சேது சமுத்திர திட்டத்தின்போது ராமர் பாலத்தைச் சேதப்படுத்த மாட்டோம்: மத்திய அரசு உறுதி

  • ராமர் பாலத்தின் வரைபடம்.
    ராமர் பாலத்தின் வரைபடம்.

“சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ராமர் பாலத்தைச் சேதப்படுத்த மாட்டோம்’ என்று மக்களவையில் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதாகவும், திட்டத்தை நிறைவேற்ற அரசு பரிசீலித்து வரும் மாற்று வழிகளை உச்ச நீதிமன்றத்திடம் தெரிவிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

மக்களவையில் இது தொடர்பாக கோயமுத்தூர் தொகுதி அ.தி.மு.க. உறுப்பினர் நாகராஜன் வியாழக்கிழமை கேள்வி எழுப்பினார். அப்போது, “சேது சமுத்திரத் திட்டத்தால் பெரிய பலன் கிடைக்காது. அதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அதிக அளவில் பொருள் செலவும் ஏற்படும் என்பதால் அதனைக் கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி வருகிறார். ஆனால், அதன் பிறகும் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முந்தைய அரசில் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு ஆர்வம் காட்டினார். தற்போது சேது சமுத்திரத் திட்டத்தின் நிலை என்ன? அதற்கு ஏதேனும் எதிர்ப்பு வந்துள்ளதா?’ என்று நாகராஜன் கேட்டார்.

கட்கரி பதில்: அதற்கு கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பதில் வருமாறு:

சேது சமுத்திர திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ராமர் பாலத்தை சேதப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடாது. அது மத, கலாசார உணர்வோடு தொடர்புடைய விவகாரம். எனினும், மாற்றுப் பாதையில் ராமர் பாலத்துக்கு சேதம் விளைவிக்காத வகையில், அந்தத் திட்டத்தை செயல்படுத்தும் வாய்ப்பை ஆராய்வோம். இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அரசின் கருத்து, திட்டத்துக்கான மாற்று ஏற்பாடுகள் தொடர்பான வாய்ப்பு ஆகியவை குறித்து நீதிமன்றத்திலேயே அரசு தெரிவிக்கும்.

மொத்தத்தில் ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்பதே தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் நிலைப்பாடு. ராமர் பாலத்தின் பின்னணியில் பல்வேறு புவியியல் அம்சங்களும், மத நம்பிக்கைகளும் உள்ளன. அவற்றுக்கு பாதகமாக மத்திய அரசு செயல்படாது என்றார் கட்கரி.

தேசிய நீர் வழித் திட்டம்: முன்னதாக, தேசிய நீர் வழித் திட்டம் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்த கட்கரி, “ஜல்மார்க் யோஜனா’ என அழைக்கப்படும் தேசிய நீர் வழித் திட்டத்தைச் செயல்படுத்துவதால், பயணத்துக்கு கிலோ மீட்டருக்கு 50 காசு மட்டுமே செலவாகும். ஆனால், ரயில், சாலை வழியாகச் செல்ல முறையே ரூ.1 மற்றும் ரூ.1.50 செலவாகும்’ என்றார்.

சேது சமுத்திரத் திட்டத்தின் பின்னணி: இந்தியப் பெருங்கடலில் பாக் ஜலசந்தி மற்றும் ராமர் பாலம் ஆகிய பகுதிகளை ஆழப்படுத்தி, கப்பல் போக்குவரத்துக்கு உகந்ததாக மாற்றும் திட்டம்தான் சேது சமுத்திரத் திட்டம். சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக உத்தேசிக்கப்பட்டு வரும் இத்திட்டத்தை நிறைவேற்றினால், இக்கால்வாய் வழியாக செல்லக் கூடிய அளவும் வேகமும் கொண்ட கப்பல்கள், இந்தியப் பெருங்கடலில் இருந்து இலங்கையைச் சுற்றாமல் வங்கக் கடலை அடைய முடியும் என்று கருதப்படுகிறது. 300 மீ அகலமும், 12 மீ ஆழமும், 167 கி.மீ. நீளமும் கொண்டதாக சேது சமுத்திரக் கால்வாய் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டது.

இத்திட்டத்தை நிறைவேற்ற சேது சமுத்திரம் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனம், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. திட்டத்தை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவராக இருந்த சோனியா காந்தி, அப்போதைய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இத்திட்டம் காரணமாக ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று வலியுறுத்தி அப்போது முக்கிய எதிர்க்கட்சியாக இருந்த பாஜக, மக்களவையில் 2007 மார்ச் மாதம் கடும் அமளியில் ஈடுபட்டது.

இத்திட்டத்தை நிறைவேற்றுவதை எதிர்த்து சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஹிந்துக்கள் புனிதமாகக் கருதும் ராமர் பாலம் இடிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் இத்திட்டப் பணியால் டி.ஆர்.பாலுவின் குடும்பம் பயனடைவதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

சுவாமியின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ராமர் பாலத்தை இடிப்பதற்கு 2007 ஆகஸ்ட் மாதம் இடைக்காலத் தடை விதித்தது. அதற்குப் பதிலாக மாற்று வழிகளை ஆராயுமாறு மத்திய அரசை அறிவுறுத்தியது.

இதையடுத்து, மாற்று வழிகள் குறித்து ஆராய சுற்றுச்சூழல் நிபுணர் ஆர்.கே. பச்சௌரி தலைமையில் 8 உறுப்பினர்கள் அடங்கிய நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்தது. அந்த அமைப்பு விரிவாக ஆய்வு செய்து மத்திய அரசிடம் அளித்த அறிக்கையில், “சேது சமுத்திரத் திட்டம் பொருளாதார ரீதியில் சாத்தியமற்ற திட்டம்.

இத்திட்டத்தால் சுற்றுச்சூழல், மீன்வளம் ஆகியவற்றுக்குப் பாதிப்பு ஏற்படும். மேலும் இத்திட்டத்தை நிறைவேற்றினால் கிடைக்கக் கூடிய வருமானம் குறித்து அரசின் மதிப்பீடு அதீத நம்பிக்கை கொண்டதாக உள்ளது’ என்று தெரிவித்திருந்தது. இந்த அறிக்கையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, கடந்த ஆண்டு (2013) பிப்ரவரி மாதம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

TAGS: