கச்சத்தீவை மீட்கக்கோரிய வழக்கில் இரு நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாது: உச்ச நீதிமன்றம்

kachatheevuபுதுடெல்லி : கச்சத்தீவை மீட்கக்கோரிய வழக்கில் இரு நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்ததுடன், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு குறித்து மத்திய அரசிடம் மனு அளிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

பாக் ஜலசந்தி பகுதியில் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வருகிறார்கள். அவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குவதுடன், கைது செய்து சென்று சிறைகளில் அடைத்து வருகிறார்கள். தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்தும் வருகிறார்கள்.

இதனால், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பதுடன் உயிர் இழப்பும் ஏற்படுகிறது.இதையடுத்து, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக கச்சத்தீவை மீட்கக்கோரி அதிமுக எம்பி தம்பித் துரை மற்றும் திமுக முன்னாள் எம்பி ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சுப்பிரமணிய பிரசாத் வாதிடும்போது, ‘’தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்றால் அவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி, கைது செய்கிறார்கள். பாரம்பரியமான இடத்தில்தான் தமிழக மீனவர்கள் மீன் பிடித்து வருகிறார்கள்.

கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானது. 1974ம் ஆண்டு இலங்கையுடன் நடந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சத்தீவை மீட்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்றார்.அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான முகுல் ரோத்தகி வாதிடும்போது, ‘‘இந்த விவகாரம் இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னை. கச்சத்தீவை மீட்பதற்காக இலங்கை மீது போரா தொடுக்க முடியும்?’’ என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிபதிகள், ‘இருநாட்டு பிரச்னைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. தமிழக மீனவர்கள் பாதுகாப்பு குறித்து மத்திய அரசிடம் மனு கொடுக்கலாம். அதை மத்திய அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

TAGS: