பாஸில் ஹாடியைக் கவிழ்க்கும் முயற்சியா?

hadiபாஸ்  தலைவர்  அப்துல் ஹாடி ஆவாங்  அம்னோவுடன் சேர்ந்து  சிலாங்கூரில்  ஒற்றுமை  அரசை  அமைக்கும் முயற்சியில்  கமுக்கமாக  ஈடுபட்டார்  என்ற  செய்தி  பாஸ்  உறுப்பினர்களுக்கு அதிர்ச்சியைக்  கொடுத்து. அதன்  விளைவாக  அவருக்கு  கட்சியில்  எதிர்ப்பு  உருவாகியுள்ளது, இந்த எதிர்ப்பு வலுவடைந்து  அவரது  பதவிக்கே  முடிவு  கட்டிவிடலாம்.

ஹாடி,  சிலாங்கூர்  மந்திரி  புசார்  பதவியை  பிகேஆர்  துணைத்  தலைவர்  அஸ்மின்  அலிக்குக் கொடுத்து  அதன்வழி  அஸ்மினுக்கு  ஆதரவான  சட்டமன்ற  உறுப்பினர்களை பாஸ்  கட்சிக்குத்  தாவ வைத்து,  போதுமான  உறுப்பினர்கள்   சேர்ந்ததும்  அம்னோவுடன்  சேர்ந்து  ஒற்றுமை  அரசை  அமைக்க  திட்டமிட்டார்  என்பதை  அறிந்து பக்கத்தான்- ஆதரவு பாஸ் தலைவர்கள்  ஆத்திரமடைந்துள்ளனர்.

இத்திட்டம் அம்பலமானதும், ஹாடி, தம் அரசியல்  செயலாளர்  அஹ்மட்  சம்சுரி  மூலமாக  அதை  வன்மையாக  மறுத்தார்.

ஆனால்,  மத்திய  குழுக்  கூட்டத்தில்  அம்னோவுடன்  இணைந்து  பணியாற்ற  கமுக்கமாக  திட்டமிட்டதை  ஹாடி ஒப்புக்கொண்டார்  என  பாஸ்  வட்டாரங்கள்  மலேசியாகினியிடம்  தெரிவித்தன.

திங்கள்கிழமை  கூட்டத்தில், பல  தலைவர்கள்  ஹாடியுடன்  காரசாரமான  விவாதத்தில்  ஈடுபட்டதாகவும்,  இன்னும்  சிலர்  தலைவருடன்  பேசுவதையே  நிறுத்தி விட்டதாகவும்  கட்சி  வட்டாரங்கள்  தெரிவித்தன.