மெக்சிகோ எல்லையில் 1,000 ரோந்து வீரர்களைக் குவிக்க அமெரிக்கா திட்டம்

americaமத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் ஆயிரக்கணக்கில் சிறார்கள் சட்டவிரோதமாக ஊடுருவுவதைத் தடுப்பதற்காக மெக்ஸிகோ எல்லைப் பகுதியில் 1,000 ரோந்து வீரர்களை நிறுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாண ஆளுநர் ரிக் பெர்ரி கூறினார்.

இதுகுறித்து, டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து இதுவரை மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த சுமார் 57,000 சிறார்கள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் டெக்ஸாஸ் மாகாணத்தில் தங்கியுள்ளதாகத் தெரிகிறது.

அவர்களை தாயகம் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது, எல்லைப்பகுதியில் உள்ள பாதுகாப்புப் படையினரை அவர்களது வழக்கமான பணிகளில் ஈடுபடுத்தாமல், அகதிகளாக வருபவர்களுக்குத் தேவையான மருத்துவம் மற்றும் அடிப்படை வசதிகளை அளிக்கும் பொறுப்புகளை மத்திய அரசு (ஃபெடரல் நிர்வாகம்) வழங்கியுள்ளது. இதனால் பெற்றோர் துணையின்றி எல்லையைக் கடந்து வரும் சிறார்களை வசப்படுத்தி பாலியல் தொழில், போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத சம்பவங்களுக்கு மாஃபியாக் குழுவினர் பயன்படுத்துகின்றனர். இதைத் தொடர்ந்து அனுமதித்தால் “வரலாற்றில் நீங்காத துயரச் சம்பவங்கள்’ நிகழ்ந்துவிடும்.

எனவே அமெரிக்க எல்லைப் பகுதியை பாதுகாப்பதற்காக 1,000 ரோந்து வீரர்களை அனுப்பவேண்டும் என டெக்ஸாஸ் மாகாண தலைமை ராணுவ அதிகாரியைக் கேட்டுக் கொண்டுள்ளேன். எல்லையைப் பாதுகாக்கத் தவறினால் நாட்டின் பாதுகாப்புக்கே ஊறு ஏற்பட்டுவிடும் என்று ரிக் பெர்ரி கூறினார்.