பிரிவினையினை தூண்டாத வகையில் கூட்டமைப்பு செயற்படுமாயின் அதற்கு அரசாங்கம் தடையாக நிற்காது

keheliyaநாட்டில் பிரிவினைவாதத்திற்கு துணை போகவில்லை என கூட்டமைப்பு கூறுவது முற்றிலும் பொய்யானதாகும் என அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒற்றுமையினை ஏற்படுத்தும் நோக்கில் இணக்கப்பாடொன்றினை நோக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பு நகர்கின்றதெனில் அது வரவேற்கத்தக்க விடயமே. பிரிவினையினை தூண்டாத வகையில் தொடர்ந்தும் கூட்டமைப்பு செயற்படுமாயின் அதற்கு அரசாங்கம் ஒரு போதும் தடையாக நிற்காது.

புலிகளுடன் இணைந்து தனி நாட்டுக் கோரிக்கைக்காக போராடிய தமிழ் தேசிய கூட்டமைப்பே இன்பரு நாட்டை பிரித்துத் தருமாறு கேட்கவில்லை என கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டில் ஒற்றுமையினை ஏற்படுத்தும் நோக்கில் அமைதியை நோக்கி கூட்டமைப்பு நகர்கின்றதெனில் சம்பந்தனின் கருத்தில் உண்மை இருப்பின் அரசாங்கம் அதை ஏற்றுக்கொள்ளும் ஆனால் நாட்டில் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் கூட்டமைப்பினர் செயற்பட முனைகின்றனர்.

இந்த நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். வடக்கில் பிரச்சினைகள் இல்லை என நாம் கருதவில்லை. வடக்கில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன அவை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

இதேபோல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருசில கோரிக்கைகளில் நியாயம் உள்ளது. அவற்றினை ஏற்றுக்கொள்கின்றோம். அதுபோல் பல விடயங்களில் நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் முரணான வகையிலேயே கூட்டமைப்பு செயற்படுகின்றது.

நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் அரசாங்கம் மிகக் கவனமாகச்  செயற்பட்டு வருகின்றது. தேசிய பாதுகாப்பினை சீரழிக்கும் வகையில் கூட்டமைப்பு செயற்படுமாயின் அதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.

எனினும் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு அதையே செய்கின்றது. சர்வதேச அமைப்புக்களுடனும் புலம்பெயர் இயக்கங்களுடனும் இணைந்து தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான பல விடயங்களை இவர்கள் செய்து வருகின்றனர் என்றார்.

TAGS: