தமிழகத்தில் 186 இடங்களில் ஜாதி பிரச்னைகள் : விழிப்புணர்வு ஏற்படுத்த கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு

veethi nadagamதமிழகத்தில், 186 இடங்களில், ஜாதி ஈடுபாடு அதிகமாக உள்ளதால், இந்த இடங்களில், அதிகளவில் ஜாதி பிரச்னைகள் ஏற்படுவதாக, போலீஸ் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால், 186 இடங்களில், ‘சாதிகளற்ற சமுதாயம் படைப்போம்’ என்ற தலைப்பில், தொடர் கலை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதை, முதல்வர் ஜெயலலிதா, துவக்கி வைக்கிறார்.

பள்ளிக் கல்வி துறையும், காவல் துறையும் இணைந்து, இந்த கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து உள்ளன. இதற்காக, சென்னை லயோலா கல்லூரியின் கலை மற்றும் இலக்கியத் துறை பேராசிரியர், காளீஸ்வரன் தலைமையிலான கலைக்குழு, பல்வேறு தலைப்புகளில் கலை நிகழ்ச்சியை உருவாக்கி உள்ளது. மதுரை, விருதுநகர், திருவண்ணாமலை, சென்னை, தர்மபுரி உள்ளிட்ட சில மாவட்டங் களில் இருந்து, வீதி நாடக கலைஞர்கள், 96 பேர், 12 குழுக்களாக (ஒரு குழுவிற்கு, எட்டு பேர்) பிரிந்து, சர்ச்சைக்குரிய, 186 இடங்களுக்கு சென்று, கலை நிகழ்ச்சி நடத்த உள்ளனர். பேராசிரியர், காளீஸ்வரன் தலைமையில், 12 குழுக்களும், நேற்று, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், பயிற்சியில் ஈடுபட்டன. வளாகத்தில், ஒவ்வொரு குழுவும் தனித்தனியே பிரிந்து, பயிற்சியில் ஈடுபட்டன. சர்ச்சைக்குரிய, 186 இடங்களிலும், ஜாதி பிரச்னை ஏற்படுவதை தடுக்கும் வகையில், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, பல தலைப்புகளில், கலை நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர், குமரகுருதாசன் (மத்திய அரசு அலுவலர்) கூறியதாவது: தமிழகத்தில், அடிக்கடி, ஜாதி பிரச்னைகள் வெடிக்கும் இடங்களை, காவல் துறை கண்டுபிடித்துள்ளது. மாவட்ட வாரியாக, இந்த இடங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 186 இடங்களில், ஜாதி ஈடுபாடு அதிகமாக இருப்பதாகவும், இதன் காரணமாக, இந்த இடங்களில், ஜாதி பிரச்னைகள் ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், இந்த 186 இடங்கள் தான், எங்களது இலக்கு. இந்த இடங்களுக்கு சென்று, ஜாதி மறுப்பு திருமணம், கல்விக்காக, தமிழக அரசு வழங்கும் இலவச திட்டங்கள் உள்ளிட்ட பல கருத்துகளை, கலை நிகழ்ச்சி வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். வீதி நாடகம், பாட்டு, தப்பாட்டம், கோலாட்டம், நாடகம் உள்ளிட்ட பல வகைகளில், கலை நிகழ்ச்சி நடக்கும்.

இவ்வாறு, குமரகுருதாசன் கூறினார்.

பேராசிரியர், காளீஸ்வரன் கூறுகையில், ”ஜாதியை உயர்வாக நினைக்கும் பண்ணையார், விபத்தில் சிக்கி, உயிருக்கு போராடும் போது, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், பண்ணையாரை காப்பாற்றுவது போன்ற நாடகம் உட்பட, பல நிகழ்ச்சிகளை உருவாக்கி உள்ளோம். இதற்கு, கல்வித்துறை, காவல்துறை அதிகாரிகள் ஒப்புதல் வழங்கி உள்ளனர்,” என்றார். இந்நிகழ்ச்சியை, ஓரிரு நாளில், முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் துவக்கி வைப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கலைஞர்கள் அனைவரும், தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

TAGS: