மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் முன்னேற்றம்: மோடி

அனைத்து மாநிலங்களும் ஒரே சீராக வளர்ச்சியடைந்தால் மட்டுமே நாடு முன்னேற்றம் அடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

காங்கிரஸ், ஆர்ஜேடி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தில், பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக, ராஞ்சி நகருக்கு வியாழக்கிழமை மோடி வந்தார்.

அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

குஜராத் மாநிலத்தை விட பல மடங்கு வளர்ச்சியடைந்திருக்க வேண்டிய ஆற்றல் கொண்டது ஜார்க்கண்ட் மாநிலம். ஆனால், இந்த மாநிலத்தில் இதற்கு முன்பு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் பல கட்சிகளை நீங்கள் ஆதரித்ததால், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனது.

நாடு வளர்ச்சியடைவதற்கு அனைத்து மாநிலங்களும் ஒரே சீராக வளர்ச்சியடைய வேண்டியது அவசியம். இந்தியாவை முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டுமெனில், எந்த மாநிலமும் பலவீனமாக இருக்கக் கூடாது.

மேலும், இலக்கை சென்றடைவதற்கு நிலையான அரசும் அமைய வேண்டும். ஆகையால், அடுத்த முறை ஜார்க்கண்டில் முழுப் பெரும்பான்மை கொண்ட அரசு அமைய வாக்களியுங்கள் என்று மோடி கேட்டுக் கொண்டார்.

புதிய மின் திட்டங்கள்: ராஞ்சியில், நாட்டின் கிழக்கு, மேற்கு பிராந்தியங்களை இணைக்கும் வகையில், 765 கிலோ வோல்ட் மின் திறன் கொண்ட ராஞ்சி-தர்மஜயகர்-சீபத் மின் பகிர்மானப் பாதையை மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மேலும், ஜசீடீ எண்ணெய் முனையத்தையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

சோரனுக்கும் எதிர்ப்பு

முன்னதாக, ராஞ்சியில் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கலந்து கொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசத் தொடங்கியவுடன், கூட்டத்தில் இருந்த ஒரு பகுதியினர், “மோடி வாழ்க!’ என கோஷங்களை எழுப்பி, அவரைப் பேச விடாமல் தடுத்தனர். அமைதியாக இருக்குமாறு மோடி கையசைத்தும், அவர்கள் கோஷங்களை எழுப்பியபடியே இருந்தனர். எனினும், ஹேமந்த் சோரன் தனது பேச்சை தொடர்ந்தார். அவர் பேசி முடிக்கும் வரை, அந்த கோஷம் நீடித்தது. அதனால், ஹேமந்த் சோரன் அதிருப்தியடைந்தார்.

இதேபோன்று, ஹரியாணா மாநிலம், கைதாலில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சியில், அந்த மாநில முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா பேசியபோது, கூட்டத்தில் இருந்த சிலர், அவரைப் பேசவிடாமல் கோஷங்களை எழுப்பினர். இதனால், அதிருப்தியடைந்த அவர், “மோடி பங்கேற்கும் கூட்டங்களில் இனி கலந்து கொள்ளமாட்டேன்’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

TAGS: