வரதட்சிணை தடைச் சட்டத்தில் மாற்றம்: அரசு பரிசீலனை

வரதட்சிணை கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக, புகார்கள் எழுவதையடுத்து, அச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும், அந்தச் சட்டத்தை மேலும் வலுவானதாக்கவும், அதில் கூறப்படும் “வரதட்சிணை’ என்ற பதத்துக்கான வரையறையை விரிவுபடுத்துவது குறித்தும் பரிசீலனை செய்து வருகிறது.

இதுகுறித்து அமைச்சரக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சமீபகாலமாக, வரதட்சிணை கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படும் சம்பவங்கள் குறித்து அமைச்சரகத்தின் கவனத்துக்கு வந்துள்ளது.

பல நேரங்களில், பெண்கள் தங்கள் கணவர் மற்றும் புகுந்த வீட்டிலுள்ளவர்கள் மீது புகார் அளிப்பதும், பின்னர் அது பொய்ப் புகார் என்பது தெரிய வருவதும் அதிகரித்து வருகிறது.

எனவே இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, சட்டத்தை தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கும் தண்டனை அளிக்க இச்சட்டத்தில் வழி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இச்சட்டத்தில் “வரதட்சிணை’ என்ற வார்த்தைக்கான வரையறையில், “திருமணம் தொடர்பாக வழங்கப்படுவன’ என்பதற்கு பதிலாக “திருமணத்துக்கு முன்னர், திருமணத்தின்போது மற்றும் திருமணத்துக்குப் பின்னர் வழங்கப்படுவன’ என மாற்றம் செய்யவும், குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் சில அம்சங்களை வரதட்சிணைக் கொடுமைத் தடுப்புச் சட்டத்துடன் இணைப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

திருமணத்தின்போது வழங்கப்படும் பரிசுகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் எனவும், அவ்வாறு செய்யத்தவறினால் மணமகன், மணமகள் மட்டுமன்றி பெற்றோர்களுக்கும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அளிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம், திருமணத்தின்போது அளிக்கப்பட்ட பரிசுப் பொருள்களை, வரதட்சணை என்று பின்னர் தவறாக குற்றம் சாட்ட முடியாது என்று தெரிவித்தார்.

ஏற்கெனவே, இச்சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டவுடனேயே, புகார் தெரிவிக்கப்பட்டவர்களை கைது செய்யக்கூடாது எனவும், கைது

செய்ய வேண்டியதன் அவசியத்தை உறுதி செய்துகொண்ட பிறகே கைது நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளுக்கும், காவல்துறைக்கும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

மணவாழ்வில் அதிருப்தியுற்ற பெண்கள், தங்கள் புகுந்த வீட்டிலுள்ளவர்களைப் பழிவாங்குவதற்காக வரதட்சிணை கொடுமை தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவது அதிகரித்து வருவதாக அப்போது நீதிமன்றம் கவலை தெரிவித்திருந்தது.

TAGS: