சின்னத்திரையால் சீரழியும் சமூகம்

“நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பது நம் செயல்களைவிட நம் எண்ணங்கள்தான் என சான்றோர்கள் கூறுகின்றனர். அதுதானே உண்மை. எண்ணம்போல் தானே வாழ்வும் அமைகிறது”

showposterஎப்போது வீட்டிற்குள் நுழைந்தாலும் அழுகுரல்களில் சத்தம் காதை அடைக்கிறது. இல்லையென்றால் மிக மட்டமாக ஆண் பெண் பேதமின்றி, வயது வித்தியாசமின்றி யாராவது யாரையாவது திட்டிக் கொண்டிருப்பார்கள். காது கொடுத்து கேட்க முடியாது. எவன் குடியை எப்படி கெடுக்கலாம், யார் முன்னேற்றத்தை எப்படி தடுக்கலாம், எப்படி திருடுவது, எப்படி பணம் பறிப்பது என்பதாகத்தான் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கும். பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள், மனைவிக்கு துரோகமிழைக்கும் கணவன்மார்கள், பெற்றோர்களை ஏமாற்றும் பிள்ளைகள் என பெரும்பாலான சின்னத்திரையான எதிர்மறையான விசயங்களையே காட்டிக் கொண்டிருக்கின்றன.

இப்போதெல்லாம் மாலை 5.00 மணி தொடங்கி இரவு 10.00 மணி வரை யார் வீட்டிற்கும் நான் செல்வதில்லை என்று கூட சில சொல்கிற அளவுக்கு சீரியல்கள் என்று சொல்லப்படுகிற சின்னத்திரை தொடர்கள் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. மேற்காணும் பதிவுகள் கூட வழக்கமாக சின்னத்திரைகளில் இடம்பெறும் காட்சிகள் தான்.

வாசிப்பு, இலக்கியம், பொது அறிவு, அறிவியல் சிந்தனைகள் போன்றவற்றைப் பரப்புவதற்குப் பதில் இப்படியான வாழ்விற்குத் தேவையற்ற விசயங்களைப் சின்னத்திரைகள் பரப்பிக் கொண்டிருக்கின்றன. நாமும் பொழுது போகவில்லை என்பதற்காக சின்னத்திரை தொடர்களைத் தொடர்ந்து பார்ப்பதன் மூலம் நமது எண்ணத்தில் நாமே நஞ்சை ஏற்றிக் கொண்டிருக்கின்றோம்.

குடும்பத்தோடு அமர்ந்து வாசிப்பது, உரையாடுவது, உண்பது, கலந்துரையாடுவது என்பன போன்ற நல்ல விசயங்கள் புறந்தள்ளப்பட்டு குடும்பத்தோடு அமர்ந்து சின்னத்திரை தொடர்களை நாம் இரசித்துக் கொண்டிருக்கின்றோம்.

ஏற்கனவே, நம் சமூகத்தில் பலர் அடிப்படை சிந்தனையாற்றலின்றி மனரீதியாக பின் தங்கி கிடக்கின்றனர். இந்த நிலையில் அவர்களை இருக்கின்ற சூழ்நிலையிலிருந்து விடுவித்து ஒரு மேம்பட்ட சிந்தனை வட்டத்திற்குள் கொண்டு வர தூண்டுகோலாக இருக்க வேண்டிய ஊடகங்கள் மக்களை இவ்வகையான மலிவான கலாச்சாரத்திற்குள் தள்ளி கொண்டிருக்கிறது.  நாமும் தெரிந்தோ தெரியாமலோ அதில் மூழ்கி மீண்டு வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம்.

நம் நாட்டில் பெரும்பாலான சின்னத்திரை தொடர்கள் மாலை நேரத்தில் தான் ஒளிப்பரப்பாகின்றன. மாலை நேரம் எவ்வளவு முக்கியமானது. வீட்டில் இருப்பவர்கள் அந்நேரத்தில் உடற்பயிற்சி செய்யலாம். பிள்ளைகளை அழைத்துக் கொண்டு விளையாட்டுப் பூங்காவிற்குச் செல்லலாம். காலாற நடக்கலாம். காலை பள்ளி முடிந்து வந்த பிள்ளைகள் ஓய்வெடுத்தப்பின் வீட்டுப்பாடங்கள் செய்ய உதவலாம். காலையில் சமைத்த சோறு கறியையும் இரவும் சாப்பிடுவதைத் தவிர்த்து சத்தான வேறு உணவுகள் தயாரிக்கலாம். மாலை பள்ளி முடிந்து வரும் பிள்ளைகயோடு இணைந்து செய்வதற்கு ஏராளமான கடமைகள் காத்துக் கிடக்கின்றன. Moondru-Mudichu-Polimer-tv-serial10

ஆனால், இதையெல்லாம் தவிர்த்து விட்டு 5 மணிக்கு தொடங்குகிற சின்னத்திரை தொடர்கள் இரவு 10 மணி வரை நீள்கிற அவலம் பல குடும்பங்களில் நிகழ்ந்தபடியே இருக்கிறது. பள்ளி முடிந்து வரும் பிள்ளைகளையும் கணவர்மார்களையும் கவனிப்பது கூட பலருக்குச் சுமையாகப் போய்விட்டது. இதில் உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால் வேலை முடிந்து கணவன்மார்களும் பிள்ளைகளும் கூட இரவு வரை சின்னத்திரை தொடர்களில் மூழ்கி விடுகின்றனர். தொடர்கள் முடிந்த பிறகுதான் சாப்பாடு, தூக்கம், வீட்டுப்பாடம் எல்லாம்.

பள்ளி மாணவர்கள் ஒன்று சேர்ந்து பேசுகிற கதைகளில் இப்போது சின்னத்திரையும் இடம்பெற்று விட்டது. பல குடும்பங்களில் உறவுகளுக்கிடையில் விரிசல்கள் ஏற்படுவதற்கும் இந்த சின்னத்திரைகள் காரணமாகின்றன. நாள்தோரும் பல மணி நேரங்கள் அதைத்தானே பார்க்கிறோம்.

நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பது நம் செயல்களைவிட நம் எண்ணங்கள்தான் என சான்றோர்கள் கூறுகின்றனர். அதுதானே உண்மை. எண்ணம்போல் தானே வாழ்வும் அமைகிறது.

நாம் எப்போதும் நம் எண்ணங்களைப் பற்றி கவனமாக இருக்க வேண்டும். அவைதான் சொற்களாக வெளிவருகின்றன. நாம் சொல்லும் சொற்களில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அவைதான் செயல்களாக மாறுகின்றன. நாம் கவனமாக செயல்பட வேண்டும். அவைதான் பழக்கமாக மாறுகின்றன. பழக்கம்தான் பின் ஒழுக்கமாகிறது. ஒழுக்கம்தான் நம் வாழ்வை உருவாக்குகிறது.

மக்களின் சிந்தனையை நாசப்படுத்துவோருக்குத் தூக்குத்தண்டனை அளிக்கப்பட வேண்டும் என தந்தை பெரியார் சொல்லியிருப்பதாக வாசித்திருக்கிறேன். சின்னத்திரைகள் மக்களின் சிந்தனையை நாசப்படுத்தும் வேலையையே செய்கின்றன.

நம் எண்ணம், பேச்சு. செயல், பழக்கம், ஒழுக்கம், வாழ்க்கை இப்படி எல்லாவற்றையும் சிதைக்கும் பணியைச் சின்னத்திரைகள் செய்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும். அவர்கள் ஒளிப்பரப்புவதால்தான் நாங்கள் பார்க்கிறோம் என்று நொண்டிச் சாக்கு சொல்வதை விடுத்து ஆக்கபூர்வமான வழியில் நமது நேரத்தைச் செலவிட வேண்டும். நாம் பார்க்காமல் தவிர்க்கும் பட்சத்தில் காலவோட்டத்தில் சின்னத்திரை தொடர்கள் ஒளிபரப்புவது நிறுத்தப்படும் என்பதையும் நாம் உணர வேண்டும்.

பூங்குழலி வீரன்