மாறன் சகோதரர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம்

ஏர்செல் – மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்தில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும், சன் டிவி நிறுவனத் தலைவருமான கலாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம் என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சிபிஐ இயக்குநருக்கு அவர் அனுப்பியுள்ள குறிப்பில், “ஏர்செல் – மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்புடைய வழக்கில் தற்போது வரை விசாரிக்கப்பட்டுள்ள ஆவணங்கள், ஆதாரங்கள், சாட்சியங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பான கோப்பு முறைப்படி சிபிஐக்கு அனுப்பிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த வழக்கின் விசாரணை நிலவர அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான கொள்கையை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர்களாக இருந்தவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப தவறாகப் பயன்படுத்தியதாக சமூக ஆர்வலரும், உச்ச நீதிமன்ற வழக்குரைஞருமான பிரசாந்த் பூஷண், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். மேலும், “திமுகவைச் சேர்ந்த மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஏர்செல் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கக் காரணமாக இருந்தார்.

அதற்குப் பிரதிபலனாக சன் குழுமத்துக்குச் சொந்தமான சன் டைரக்டு நிறுவனத்தில் சுமார் ரூ.550 கோடி மதிப்பிலான பங்குகளை மேக்சிஸ் நிறுவனம் வாங்கியது’ என்று சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.

இதையடுத்து, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கை தனியாக விசாரிக்கும்படி சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆ. ராசாவுக்கு முன்பாக 2001 முதல் 2008-ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர்களாக இருந்தவர்களின் பதவிக் காலத்தில் நடைபெற்ற அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதா என்பதை தனியாக விசாரிக்கவும் சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2011-ஆம் ஆண்டில் உத்தரவிட்டது.

இதற்கிடையே, ஏர்செல் நிறுவன முன்னாள் நிறுவனர் சிவசங்கரன், சிபிஐக்கு அளித்த புகாரில் “தயாநிதி மாறன் நெருக்கடியால்தான் ஏர்செல் நிறுவனப் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ ஆரம்பநிலை விசாரணையை தொடங்கி முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது. பின்னர் மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், “மேக்சிஸ் நிறுவன அதிபர் டி.எஸ். அனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தவும், அந்நிறுவனத்தின் பங்குகள் தொடர்பான விவரங்களை பெறும் நடவடிக்கைக்கும் மலேசிய அரசு ஒத்துழைக்கவில்லை’ என்று சிபிஐ முறையிட்டது.

இதையடுத்து, இந்தியாவில் நடத்திய விசாரணை அடிப்படையில் ஏர்செல் – மேக்சிஸ் பங்குகள் விற்பனை விவகாரம் தொடர்புடைய வழக்கை நடத்த முடியுமா என்பதை ஆராயும்படி சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, கடந்த மே 9-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, “மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது குறித்து சிபிஐ இயக்குநர், சிபிஐ சட்டப் பிரிவு இயக்குநர் ஆகியோருக்கு இடையே மாறுபட்ட நிலைப்பாடு உள்ளதால் அது பற்றிக் கருத்து தெரிவிக்கும்படி அட்டர்னி ஜெனரலை கேட்டுள்ளோம்’ என சிபிஐ கூறியிருந்தது.

TAGS: