சென்னையில் இலங்கை தூதரகம் அருகில் மகிந்தவின் உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம்

mahinda-00இலங்கை பாதுகாப்புத்துறை இணையத்தளத்தில் ஜெயலலிதாவை இழிவுபடுத்தி கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவினர் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ய முற்பட்டனர்.

தூதரகத்தின் அருகே செல்ல போலீசார் அனுமதி மறுத்ததால், லயோலா கல்லூரி வாசலில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இதன்போது இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் உருவப்படத்திற்கு செருப்படி வழங்கப்பட்டது

அத்துடன், மகிந்த ராஜபக்சவின் உருவப்பொம்மையை எரித்தனர்.

இரண்டு மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அவமதிப்பு கட்டுரை: இலங்கையிடம் அதிருப்தியை அழுத்தமாக பதிவுசெய்ய மோடிக்கு ஜெயலலிதா வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தாம் எழுதும் கடிதங்களை கீழ்மையாகச் சித்தரித்த இலங்கை அரசின் அதிகாரபூர்வ வலைதள விவகாரத்தில், முதல்வர் ஜெயலலிதா கடுமையாக கண்டித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில் “இந்திய வெளியுறவு அமைச்சகம், இலங்கை தூதரக அதிகாரியை நேரில் வரவழைத்து அதிருப்தியைத் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில், தமிழக மீனவர் பிரச்சினை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிவரும் கடிதங்கள் குறித்து கொச்சைப்படுத்தப்பட்டு ஒரு கட்டுரை பதிவேற்றப்பட்டிருந்தது.

 ‘நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா எழுதும் காதல் கடிதங்கள் எந்த அளவுக்கு அர்த்தமுள்ளவை?’ என மிகவும் கீழ்த்தரமாக அந்தக் கட்டுரைக்கு தலைப்பும் வைக்கப்பட்டிருந்தது. அத்துடன், ஜெயலலிதா மற்றும் மோடி ஆகியோரின் புகைப்படங்களைக் கொண்டு, சர்ச்சைக்குரிய சித்தரிப்புப் படம் ஒன்றும் வெளியாகியிருந்தது.

இந்தப் பதிவு தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் மேலும் கூறும்போது, “மீனவர்கள் படகுகளை இலங்கை திரும்பவும் ஒப்படைக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து கூறிவருவதைக் கொச்சைப் படுத்தும் விதமாக அந்த மீனவர்கள் என்னுடைய ஆதரவாளர்கள் என்று எழுதியுள்ளனர்.

மேலும், இந்திய ஜனநாயக அமைப்பிற்குள் பிளவுகளை ஏற்படுத்தும் விதமாக இந்தியப் பிரதமரின் பெயருக்கும், புகழுக்கும் நான் களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

பத்திரிகைச் சுதந்திரம் கொண்ட ஒரு வலுவான ஜனநாயக நாட்டில் பொது வாழ்க்கையில் நான் ஈடுபட்டதிலிருந்து நான் பல விமர்சனங்களையும் எதிர்கருத்துக்களையும் எதிர்கொண்டுள்ளேன். ஆனால், மீனவர்களின் வாழ்வாதாரமான ஒரு பிரச்சினையில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு செய்யும் முயற்சிகளை இப்படி நேரடியாகக் கொச்சைப் படுத்தி, சிறுமைப் படுத்தி எழுதப்பட்டிருப்பது, அதுவும் அண்டை நாடு ஒன்றின் முக்கிய அமைச்சகத்தின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் இதுபோன்று எழுதப்படுவது ஒரு போதும் ஏற்புடையதல்ல.

அதில் சேர்க்கப்பட்டுள்ள படங்கள் இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கீழ்மைப்படுத்தும் விதமாகவும் குறிப்பாக பல ஆண்டுகள் அரசியல் அனுபவம் பெற்ற 66 வயது பெண் அரசியல் தலைவரைக் கொச்சைப்படுத்தும் விதமாகவும் உள்ளது.

ஆகவே, நாட்டையும் அதன் தலைவர்களையும் இழிவுபடுத்தும் இத்தகைய முயற்சிகளை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

மேலும், முக்கியமாக அந்த வலைத்தளத்தின் உரிமைத் துறப்பு வாசகம், வலைத்தளத்தில் தனிநபர் பங்களிப்புடன் எழுதப்படும் உள்ளடக்கங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் பொறுப்பேற்காது என்று கூறியுள்ளது. ஆனால், தமிழக முதல்வர் மற்றும் பிரதமர் ஆகியோரின் படங்கள், கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் குறிப்பிட்ட அந்த பத்திரிகையாளரைச் சார்ந்தது அல்ல. மாறாக இலங்கை அரசுடையதுதான் என்பதை அறிவுறுத்துகிறது.

தமிழ்நாட்டில் இது குறித்து பலத்த கண்டனங்கள் எழுந்த பிறகு அந்தக் கட்டுரை நீக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே அது நிறைய சேதங்களை விளைவித்துவிட்டது.

எனவே, இலங்கைத் தூதரை நேரில் அழைத்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிருப்தியை வலிமையாக வெளியிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஜெயலலிதா, மோடியிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய இலங்கை

sril_apology_001சர்ச்சைக்குரிய கட்டுரையை வெளியிட்டதற்காக இலங்கை அரசாங்கம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது.இலங்கை பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில்,

“நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா எழுதும் காதல் கடிதங்கள் எந்த அளவுக்கு அர்த்தமுள்ளவை?” என மிகவும் கீழ்த்தரமாக அந்தக் கட்டுரைக்கு தலைப்பும் வைக்கப்பட்டிருந்தது. அத்துடன், ஜெயலலிதா மற்றும் மோடி ஆகியோரின் புகைப்படங்களைக் கொண்டு, சர்ச்சைக்குரிய சித்தரிப்புப் படம் ஒன்றும் வெளியாகியிருந்தது.

இந்தப் பதிவு தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக, சர்ச்சைக்குரிய அந்தக் கட்டுரையை தமது தளத்தில் இருந்து இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உடனடியாக நீக்கியது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது.

சர்ச்சைக்குரிய கட்டுரை வெளியான அதே அரசாங்க வலைதளத்தில் பகிரங்க மன்னிப்புக் கடிதமும் இடம்பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் படத்துடன் அக்கடிதம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளியிட்டுள்ள மன்னிப்புக் கடிதத்தில்,

“தகுந்த பரிசீலனைக்கு உட்படுத்தப்படாமல் பதிவேற்றப்பட்டுவிட்டது. அந்தக் கட்டுரையானது இலங்கை அரசின் நிலைப்பாட்டையோ, பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கருத்தையோ எந்தவகையிலும் பிரதிபலிக்கவில்லை. அதை நீக்கிவிட்டோம். பிரதமர் நரேந்திர மோடியிடமும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்டுக்கொள்கிறோம்”

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி-

இலங்கை பாதுகாப்புத்துறை இணையத்தளத்தில் ஜெயலலிதாவை விமர்சித்த கட்டுரை நீக்கம்! இலங்கை மன்னிப்புக் கோர வேண்டும்: ஜே

இந்தியாவின் சிங்கள இனவெறி ஆதரவுக் கொள்கையே முதலமைச்சரை கொச்சைப்படுத்தியமைக்கு காரணம்!- மணியரசன்

maniyarasan_01இலங்கை அரசு தமிழக முதலமைச்சரைக் கொச்சைப்படுத்தியதற்கான மூலகாரணம் இந்திய அரசின் சிங்கள இனவெறி ஆதரவுக் கொள்கையே. இவ்வாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்

வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு,

தமிழக மீனவர்களை அன்றாடம் தளைப்படுத்தி அவர்களின் மீன்களைக் கொள்ளை யிட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டிருக்கும் சிங்கள இனவெறி அரசின் மீது நடவடிக்கை எடுத்து இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க ஏற்பாடு செய்யுமாறு தமிழக முதலமைச்சர் செல்வி செயலலிதா அவர்கள் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு அவ்வபோது கடிதம் எழுதி வருகிறார்.

இதனை கொச்சைப்படுத்தும் வகையில், தரக் குறைவாக படங்கள் போட்டும் வசனங்கள் எழுதியும் ஒரு கட்டுரையை இலங்கை அரசின் படைத்துறை இணையதளம் வெளியிட்டுள்ளது.

சிங்கள அரசின் இந்த சின்னத்தனமான பண்பாட்டை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சிங்கள ஆளும் வர்க்கம் எந்த அளவு பண்பு கெட்ட மனநிலையில் இருக்கிறது என்பதற்கும் தமிழினத்தை இழிவுபடுத்தும் அதன் இனவெறி இன்னும் அடங்கவில்லை என்பதற்கும் மேற்படி கட்டுரை மற்றமோர் எடுத்துக்காட்டு.

கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவிப்பிள்ளை அவர்கள் இலங்கை சென்று இனஅழிப்புப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளையும் தமிழ் மக்களையும் சந்தித்த பின் இலங்கை அரசு குறித்து ஆக்கபூர்வமான சில திறனாய்வுகளைக் கூறினார்.

அதற்காக  ராஜபக்ச தலைமையில் உள்ள ஓர் அமைச்சர் நவிப்பிள்ளை இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் சம்மதித்தால் நான் அவரைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கொச்சைப்படுத்தி அறிக்கை வெளியிட்டு தனது கீழ்த்தர மனநிலையைக் காட்டிக்கொண்டார்.

சிங்கள இனவெறியர்கள் திருந்தும்படி உலக நாடுகள் உருப்படியான நடவடிக்கை எடுக்காததால் அவர்களின் அடாவடித் தனங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

இந்திய அரசு, ராஜபக்ச அரசுடன் மிகவும் நெருக்கத்தை உண்டாக்கிக் கொள்ளத் தீவிரமாக முனைந்துள்ளது.

இந்திய இலங்கை உறவுகளை வளர்க்கும் தூதுவர்களாக தமிழினத்தின் நிரந்தரப் பகைவர்களான சுப்பிரமணியசாமி, சேசாத்திரி சாரி இருவரையும் நரேந்திர மோடி அமர்த்தியிருப்பது புதிய நடுவண் அரசின் சிங்கள ஆதரவுப் போக்கின் தீவிரத்தைக் காட்டுகிறது.

இதனால் ஊக்கம் அடைந்த சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் தங்களின் இராணுவ இணையதளத்தில் தமிழக முதல்வர், பிரதமர் அவர்களுக்கு, எழுதும் அலுவல் வழிப்பட்ட கடிதங்களைக் கொச்சைப்படுத்தி குதூகலிக்கிறார்கள்.

இந்திய அரசு தனது தீவிரமான சிங்கள ஆதரவுப் போக்கைக் கைவிட்டு, தமிழ் இனம் தனது பகை இனம் இல்லை என்ற புதிய முடிவுக்கு வந்தால் ஒழிய சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் தமிழினப் பகைச் செயல்களும், தமிழக முதலமைச்சர் அவர்களை இழிவுப்படுத்தும் வன்மமும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

எனவே இலங்கை அரசு தொடர்பான இந்திய அரசின் கொள்கையை மாற்றி அமைக்கவும், சுப்பிரமணிய சாமித் தரகுக் கும்பலை இந்திய இலங்கை பேச்சு வார்த்தையிலிருந்து விடுவிக்கவும், இந்தியா முன் வரவேண்டும். இந்திய அரசு புதிய முடிவுகளுக்கு வர தமிழக மக்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டிய தருணம் இது என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இன்னணம்,
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

அறிக்கை வெளியீடு:
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி,

TAGS: