நிதியும் அளிக்கும் ஒரு நாட்டை எனக்கு காட்டுங்கள். மலேசியாவில் அவர்கள் தங்களுடைய சமயத்தைப் பின்பற்ற அரசாங்கம் தடைவிதிக்கவில்லை.

மலேசியாவில் தங்களுடைய வழிபாட்டுத்தலங்களை அமைப்பது எவ்வளவு சுலபமானது என்பதை அவர் சிந்தித்தது உண்டா?, அரசாங்க நிலம் உட்பட, மேலும் நிதியும் கூட கொடுக்கப்படுகிறது”, என்று அவர் விவரித்தார்.

சிறுபான்மையினர் மலாய்க்காரர்களிடம் உள்ளதை விட்டொழிக்க விரும்புகின்றனர் என்று எச்சரிக்கை விடுத்த ஹமிட், மலாய்க்காரர்களிடையே ஏற்பட்டுள்ள பிளவு அவர்களுக்கு தைரியத்தை கொடுத்துள்ளது. தங்களுடன் இணைந்து செயல்படுவதற்கு சில மலாய் கட்சி தலைவர்களை அவர்கள் வசப்படுத்தியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

தேசநிந்தனைச் சட்டம் நிலைநிறுத்தப்பட வேண்டும்

தேசநிந்தனைச் சட்டம் 1948 சில திருத்தங்களுடன் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதற்கு ஹமிட் ஆதரவு தெரிவித்தார்.Ex-CJ-Dap3

தேசிய ஒற்றுமையை அடைவதற்கு தேசநிந்தனைச் சட்டத்தை அகற்றி அதன் இடத்தில் வேறொன்றை கொண்டு வர வேண்டும் என்பது அடிப்படையற்றது. அது கொடுக்கப்பட்டுள்ள ஒரு காரணம்தான். வழக்குரைஞர் மன்றம்தான் அந்த புதிய மசோதாவை தயாரிக்கிறது. இதனால் நாம் ஏமாற்றப்படக்கூடாது, ஏனென்றால் அதுதான் அவர்களுக்கு வேண்டும்”, என்றார் ஹமிட்.

“பெடரல் அரசமைப்புச் சட்டப் பிரிவு 153 இல் மலாய்க்காரர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் சிறப்புரிமைகள் பற்றி கேள்விகள் எழுப்ப மக்கள் அனுமதிக்கப்பட்டால், அதனால் மலாய்க்காரர்கள் அல்லது சாபா மற்றும் சரவாக்கில் உள்ளவர்களுக்கு என்ன நன்மை ஏற்படப்போகிறது. அவர்களுக்கு அம்மாதிரியான ஒரு சட்டப்பிரிவு வேண்டியதில்லை, ஏனென்றால் அதை அவர்கள் விரும்பவில்லை”, என்றாரவர்.

தேசியநிந்தனைச் சட்டம் இல்லை என்றால், அரசமைப்புக்குட்பட்ட முடியாட்சி, தேசியமொழி என்ற பகசா மிலாயுவின் தகுதி மற்றும் மலாய்க்காரர்களுக்கும் சாபா மற்றும் சரவாக்கின் பூமிபுத்ராக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு தகுதி ஆகியவற்றுக்கு சவால் விடப்படும் என்று ஹமிட் மேலும் கூறினார்.

“அதைத்தான் நாம் புரிந்துகொண்டாக வேண்டும்”, என்றாரவர்.