இருப்பவர்கள் விட்டுக் கொடுத்தால் இல்லாதவர்கள் பயன்பெறலாம்

gasபுதுடில்லி : நாட்டின் மூலைமுடுக்குகளில் உள்ள ஏழை எளிய மக்களும் அனைத்து வசதிகளையும் பெறுவதற்கு, வசதி படைத்தவர்கள் தானே முன்வந்து அரசு அளிக்கும் மானியங்களை ஒதுக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

வசதி படைத்தவர்கள் அரசு மானியங்களை வேண்டாம் என்று கூறினால், அந்த மானிய தொகையை வசதி இல்லாதவர்களுக்கு அளிக்க முடியும் என அரசு முடிவு செய்துள்ளது.
நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கு அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள மத்திய அரசு, அதன் முதல்படியாக வசதி படைத்தவர்கள் தாமாக முன்வந்து தாங்கள் பெறும் அரசு மானியங்களை வேண்டாம் என கூற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக சமையல் சிலிண்டர்களுக்கு அளிக்கப்படும் அரசு மானியங்களை பெறாமல் வசதி படைத்த வாடிக்கையாளர்கள்,சந்தை விலையை செலுத்தியே சிலிண்டரை பெற்றுக் கொள்ளலாம் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

2013-14ம் நிதியாண்டில் சிலிண்டருக்கு மட்டும் ரூ.40,000 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த மானியத் தொகையை வசதி படைத்தவர்கள் மறுக்கும் பட்சத்தில், அந்த தொகையைக் கொண்டு வசதி இல்லாதவர்களுக்கு மானிய விலையில் பொருட்களை வழங்கவும், வளர்ச்சித் திட்டங்களையும் ஏற்படுத்த முடியும் என அரசு முடிவு செய்துள்ளது.

வாடிக்கையாளர்கள் அனைவரும் தாங்களே முன்வந்து சிலிண்டருக்கான மானியம் தங்களுக்கு வேண்டாம் என மறுக்குமாறு பெட்ரோலிய துறை சார்பில் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டு வருகிறது. பெட்ரோலியத்துறை மற்றும் எரிபொருள் நிறுவனங்களின் இணையதளத்திலும் இது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசின் செலவை கட்டுப்படுத்தவும், மானியங்களுக்கான தொகையை குறைக்கவும், இந்த புதிய யுக்தியின் மூலம் சேமிக்கப்படும் மானிய தொகையைக் கொண்டு ஏழைகளுக்கான நலத் திட்டங்கள் பலவற்றை ஏற்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.

பெட்ரோலியத் துறையைத் தொடர்ந்து மற்ற துறை அமைச்சகங்களும் வாடிக்கையாளர்களின் உதவி்யையும், பொது மக்களின் ஒத்துழைப்பையும் கேட்க முடிவு செய்துள்ளன.

விரைவில் மற்ற அமைச்சகங்களும் மானிய தொகையை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கும் என எதிர்பார்க்கலாம்.

மானியங்களை திரும்ப ஒப்படைத்து, நாட்டை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்லும் அரசின் முயற்சிக்கு அனைவரும் கைகொடுப்போம்.

TAGS: