விமான விபத்தில் உயிரிழந்த குடிமக்களுக்கு மலேசியா மவுன அஞ்சலி

honorஜூலை  மாதம் கிழக்கு உக்ரேய்னில் நிகழ்ந்த எம்எச்17 விமான விபத்தில் பலியான 43 மலேசியர்களில்  20 பேரின் சடலங்கள்  மலேசியாவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள  வேளையில்  அவர்களுக்கு  நாடே ஒன்றுதிரண்டு  அஞ்சலி  செலுத்தியது.

மலேசியா  வந்துசேர்ந்த  சடலங்களுக்கு  கேஎல்ஐஏ  பூங்கா  ராயா  வளாகத்தில்  ராணுவ  முறைப்படி  வரவேற்பளிக்கப்பட்டது. அந்நிகழ்வில்  பேரரசர்  துவாங்கு  அப்துல்  ஹாலிம்  மு’வாட்ஸம்  ஷாவு  பேரரசியார்  துவாங்கு  ஹாஜா ஹமினாவும் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  அவரின்  துணைவியார்  ரோஸ்மா  மன்சூர்  முதலியோரும்  கலந்துகொண்டனர்.

ராணுவ  மரியாதையுடன்  17  சடலங்களும்  மூன்று  அஸ்தி கொள்கலங்களும்  பிண வண்டிகளில்  ஏற்றப்பட்டதும்  ஒரு  நிமிடம்  மவுனம்  கடைப்பிடிக்குமாறு  அறிவிக்கப்பட்டது.

அதைத்  தொடர்ந்து  அந்த  விமான  விபத்தில் இறந்தவர்களுக்கு  மரியாதை   தெரிவிக்க  காலை  மணி 10.54-க்கு ஒரு  நிமிட மவுனம்  அனுசரிக்கப்பட்டது. 30 மில்லியன்  மலேசியர்  ஒன்றுபட்டு  துக்கத்தை  வெளிப்படுத்திக்  கொண்ட  வேளையில்  ஜாலோர்  கெமிலாங்  அரைக்  கம்பத்தில்  பறந்தது.

தேசிய துக்க  தினமான  இன்று  துக்கம்  அனுசரிப்பதன்  அறிகுறியாக  மலேசியர்களில்  பெரும்பாலோர்  கறுப்பு  ஆடையில்  காட்சியளித்தனர்.