மஇகாவின் 59 மில்லியன் ரிங்கிட் தலைவலி – தமிழினி

Tamil School Allocation_aru2008 தேர்தலில் படுதோல்வியடைந்த பாரிசான் 2009 முதல் 2013 வரையில் தமிழ்ப்பள்ளிகளுக்காக ரிம540 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்து புதிய சாதனையை உருவாக்கியது. இதோடு 2014-இல் இன்னொரு ரிம 50 மில்லியனும் ஒதுக்கப்பட்டது.

அதாவது சராசரி ஒரு தமிழ்ப்பள்ளிக்கு 1.15 மில்லியன்  ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என வைத்துக்கொள்ளலாம். இதுதான் வரலாற்றில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அதிகமானது ஆகும். இதற்கு முன்பு அதிகமாக 1990-இல் ரிம 27 மில்லியனும் 2006-இல் ரிம 56 மில்லியனும் ஒதுக்கப்பட்டது. 1990-இன் ஒதுகீடுக்கான காரணம் ஐபிஎப்-தான்.

1அப்போது அது செமாங்காட்-46 என்ற துங்கு ரசாலியின் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது. தேசிய முன்னணி இந்திய வாக்காளர்களைக் கவர மேற்கொண்ட நிதி ஒதுக்கீடாகும். 2006-இல் ஒன்பதாவது மலேசிய திட்ட்திற்கு ஒதுக்கப்பட்ட ரிம 56 மில்லியன் தற்போதுள்ள 540 மில்லியனின் ஒரு பகுதியாகும்.

கடந்த 13-வது பொதுத்தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட  நம்பிக்கை கையேட்டில் 2009-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை 250-க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக ரிம 540 மில்லியன் நிதியைக் கூட்டரசு அரசாங்கம்  வழங்கியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மறுசீரமைப்புப் பணிகள் தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய கட்டங்கள் எழுப்புவதையும், தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய இணைக்கட்டங்கள் எழுப்புவதையும், தமிழ்ப்பள்ளிகளை புதுப்பிப்பதையும் இலக்காக கொண்டுள்ளது.

4எடுத்துக்காட்டிற்கு, கெடாவிலுள்ள சரஸ்வதி தமிழ்ப்பள்ளிக்கு 9 வகுப்பறைகளைக் கொண்ட மூன்று மாடி கட்டடம் கட்டுவதற்கு உத்தேச செலவு ரிம 2,000,000 ஒதுக்கீடு 2012-ஆம் ஆண்டுக்கான சிறப்பு ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய இணைக்கட்டங்கள் எழுப்புவதற்கான பரிந்துரையில் இடம்பெற்றுள்ளது. இதேபோல் சிலாங்கூர் சீபில்டு தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு ரிம 4,000,000 ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு 2 ஆண்டுகளை நெருங்கும் நிலையில் இன்றைய நிலையில் அவை இன்னமும் கட்டப்படவில்லை. இவ்வகையில் 48 பள்ளிகளுக்கு ரிம 84,000,000 ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் எத்தனை பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன என்பது தெரியவில்லை.

மேலும், இவை தற்போது கட்டுவதற்கு தேவைப்படும் நிதி சுமார் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிகிறது. எடுத்துக்காட்டிற்குச் சிலாங்கூரில் உள்ள ஒரு பள்ளியைக்

 

கட்ட ஒதுக்கப் பட்ட நிதி ரிம 4 மில்லியன், ஆனால் அதன் குத்தகை மதிப்பு ரிம 8.5 மில்லியன்.

இதேபோல் நம்பிக்கை கையேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் 250 தமிழ்ப்பள்ளிகளுக்கும் குறிப்பிடப்பட்டுள்ளது போன்ற வேலைத்திட்டமும் ஒதுக்கப்பட்ட தொகையும் செலவிடப்பட்டதா? என்ற கேள்வியும் எழுகிறது.

சுயாதீன தணிக்கை குழு வழி மஇகா செயலாற்றலாம்

3ஒவ்வொரு ஆண்டும் தலைமை கணக்காய்வாளரின் அறிக்கை (Auditor General’s Report) நிதி பயன்பாட்டை அம்பலப்படுத்துகிறது. தமிழ்ப்பள்ளிகள் தொடர்பான சிக்கல்கள் நீண்ட காலம் நிலுவையில் இருப்பதால் இந்த சுயாதீன தணிக்கை குழு அவசியமாகிறது.

இது தமிழ் பள்ளிகளை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் மீதான பொது மக்களின் நம்பிக்கையை உயர்த்தும். அதோடு அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் அல்லது வதந்திகள் அகற்றி நிதி மோசடி இருந்தால் அம்பலப்படுத்தும்.

ஒவ்வொரு முறையும் தமிழ்ப்பள்ளிகளின் நிலை குறித்து பேசுகிற பொழுது மீண்டும் மீண்டும் அரசாங்கம் ஒதுக்கியிருக்கும் நிதி குறித்து நினைவுறுத்தப்படுகிறது. இன்றைய நிலையில், கண்டிப்பாக அந்தத் தொகையில் பல மில்லியன்கள் செலவிடப்பட்டிருக்க வேண்டும். அதன் விபரங்கள் என்ன என்பதைத் தெளிவாக வெளியிட வேண்டியது அவசியமாகிறது.

கமலநாதனால் முடியும் 

Kamal Tamil schoolஇந்த விபரங்களைப் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டு வர வேண்டிய பணியைக் கல்வித் துணையமைச்சர் கமலநாதனின் செய்தால் அதுவே ஒரு பெரிய சாதனையாகும். நாம் வெளிப்படைத்தன்மையைப் (Transparency) பற்றி கருத்தில் கொண்டால் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு உடனடியாக அடைவுநிலைகளை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும். அவர் அவற்றை தனது முகநூல் அல்லது டிவிட்டரில் தொடர் முன்னேற்றங்கள் குறித்த அறிவிப்புகள் பதிவிட வேண்டும்.

நான் மேற்கொண்ட ஓர் சிறிய ஆய்வின் படி ஆகஸ்டு 18 வரை கமலநாதன் 22,400 டிவிட் செய்திருக்கிறார். 25,000 பேர் அவரை டிவிட்டரில் பின்தொடர்கிறார்கள். அதுபோல முகநூலில் 4857 நண்பர்களும் 3658 பேர் பின் தொடர்பவர்களாகவும் இருக்கின்றனர். சிறந்த அடைவுநிலைகளையும் இவ்விரு தளத்திலும் பதிவிட்டுள்ள கமலநாதனுக்கு சுயாதீன தணிக்கை குழுவின்  பலன் அவரை மேலும் பிரபலமாக்கும்.

ரிம 590 மில்லியன் பத்தாது 

2015-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், 10 அக்டோபர் 2014 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதில் தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுக்கு மேலும் ஒதுக்கீடு தேவை என்ற விண்ணப்பம் கண்டிப்பாக இருக்கும். அதற்கு காரணம், மேலே குறிப்ப்ட்ட 48 பள்ளிகளை தவிர பிரதமர் கடந்த 2013 தேர்தல் காலங்களில் அறிவித்த ஏனைய பள்ளிகளை மேம்படுத்த மேலும் சுமார் ரிம 150 முதல் ரிம 200 மில்லியன் தேவைப்படும்.

இதை மஇகா செய்திருக்கும் என நம்புவோம். இதில் குறைந்தது ரிம 100 மில்லியன் கிட்டாவிட்டால் பிரதமர் அறிவித்த தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாடு முழுமையடைய வாய்ப்பில்லை.

மஇகா-வின் தலைவலி 

mic_picஅரசாங்கம் இந்திய சமுதாயதிற்கு ஒதுக்கிய மிகப்பெரிய கல்வி ஒதுக்கீட்டு தொகை இந்த ரிம 590 மில்லியன். இதை 2012 முதல் தரமாகவும் திறமையாகவும் கையாள இயலாததால் சமுதாயம் பாதிப்படைந்துள்ளது.

பிரதமர் அமைத்த சிறப்பு அமைச்சரவை குழு, இந்தியர்களுக்கான சிறப்பு செயலாக்க குழு மற்றும் அமைச்சர்கள் துணையமைச்சர்கள் இப்படி இத்யாதிகள் இருந்தும் எதனால் இந்த நிலை?

மஇகா தனது மானத்தை காப்பாற்ற மேற்குறிப்பிட்ட சுயாதீன தணிக்கை குழு  ஒன்றை நிறுவ வேண்டும். அதன் முடிவுகளை அறிவிக்க வேண்டும். அதில் தவறாக ஈடுபட்டவர்களை அடையாளம் காண வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.