சிரியாவில் வான்வழித் தாக்குதலுக்கு ஆயத்தமாகிறது அமெரிக்கா

isis_irakசிரியாவிலுள்ள இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) அமைப்பின் நிலைகள் மீது வான்வழித் தாக்குதல் தொடுப்பதற்கு ஏதுவாக, அங்கு ஆளில்லா உளவு விமானங்களை பறக்கச் செய்வதற்கான ஆயத்த வேலைகளை அமெரிக்கா தொடங்கியுள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அமெரிக்காவிலிருந்து வெளியாகும் “தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ நாளிதழில் வெளியான செய்தி:

இராக்கிலுள்ள ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு மீது வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, தனது தாக்குதலை சிரியாவிலுள்ள ஐ.எஸ். நிலைகளுக்கும் விரிவுபடுத்த ஆயத்தமாகி வருகிறது.

இதற்காக, சிரியா வான்பகுதிக்கு ஆளில்லா உளவு விமானங்களை அனுப்பி, அந்நாட்டிலுள்ள ஐ.எஸ். நிலைகள் குறித்த விவரங்களைச் சேகரிக்க அமெரிக்கா ஆயத்தமாகி வருகிறது.

இதுகுறித்து அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், “சிரியாவில் விமானத் தாக்குதல் தொடுப்பது குறித்து அதிபர் ஒபாமா இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

எனினும், அங்கு தாக்குதல் தொடுக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டால், அந்த முடிவை கனகச்சிதமாக நிறைவேற்ற உதவும் விதமாக, அங்கு உளவு விமானங்கள் அனுப்பப்பட வேண்டும்.

அதற்கான ஆயத்தப் பணிகளையே ராணுவ தலைமைகயம் தொடங்கியுள்ளது’ என்று தெரிவித்தாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், சிரியா அரசின் அனுமதியின்றியே அந்நாட்டு வான் எல்லைக்குள் அமெரிக்க உளவு விமானங்கள் பறக்கும் என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தி நியூயார்க் டைம்ஸ்’ இதழில் வெளியான செய்தியில், “சிரியாவில் வான்வழித் தாக்குதல் நிகழ்த்துவதற்கு அதிபர் ஒபாமா இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை.

எனினும், அங்கு ஆளில்லா உளவு விமானங்களை அனுப்ப அவர் அனுமதி அளித்துவிட்டார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்திகள் குறித்து கருத்து கூற அதிபர் மாளிகை மறுத்துவிட்டது.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் கேத்லீன் ஹேடன் கூறுகையில், “”உளவுப் பணிகள் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து நாங்கள் கருத்து வெளியிடுவதில்லை.

நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக, எங்களால் முடிந்த எதையும் செய்ய தயாராக இருக்கிறோம் என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்ல முடியும்” என்று கூறினார்.

முன்னதாக, அதிபர் ஒபாமாவை பாதுகாப்புத்துறை அமைச்சர் சக் ஹேகல் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.

அந்த வாராந்தர சந்திப்பின்போது, இராக் மற்றும் சிரியா விவகாரம் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாக அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் தெரிவித்தார்.

இதற்கிடையே, அமெரிக்க கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதி மார்ட்டின் டெம்ப்ஸி செவ்வாய்க்கிழமை கூறுகையில், “”சிரியாவிலுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நடமாட்டம் குறித்து அமெரிக்காவுக்கு ஏற்கெனவே தெரியும். எனினும், அவர்கள் குறித்த கூடுதலான தகவல்கள் அவசியம் தேவைப்படுகிறது” என்று கூறினார்.

சிரியாவுக்கு ஆளில்லா உளவு விமானங்களை அனுப்ப அமெரிக்கா தயாராகி வருவதாக வெளியான செய்திகள் குறித்து கேட்டபோது, “”அந்தச் செய்திகளை நான் ஆமோதிக்கவும் மாட்டேன், மறுக்கவும் மாட்டேன்” என்று பதிலளித்தார்.