20 ஆயிரம் ஏழைக் குழந்தைகளின் பாலர் கல்வி மறுக்கப்படுகிறது! தம்பிராஜா பதில் சொல்வாரா?

G.Sekaran-Ipoh-சேகரன் கோவிந்தன், தலைவர், டிஎபி ஈப்போ பாரட் கிளை, ஜூலை 24, 2014.

ஸ்ரீ முருகன் நிலைய முன்னாள் மாணவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்  மு. குலசேகரன் தெரிவித்திருந்த கருத்துக்கு  எதிர்ப்பும் வருத்தமும் தெரிவித்திருப்பது  சமூகத்தைப் பாதிக்கும் செய்திகள்  மக்களால் வரவேற்கப்படுகின்றன என்பதற்கு நல்ல உதாரணம்.

 

 

“சேவை” என்றால் என்ன?

 

ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் வியாபர நோக்கில் மாணவர்களுக்காக  பிரத்தியோக வகுப்பு  நடத்தி அதன் மூலம் பணம் பெருக்கிக் கொள்வது பற்றி குலா கேள்வி எழுப்பவில்லை. ஸ்ரீ முருகன் செய்யும் தொழிலை  “சேவை” என்று கூறுவது  தவறு. சேவை என்பது பணம் வசூலித்து பாடம் சொல்லிக் கொடுப்பதன்று. இதை எல்லா டியூசன் மையங்களும்தான் செய்கின்றன!  பிரதிபலன் எதிர்பார்க்காமல், தன்னலம் இன்றி பிறர் நன்மை அடைதலே பிரதானம் என்ற நோக்கில் செய்வதுதான் சேவை!

50  ஆயிரம் இந்திய குழந்தைகளில் 20,000 ஏழை மாணவர்கள் பாலர் கல்விக்கான  வாய்ப்பை இழந்துள்ளனர். அரசாங்கத்தால், மக்கள் வரிப் பணத்திலிருந்து ஒதுக்கப்பட்ட ரிம270 இலட்சத்தில் ரிம 190 இலட்சத்தை ஐ-சினார் திட்டத்தின் வழியாகவும், ரிம 80 இலட்சத்தை  ஐ-செமர்லாங் திட்டத்தின் வழியாகவும் தம்பிராஜா பெற்றுள்ளார் என்பது உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும்?

 

“நெற்றிக்கண் திறந்தாலும்…”

 

சமுதாயத்தில் நடக்கும் இது போன்ற பகல்கொள்ளைகளைத் தட்டிக் கேட்க ஆள் வேண்டாமா? அதை குலா செய்தால் ஸ்ரீ முருகன்  மீது பழி சுமத்துக்கூடாது என்று கூறும் பட்டதாரி மாணவர்களான நீங்கள் தம்பிராஜாவின் குழுமத்தால் கடத்தப்பட்டிருக்கும் இந்த ரிம270 இலட்சம் எங்கு  சென்றது? எதற்காக சென்றது? இது குறித்து வெளிப்படையான செய்திகள் ஏன் வரவில்லை என்பது போன்ற    கேள்விகளை ஏன் தம்பிராஜாவை கேட்கக் கூடாது? அது இளைஞர்களாகிய உங்களின் சமுதாயக் கடன் அல்லவா?

“நெற்றிக் கண் திறந்தாலும் குற்றம் குற்றமே” என்று சொன்ன நக்கீரன் பரம்பரையச் சேர்ந்த நீங்கள் தம்பிராஜாவை அவர் கொண்டு சென்ற சமுதாயப் பணம் குறித்து கேள்வி கேட்காமல் இருப்பதுதான் சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் இழுக்கு என்பதை நீங்கள் உணர வேண்டும்.

 

குலா ஏன் கேட்டார்?

 

குலா ஏன் இந்தக் கேள்வியை எழுப்பினார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம். சமீபத்தில் தமிழ்  பத்திரிகைகளில்kula
பாலர் பள்ளிகள் நிர்மாணிக்க போதிய நிதி இல்லை என்று இரண்டாவது கல்வி அமைச்சர் பி.கமலநாதன் கூறியிருந்தார். அதற்குத்தான்   குலசேகரன்  தக்க ஆதரத்துடன் ரிம 53 கோடி தமிழ் மற்றும் சீன பாலர் கல்வி  வளர்ச்சிக்கும் பாலர்பள்ளிகள் அமைப்பதற்கும் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதனை நினைவுறுத்தினார். இந்த மொத்த தொகையில் ரிம270 இலட்சம் தம்பிராஜாவால் எடுக்கப்பட்டுள்ளது என்பதைதான் குலா வெளிக்கொணர்ந்தார். இது எவ்வகையில் தவறாகும்?

மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட பிரதிநிதி என்ற வகையில் குலா சமுதாயத்தில் நடக்கும் குறைபாடுகளை, அநியாங்களை தில்லுமுல்லுகளை பற்றி கேள்வி எழுப்புவது தப்பா? அது அவரின் கடமை இல்லையா?

20,000 ஏழை இந்திய குழந்தைகள் பாலர்  கல்வி கற்கும் வாய்பை பெற முடியாமல் போய்விட்டது  பற்றிய கேள்வி ஏன் உங்கள் சிந்தனையில் உதிக்கவில்லை? அம்மாணவர்களுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்படுமேயானால் நாளை அவர்களுக்கும் உங்களைப் போல்  பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு ஏற்படும் அல்லவா? அதற்காக குலசேகரன் என்ற மக்கள் பிரதிநிதி குரல் கொடுப்பது தப்பாகுமா?

 

இது உங்கள் கடமை இல்லையா?

 

நாளைய  தலைவர்களாகப் போகும் நீங்கள் இது போன்ற சமுதாய துரோகங்களை தட்டிக் கேட்க முன்வர வேண்டாமா?
குலா,  தனது நேரத்தையும் பணத்தையும் செலவழித்து  இந்திரா காந்தி போன்ற கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு  நீதி பெற்றுக் கொடுக்காமலும், மதமாற்றுப் பிரச்சனை, இனத் துவேஷம், மத நிந்தனை போன்றவற்றுக்கு குரல் கொடுக்க இந்த குலசேகரன் மட்டும்தான் இருக்கின்றார் என்பது உங்களுக்குத்  தெரிந்ததுதானே.

கடவுளின் பெயரால் நடத்தப்படும் இயக்கங்கள் அனைத்தும் பெயரை மாற்ற வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர இந்த அரசாங்கம் முயற்சித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்பொழுதும் இந்த குலசேகரன்தான் குரல் கொடுக்க வருவார் என்பதும் திண்ணம்.

அரசாங்க நிதி ஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்புவது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் தலையாய கடமைகளில் ஒன்று. அதற்கு நேரடியாக பதில் கூற வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு உண்டு.