உ.பி. கலவரம்: பிரதமர் அவசர ஆலோசனை

upஉத்தர பிரதேச மாநிலம், சஹாரன்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஞாயிற்றுக்கிழமை அவசர ஆலோசனை நடத்தினார்.

உத்தரபிரதேச மாநிலம், சஹாரன்பூர் மாவட்டத்தில் நிலத்தகராறைத் தொடர்ந்து, இரு பிரிவினரிடையே சனிக்கிழமை கலவரம் மூண்டது. இரு பிரிவினரும் கல்வீச்சு, துப்பாக்கிச்சூடு, தீவைப்பில் ஈடுபட்டனர். இதில் மூவர் உயிரிழந்தனர்.

காவல் துறையினர் உள்பட 20 பேர் காயமடைந்தனர். குண்டுக் காயமடைந்த ஒரு காவலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடியை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது, சஹாரன்பூர் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினர்.

அப்பகுதியில் அமைதி திரும்புவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் ராஜ்நாத் சிங் விளக்கினார். மத்திய துணை ராணுவப் படையைச் சேர்ந்த 600 வீரர்கள் உத்தரபிரதேசத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என ராஜ்நாத் கூறினார்.

அங்குள்ள நிலவரத்தை தானே நேரடியாகக் கண்காணித்துவருவதாக குறிப்பிட்ட அவர், வன்முறையைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அந்த மாநில முதல்வர் அகிலேஷ் யாதவை அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை

உத்தரபிரதேச மாநிலம், சஹாரன்பூர் மாவட்டத்தில், நிலத் தகராறு காரணமாக இரு சமூகத்தினரிடையே சனிக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் 3 பேர் உயிரிழந்தனர். குதுப்ஷேர் பகுதியில், ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டபோது, மற்றொரு பிரிவினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து மோதல் ஏற்பட்டது.

மாவட்டத்தில் 6 இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கலவரக்காரர்களை கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவப் பகுதியில் மூத்த காவல் துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவைக் கடுமையாக செயல்படுத்திவருவதாக மாநிலத்தின் காவல் துறை கூடுதல் தலைமை இயக்குநர் முகுல் கோயல், லக்னௌவில் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

இயல்பு நிலை திரும்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

மாவட்ட ஆட்சியர் சந்தியா திவாரி கலவரம் நிகழ்ந்த இடத்தை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: நிலைமை இப்போது சீரடைந்துள்ளது. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுத்து வருகிறேன். இப்போது நிலைமை இயல்பாக உள்ளது.

கலவரத்துக்கு காரணமான நிலத் தகராறு குறித்து தான் எதுவும் கூற விரும்பவில்லை என்று தெரிவித்த அவர், இப்போதைக்கு அப்பகுதியில் கட்டுமானம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

இதனிடையே, மாநிலத்தில் அமைதியைக் குலைக்க முயற்சி நடக்கிறது என்றும், கலவர சம்பவத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினர் அரசியல் ஆதாயம் தேட விரும்பினால், சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும் சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் ராஜேந்திர செüத்ரி கூறினார்.

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநில முதல்வர் அகிலேஷ் யாதவை சனிக்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கூறிய ராஜ்நாத் சிங், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு, துணை ராணுவப் படையினர் உள்பட தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

 

ஊரடங்கு நீட்டிப்பு

சஹாரன்பூரில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு அமலில் இருந்தது.

வன்முறையில் ஈடுபடுபவர்களைக் கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கலவரம் தொடர்பாக இதுவரை 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

TAGS: