மீனவர் பிரச்சனை: பிரதமருக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம்

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மோதியிடம் ஜெயலலிதா கோரிக்கை

இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவும் இலங்கை வசம் இருக்கும் மீன் பிடிப் படகுகளை விடுவிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் ஜூலை மாதம் 16, 20 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 43 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருப்பதையும் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக மீன்பிடி மக்கள் மத்தியில் இந்த நடவடிக்கைகள் அச்ச உணர்வையும் பதற்றத்தையும் ஏற்படுத்துகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்பு கைதுசெய்யப்பட்ட 225 மீனவர்களை விடுவிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை சுட்டிகாட்டியிருக்கும் ஜெயலலிதா, பிடிக்கப்பட்ட 46 படகுகளும் அங்கேயே இருப்பதையும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படகுகள் பயனற்றுப் போவதற்கு முன்பாக, அவற்றை விடுவிக்க உதவ வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

“கடல் எல்லை விவகாரம் இன்னும் தீரவில்லை”

பாக் நீரிணைப் பகுதியில் தமிழக மீனவர்களுக்கு உள்ள பாரம்பரிய மீன்பிடி உரிமையையும் கச்சத்தீவையும் மீட்பதற்கு தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது என்றும் 1974, 76 வருடங்களில் இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் அரசியல்சாஸன ரீதியாக செல்லுபடியாகத் தக்கவையா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பதால், இலங்கையுடனான சர்வதேச கடல் எல்லை விவகாரத்தை முடிந்துபோன ஒன்றாக இந்திய அரசு கருதக்கூடாது என்றும் தனது கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதற்கிடையில், இலங்கை வசம் இருக்கும் 43 மீனவர்களையும் 56 படகுகளையும் 46 மோட்டர் பொருத்தப்பட்ட படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கைவிடுத்துள்ளார். -BBC

TAGS: