உளவு பார்ப்பதை ஏற்க முடியாது: அமெரிக்காவிடம் இந்தியா கண்டிப்பு

  • தில்லியில் வியாழக்கிழமை கூட்டாக பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.
    தில்லியில் வியாழக்கிழமை கூட்டாக பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.

இந்தியாவைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்களை அமெரிக்கப் புலனாய்வு அமைப்பினர் ரகசியமாக உளவு பார்ப்பதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது என்று இந்தியா உறுதிபடத் தெரிவித்தது.

அரசு முறைப் பயணமாக தில்லி வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரியிடம் இந்தியா இதைக் கண்டிப்புடன் தெரிவித்தது.

ஐந்தாவது இந்திய-அமெரிக்க நல்லுறவுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியா வந்துள்ளார். அவருடன் அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் பென்னி பிரிட்ஸ்கர், அதிகாரிகள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவும் தில்லி வந்துள்ளது.

சுஷ்மாவுடன் கெர்ரி சந்திப்பு:இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை ஜான் கெர்ரி வியாழக்கிழமை சந்தித்தார். அவர்கள் தலைமையில் ஐந்தாவது இந்திய-அமெரிக்க நல்லுறவுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரு தரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். அப்போது ஜான் கெர்ரி கூறியது:

21ஆம் நூற்றாண்டில் இந்தியாவும், அமெரிக்காவும் முக்கியமான கூட்டாளிகள். இரு நாடுகளுடனான உறவுகளில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அடுத்து வரும் வாரங்களில், பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்துக்காக நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுப்போம் என்றார் அவர்.

சுஷ்மா ஸ்வராஜ் கூறியது:

அமெரிக்காவைத் தனது உலகளாவிய கூட்டாளியாக இந்தியா பார்க்கிறது. இந்தியாவின் புதிய அரசு தனது மக்களுக்கு என்னென்ன நன்மைகளைச் செய்யும் என்று மதிப்பிடுவதில் தாங்கள் (கெர்ரி) தாராளம் காட்டியுள்ளீர்கள் என்றார் சுஷ்மா.

உளவு நடவடிக்கைக்கு எதிர்ப்பு} சுஷ்மா: சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, சுஷ்மாவும், ஜான் கெர்ரியும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தினர். அப்போது பாஜக தலைவர்களை அமெரிக்க புலனாய்வு அமைப்பு உளவு பார்த்த விஷயத்தை கெர்ரியிடம் எழுப்பினீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த சுஷ்மா, “”அமெரிக்காவின் உளவு பார்க்கும் நடவடிக்கையை நான் கெர்ரியிடம் எழுப்பினேன். இது குறித்த செய்தி நாளிதழ்களில் வெளியானதும் இந்திய மக்கள் மிகவும் கோபப்பட்டனர் என்று அவரிடம் நான் கூறினேன். இரு நாடுகளும் ஒன்றை ஒன்று நட்பு நாடுகள் என்று கருதுகின்றன. இரண்டு நட்பு நாடுகள் ஒன்றை ஒன்று உளவு பார்க்க முடியாது என்றும், இந்த நடவடிக்கையை எங்களால் ஏற்றுக் கொள்ள இயலாது என்பதையும் அவரிடம் தெரிவித்தேன்” என்றார்.

அதே கேள்விக்கு ஜான் கெர்ரி பதிலளித்தது: நாங்கள் பொது இடத்தில், உளவு சார்ந்த விஷயங்கள் குறித்துப் பேசுவதில்லை. ஆனால், இந்தியாவுடனான எங்கள் உறவை மதிக்கிறோம். அமைச்சர் சுஷ்மா தெரிவித்த கருத்துகளை நாங்கள் முழுமையாக மதிப்பதோடு, புரிந்து கொள்ளவும் செய்கிறோம் என்றார்.

மோடி அமெரிக்கா வருவதை வரவேற்கிறோம்}கெர்ரி: முன்னதாக, கெர்ரி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “மோடி அமெரிக்கா வருவதை வரவேற்கிறோம்’ என்றார். அந்தப் பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:

மோடி அமெரிக்கா வருவதற்கு விசா வழங்க நாங்கள் (ஒபாமா அரசு) மறுக்கவில்லை. விசா மறுத்தது முந்தைய (புஷ் தலைமையிலான) அமெரிக்க அரசுதான். இப்போது அமெரிக்காவில் வேறு அரசு உள்ளது. அதேபோல், இங்கும் (இந்தியாவில்) ஆட்சி மாறியுள்ளது. நாங்கள் பிரதமர் மோடியை வரவேற்போம்.

அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். செப்டம்பரில் ஒபாமாவுடனான அவரது சந்திப்பை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என்றார் கெர்ரி.

பிரதமர் மோடியை வெள்ளிக்கிழமை ஜான் கெர்ரி சந்தித்துப் பேச உள்ளார்.

உலக வர்த்தக ஒப்பந்தம்: தனது நிலைப்பாட்டில் இந்தியா உறுதி

சுஷ்மா ஸ்வராஜை சந்திப்பதற்கு முன்பாக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை அவரது அலுவலகத்தில் ஜான் கெர்ரி சந்தித்துப் பேசினார். அப்போது உலக வர்த்தக அமைப்பில் நடைபெற்று வரும், வர்த்தக மேம்பாட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

பல்வேறு நாடுகளுக்கு இடையில் பொருள்களைக் கொண்டுசெல்வதை தாராளமயமாக்குவதற்கு சுங்க விதிமுறைகளைத் தளர்த்துவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம். இதற்காக ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்தியா பிடிவாதமான போக்கைக் கடைப்பிடிப்பதாக அமெரிக்கா கருதுகிறது.

ஆனால், இந்த ஒப்பந்தம் வளர்ந்த நாடுகளுக்கே சாதகமாக இருப்பதாக இந்தியா கருதுகிறது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமானால், தனது நாட்டில் உள்ள ஏழைகளுக்கு உதவுவதற்காக உணவு தானியங்களைக் கையிருப்பு வைத்திருக்கவும், மானியங்களை உலக வர்த்தக அமைப்பின் வரம்பையும் தாண்டி அளிக்க வழிவகுக்கவும் மற்றொரு நிரந்தர ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடாகும்.

ஜேட்லியுடனான சந்திப்பின்போது வர்த்தக மேம்பாட்டு ஒப்பந்த விவகாரம் குறித்துப் பேசிய ஜான் கெர்ரி, அந்த உடன்பாட்டில் கையெழுத்திடுமாறு இந்தியாவை வலியுறுத்தியதாகத் தெரிகிறது. எனினும், அமெரிக்க நெருக்கடிக்கு இந்தியா பணியவில்லை.

இது தொடர்பாக மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “உலக வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான இந்தியாவின் நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை’ என்றார்.

உலக வர்த்தக அமைப்பின் பிரதிநிதிகள், அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் பென்னி பிரிட்ஸ்கர் ஆகியோர் தில்லியில் தன்னைச் சந்தித்துப் பேசிய பிறகு, நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

TAGS: