ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளை ஒடுக்க இந்தோனேசிய அதிபர் வேண்டுகோள்

susilo-bambang-yudhoyonoசிட்னி : ”ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் கொடூர செயல்கள், உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு, தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கரவாதிகளை ஒழிக்க, உலகம் முழுவதும் ஒன்றிணைய வேண்டும்,” என, உலகில் அதிக முஸ்லிம்கள் வசிக்கும், இந்தோனேசியா நாட்டின் அதிபர், சுசிலோ பாம்பாங் யுதோயோனோ கூறினார். ஆஸ்திரேலிய பத்திரிகை ஒன்றுக்கு, அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

சிரியா மற்றும் ஈராக்கில் செயல்படும், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் செயல், மிகவும் கொடூரமாக உள்ளது; கட்டுக்கடங்காமல் உள்ள அவர்களால், உலக முஸ்லிம்கள் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். அந்த பயங்கரவாதிகளை, நாங்கள் பொறுத்துக் கொள்ள முடியாது. உலகில், அதிக முஸ்லிம்கள் இந்தோனேசியாவில் வசித்தாலும், எங்கள் நாடு இஸ்லாமிய நாடு அல்ல. எனினும், எங்கள் நாடுகளைச் சேர்ந்த சிலர், பயங்கரவாதிகளுடன் இணைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் கவலை அளிக்கின்றன. இந்த பயங்கரவாதிகளை ஒழிக்க, உலக நாடுகளும், உலக தலைவர் களும் ஒன்றிணைய வேண்டும்.

இந்தோனேசியாவில், ஐ.எஸ். ஐ.எஸ்., பயங்கரவாதிகளை வளர விட மாட்டோம்.

இவ்வாறு, அதிபர் சுசிலோ பாம்பாங் யுதோயோனோ கூறினார்.