குலா: நாங்கள் குரைக்கும் நாய்களா?

kula-மு.குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், ஆகஸ்ட் 21, 2014.

எதிர்க்கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் வித்தியாசம் தெரியாமல் உளருகிறார் டாக்டர் எஸ். சுப்ரமணிய்ம்!

மஇகாதான் இந்தியர்களின் பிரதிநிதி என்று எதிர்க்கட்சிகள்  ஏற்றுக்கொள்கிறார்கள் என்று டாக்டர்  எஸ்.சுப்ரமணியம் 68 ஆவது  மஇகா கூட்டரசு பிரதேச மாநாட்டில் தலைமையுரை ஆற்றும்போது கூறியிருந்தார்.

இப்பொழுது எதிர்க்கட்சியில் இருக்கும் தலைவர்கள் பெரும்பாலோர்  முன்னாள் ஆளும் கட்சியின் தலைவர்களின் பிள்ளைகள்தான் என்பதை டாக்டர் சுப்ரமணியம் மறந்துவிடக்கூடாது.

என் தகப்பனார் கூட  மஇகா லுமூட் டிவிஷன் தலைவராக இருந்தவர்தான். அவரின் மகனான நான் இன்று எதிர்க்கட்சியில் ஒரு தலைவனாக இருக்கிறேன். அது அவருக்கு தெரியும் என்று நம்புகிறேன்.

 

நன்மையோ நன்மை!

மஇகா இந்தியர்களை பிரதிநிதித்ததால் வந்த “ நன்மைகளை” கொஞ்சம் பட்டியலிடவா?:

•    1986 இல் இந்தியர்களின் சொத்துடமை இந்த நாட்டில் 12 % உயர்த்தப்படும் என்று கூறியிருந்தார்கள்.இப்பொழுது நமது நிலை என்ன? 1.2% கூட இல்லாமல் இருக்கிறோம். 1986ஆம் ஆண்டில் இருந்ததைவிட  10% பின்னால் இருக்கிறோம்!

 

•    1970 களில் 17% ஆக  அரசாங்கத் துறையில் இருந்த  இந்தியர்கள் இன்று 4% ற்கும்  குறைவாவாக இருக்கிறார்கள்!!
•    பல்கலைக்கழகங்களிலே 10 % மேலிருந்த மாணவர் எண்ணிக்கை இப்பொழு 1.5% இருக்கிறது!!!

இவைகள்தான்  மஇகாவின் சாதனைகளா? இவைகள் குறித்து மஇகா பெருமைப் பட்டுக்கொள்ள வேண்டுமா?

2008 தேர்தலுக்கு பிறகு பினாங்கு மாநிலம்தான் நாட்டிலேயே முதலாவது மாநிலமாக எல்லாத் துறையிலும் விளங்கி வருகிறது. சிலாங்கூர் மாநிலமும் பொருளாதாரத்தில் அதே போல சிறப்பாக செயல் பட்டு வருகிறது. ஏன் இந்த முன்னேற்றம் பாரிசான் ஆட்சி செய்யும் மற்ற மாநிலங்களில் ஏற்படவில்லை?

Kula - MPஓர் இந்திய துணை முதலமைச்சரையும், இரண்டு ஆட்சிக்குழு உறுப்பினர்களையும் பினாங்கு மாநிலம் கொண்டுள்ளது.
இவைகளெல்லாம் எதிர்கட்சியினற்கு ஆளும் வாய்ப்பு வழங்கப்பட்டால் மிகவும் சிறப்பாக செயல்பட்டு அதனால் இந்தியர்களும்
நல்ல வாய்ப்பு வழங்கப்படும் என்பதற்கான  அறிகுறிகள். எங்கே உங்கள் அறிகுறிகள்”?

மஇகாதான் இந்தியர்களின் பிரதிநிதி என்றும் சொல்லும்  நீங்கள் எப்படி அந்த பிரதிநிதித்துவத்தை பினாங்கு, கெடா, சிலாங்கூர் பேரா பாஹாங் கூட்டரசு பிரதேசம்  போன்ற மாநிலங்களில் இழந்தீர்கள்?

9 நாடாளுமன்றத் தொகுதிகளை  வைத்திருந்த நீங்கள் இப்பொழுது 5ஐ மட்டுமே வைத்துள்ளீர்களே!

இதுதான் சாதணையின் புது அர்த்தமா?

சட்டமன்றதில் ஏறக்குறைய 13 இடங்களில் மண்ணைக் கவ்வி உள்ளீர்களே! மண்ணைக் கவ்வுவதும் உங்களின் சாதனைப் பட்டியலிலுள்ளதா?

இந்தியர்கள்  என்றோ உங்களை ஒதுக்கிவிட்டார்கள் என்று இந்த மாநிலங்களில் மஇகா கடந்த தேர்தலில் அடந்த தோல்விகளே  ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

 

இதைக்கூட சொல்லித்தர வேண்டியுள்ளது

 

நாடாளுமன்றத்தில் இந்தியர் பிச்சனைகளுக்கு தைரியமாகவும்  ஆணித்தரமாகவும் உரக்கக் குரல்  கொடுப்பதால்தான் அரசாங்கம் ஏதோ அவர்களுக்கு செய்கிறது என்று முன்னாள் மஇகா தலைவரும்  அமைச்சரும் தன் வாயாலேயே  என்னிடம் கூறியுள்ளார் என்பதனை இந்த வேளையில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள எஸ்கோர்ட் பள்ளிக்காக நான் 2010 ல் நாடாளுமன்றத்தில்  குரல் கொடுத்ததால்தான் விரைவாக தண்ணீரும் மின்சாரமும் வழங்கப்பட்டது என்பதை நாடறியும். இது நாடாளுமன்ற குறிப்பேட்டிலும் பதிவாகியுள்ளது.

ஜனநாயக ஆட்சியில் எதிர்கட்சிகள் ஆளும் கட்சியின் தவறுகளை  சுட்டிகாட்டத்தான் உள்ளனவேயன்றி  அவற்றின் வேலையைச் செய்ய அல்ல. இதைக்கூட சொல்லித்தர வேண்டியுள்ளது!

மேலும் மக்கள் வரி, சுங்கத் துறை  வருமானம், இயற்கை வளத்தில் இருந்து பெரும் பணம் இவை யாவும் ஆளும் கட்சியிடம்தான்  போகிறது.

பணத்தையும் அதிகாரத்தைம் நீங்கள் வைத்துக்கொண்டு  மக்களுக்கு  சேவை செய்வதற்காகத்தான் நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்.

அதை எதிர்கட்சி செய்யவேண்டுமென்று நீங்கள் கூறுவது அறியாமை.

நாங்களும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நீங்கள் செய்வதை விட இன்னும் சிறப்பாகவே செய்வோம்.

 

மஇகாவின் மதிப்பு எங்கே இருக்கிறது?

 

MIC-Palani&Subraஎடுத்துக்காட்டாக, இந்தியாவின் தற்போதைய பிரதமர் மோடி, எதிர்க்கட்சியில் இருந்த போது அந்நாளில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியின் பலவீனங்களை கடுமையாக சாடி வந்தார்.

தான் ஆட்சிக்கு வந்தால் என்ன மாற்றங்களை  கொண்டுவரமுடியும் என்பதை மக்கள் முன் வைத்து இன்று ஆட்சியையும் பிடித்து விட்டார்,.

எல்லா இந்தியர்களுக்கும் நாங்கள்தான்  பிரதிநிதி என்று மார் தட்டும் நீங்கள், கூட்டரசு பிரதேச மஇகா ஆண்டுக் கூட்டதற்கே உங்கள் தேசிய தலைவரையே  வரவழைக்க முடிய வில்லையே?

அவராலேயே நீங்கள் நடத்தும் கூட்டத்திற்கு வந்து உங்கள் பேராளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற துணிவு இல்லாத போது ஒட்டு மொத்த இந்தியர்களின் பிரச்சனையைக் கலைய மஇகாவால் எப்படி முடியும்?

இதே போலத்தான் இந்து அறவாரியத்தின் தலைமை ஆலோசகராக உங்களில் ஒருவரை நியமிக்க அரசாங்கம் ஒத்துக்கொள்ளாமல் ஒருmic சீனரை நியமித்தார்களே! அதிலிருந்தே தெரியவில்லையா மஇகாவின் மதிப்பு எந்த இடத்தில் இருக்கிறதென்று.

வி.டிசம்பந்தன், வி. மாணிக்கவாசகம் போன்றோரின் காலத்தில் மஇகா ஏதோ ஓர் உன்னத நிலையில் இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில்  தலைவர்கள் தங்களுடைய சொந்த  பணத்தையும் நேரத்தையும் செலவு செய்து சமுதாய நலன் காத்தார்கள்.

இந்தியர்களுக்காக  குரல் கொடுத்து எந்த மஇகா அரசியல்வாதியாகிலும் சிறை சென்றுள்ளார்களா?

ஆனால் எதிர்கட்சியில் இருந்த இந்திய அரசியல்வாதிகள் வி.டேவிட்,பி. பட்டு, கர்பால் சிங், வி. கணபதி ராவ், எம். மனோகரன், ஆர். கங்காதரன் போன்றவர்கள் இந்தியர்களின் உரிமைக்காக  போராடி சிறை சென்றவர்கள்.

ஆனால் கடந்த 30 வருட காலங்களில்  வந்த தலைவர்கள்  சமுதாய  பெயரை வைத்தே சமுதாயத்தை  சுரண்டி விட்டார்கள்.
இந்தியர்களுக்காக ஒதுக்கப்படும் நிலங்களையும்,மானியங்களையும் கலேபரம் பண்ணுவதில் இன்றைய மஇகா தலைவர்கள் பலே கில்லாடிகள் ஆகிவிட்டார்கள்.

இதே போக்கை மஇகா கடைப்பிடித்து வந்தால், இனி வருங்காலங்களில் ஓர் இடத்தில்கூட போட்டியிட வாய்ப்புக் கிடைக்காமல் போய் வெறும் நியமனங்களுக்காக மஇகா பாரிசானிடம் கையேந்தி நிற்கும் நிலை வரலாம்.

தனது செயல் பாடுகளையும் தூர நோக்கு சிந்தனையும்  கால மாற்றதிற்கேற்ப மஇகா  சரி செய்து கொள்ளவில்லை என்றால் இந்தியாவின் காங்கிரஸ் கட்சி போல மலேசிய இந்தியர் காங்கிரஸும் இருக்கும் இடம் தெரியாமல் போகும் வாய்ப்பு பிராகாசமாக உள்ளது..

நீங்கள் பெருமைப்பட்டுகொள்வது போல மஇகா திறமையாக செயல்பட்டு கொண்டிருக்கின்ற கட்சி என்றால், இன்று மக்கள் கட்சி, ஐபிஎப் கட்சி,  நல்ல கருப்பன் கட்சி என்று பல கட்சிகள் இந்தியர்களைடையே உருவாகியிருக்காது.

பிரதமர் நஜீப் கூட உங்களின் “திறமைக்கான” சான்றாக, உங்களை நம்பாமல் இந்தியர்களுக்கான மானியங்களை அரசு சாரா இயக்கங்களுக்கு நேரடியாக  கொடுக்க உத்தரவிட்டுள்ளாரே! இது போதாதா உங்களின் இந்திய பிரதிநிதித்துவ சவுடாலுக்கு கிடைத்துள்ள அங்கீகாரத்தின் தரத்தை எடைபோடுவதற்கு!

டாக்டர் எஸ். சுப்ரமணியம் தன்னிலை அறிந்து எதிர்க்கட்சிகளை வம்புக்கு இழுக்காமல்  அடக்கமாக பேசுவது அவரின் கட்சி தொடர்ந்து படுகுழி நோக்கிச் செல்லாமல் தடுக்க உதவும்.