வடகிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஐநாவுக்கு எழுதிய கடிதம் தீர்மானமாகிறது

வடமாகாண சபை (ஆவணப்படம்)வடமாகாண சபை (ஆவணப்படம்)

இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைப் பேரவையினால் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணையை விரிவான முறையில் நடத்த வேண்டும் என்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகளைச் சேர்ந்த 33 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடித விபரங்கள் வியாழனன்று வடமாகாண சபையில் பிரேரணைகளாக முன்வைக்கப்பட்டபோது, அதில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தப் பிரேரணைகளை வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் சபையில் இன்று வியாழக்கிழமை சமர்ப்பித்திருந்தார். கடந்த 1974 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்களுக்கு எதிராக இராணுவத்தினரால் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் குறித்து விரிவாக விசாரணை செய்யப்பட வேண்டும். அங்கு ஓர் இனப்படுகொலை நடத்தப்பட்டது என்பதையும் விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டும். அத்துடன் இலங்கையில் விசாரணைகளை நடத்துவதற்கு அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவிக்குமேயானால், இந்தியாவில் தமிழ் நாட்டில் இந்த விசாரணைகளை நடத்த வேண்டும் என்ற விடயங்களே ஐநா மனித உரிமைப் பேரவைக்கு எழுதப்பட்ட கடிதத்தில் கோரிக்கைகளாக முன் வைக்கப்பட்டிருந்தன.

இந்தப் பிரேரணைகளை ஆட்சேபித்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்திருந்தனர்.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் இந்தப் பிரேரணைகள் விவாதத்திற்கு எடுக்கப்பட்டபோது, விசாணை காலத்தை நீடிப்பது, இனப்படுகொலை தொடர்பில் விசாரிப்பது போன்ற விடயங்கள் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதையடுத்து, 1974 ஆம் ஆண்டு முதல் விசாரணை நடத்த வேண்டும் என்ற விடயத்தைப் பிரேரணையில் இருந்து நீக்குவதற்கும் நிகழ்கால அரசியல் நிலைமைகளுக்கமைவாக பிரேரணையில் திருத்தங்கள் செய்து அதனை வரும் செப்டம்பர் மாதம் விசேட அமர்வின்போது விவாதிப்பதற்காக பிரேரணை ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக அவை முதல்வர் சி.வி.கே.சிவஞானம் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

அத்துடன் வடக்கு கிழக்கு மாகாண சபைகளைச் சேர்ந்த 33 உறுப்பினர்கள் இணைந்து ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பி வைத்த கடிதத்திற்கும் அமைப்பு ரீதியில் மாகாண சபைக்கும் தொடர்பில்லை. அது மாகாண சபையின் தீர்மானமுமல்ல என்றும் அவை முதல்வர் சிவஞானம் தெரிவித்தார்.

அத்துடன் அது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தீர்மானமும் அல்ல என்றும் சிவஞானம் குறிப்பிட்டார். -BBC

TAGS: